Published : 21 Nov 2014 11:37 AM
Last Updated : 21 Nov 2014 11:37 AM

திரையிசை: லிங்கா பாடல்கள் எப்படி?

ரஜினி - ரவிகுமார் - ரஹ்மான் கூட்டணியில் ஏற்கனவே ‘முத்து’, ‘படையப்பா’ ஆகிய படங்கள் வந்திருக்கின்றன. லிங்கா படத்தின் இசை ஆல்பத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நான்கு பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஒன்றை அவருடைய மகன் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார்.

‘ஓ நண்பா’ எனத் தொடங்கும் முதல் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆர்யன் தினேஷ் கனகரத்னம் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். ரஜினியின் அறிமுகப் பாடல் என்றாலே எஸ்.பி.பி.யின் குரல் கச்சிதமாகப் பொருந்திவிடுவதாக ரசிகர்களின் நினைக்கிறார்கள். ஆனால், ‘ஓ நண்பா...’ ரஜினியின் முந்தைய அறிமுகப் பாடல்களிலிருந்து நிறைய வித்தியாசப்பட்டிருக்கிறது. 80களில் இடம்பெறும் ‘க்ளப்’வகையறாவைப் போல் இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் ரஹ்மான். ஆனாலும் வைரமுத்துவின் வரிகள் ரஜினிக்கே உரிய பஞ்ச்கள் நிறைந்த தத்துவ அறிவுரையை அவரது ரசிகர்களுக்கு வழங்குகிறது. இந்தப் பாடல் லேட் பிக் அப் ஆகலாம்.

ஸ்ரீனிவாஸ், அதிதி பால் பாடியிருக்கும் ‘என் மன்னவா’ என்று தொடங்கும் இரண்டாவது பாடல் ‘லிங்கேஸ்வரன்’ கதாபாத்திரத்தின் காலகட்டத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட்டில் ரஜினியும், சோனாக்ஷி சின்ஹாவும் இடம்பெறும் பாடலாகப் படத்தில் இடம்பெறுகிறதாம். அதிதி பாலின் குழைவான குரலில் கர்னாடிக், இந்துஸ்தானி இரண்டும் கலந்து உருவாக்கப்பட்ட மெலடியான டூயட் பாடலாக வசீகரிக்கிறது. பாடலைக் கேட்கும்போதே பாடலில் எத்தனை பிரம்மாண்டமாக இயக்குநர் காட்சியை வடிவமைத்திருப்பார் என்பதை யோசிக்க முடிகிறது.

‘இந்தியனே வா...’ என்ற மூன்றாவது பாடலைப் பாடி அசத்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘ஐ’, ‘காவியத்தலைவன்’ பட ஆல்பங்களில் குரல் கொடுக்காமல் ரசிகர்களை ஏமாற்றிய ரஹ்மான் ‘லிங்கா’வில் அந்தக் குறையைப் போக்கிவிட்டார். கதாநாயகனின் லட்சியத்துக்காக மக்களை ஒன்றிணைக்கும் இந்தப் பாடலில் உணர்ச்சிகரமான வரிகளைக் கொடுத்திருக்கிறார் வைரமுத்து. ‘‘சேர்வோமா... ஓர் ஜாதி ஆவோமா...!’’ என்ற வரிகளைப் பாடும்போது ரஹ்மானின் குரலில் துள்ளலும் துடிப்பும்.

‘மோனோ கேசோலினா’ எனத் தொடங்கும் மதன் கார்க்கி எழுதிய நான்காவது பாடலை மனோ, நீத்து மோகன், தன்வி ஷா ஆகிய மூன்று பேர் பாடியிருக்கிறார்கள். உற்சாகம் தெறிக்கும் மனோவின் குரலை மீட்டு வந்திருக்கிறார் ரஹ்மான்.

பியானோ, எலக்ட்ரிக் கிடார் போன்ற மேற்கத்திய இசைக் கருவிகளையும் நாகஸ்வரம், தவில் போன்ற பாரம்பரிய வாத்தியங்களையும் கைகோக்க வைத்து ஒரு கலவையான ஃப்யூஷன் பிஜிஎம்மில் கலக்கி எடுத்திருக்கிறார். இளைஞர்களுக்கு இந்த ‘மோனோ கேசோலினோ’ சட்டென்று பிடித்துவிடும். இந்தப் பாடலில் கௌபாய் ஸ்டைலில் ரஜினியும், அனுஷ்காவும் தோன்றி ரொமான்ஸ் விருந்து படைக்க இருக்கிறார்களாம்.

ஹரிசரண் பாடியிருக்கும் ‘உண்மை ஒருநாள் வெல்லும்’ நாயகன் எதிரிகளால் சந்திக்கும் தடையையும், அதனால் அவருக்கு விளைந்த சோகத்தையும் பிரதிபலிக்கும் பாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘காவியத் தலைவன்’ ஆல்பத்தின் பெரும்பாலான பாடல்களைப் பாடியிருக்கும் ஹரிசரண் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். வரிகள் தெளிவாகக் கேட்கும்படி மெல்லிய இசையைப் பாடல் முழுவதும் பரவவிட்டிருக்கிறார் ரஹ்மான்.

பெரும்பாலான பாடல்கள் கதைக்கேற்ற தன்மையில் உருவாக்கப்பட்டிருப்பதை லிங்கா ஆல்பம் உணர்த்துகிறது. ரஜினி ரசிகர்கள், ரஹ்மான் ரசிகர்கள் ஆகிய இரண்டு தரப்பையும் திருப்தி செய்யும் விதமாகவே லிங்காவின் பாடல்கள் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x