Published : 17 Nov 2014 12:21 PM
Last Updated : 17 Nov 2014 12:21 PM

பெண்ணினத்துக்கே நேர்ந்த அவமானம்

நவம்பர் 09 தேதியிட்ட பெண் இன்று இணைப்பிதழில் 2010-ல் நடந்த ஒரு பாலியல் வன்முறை மற்றும் கொலை தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மற்றும் நீதியரசர்களின் குறிப்புகளைக் குறித்து எழுதியிருந்தோம். ‘இறந்த பெண்மணிக்கு எப்போதோ மாதவிடாய் சுழற்சி முற்றுப் பெற்றிருக்கும் வயது ஆகியிருந்தது. எனவே அவர் விருப்பத்திற்கு மாறாகவேகூட, அவரோடு உறவுகொள்ள முயன்றிருந்தாலும், அது பாலியல் வன்முறை ஆகாது’ என்ற நீதிபதிகளின் குறிப்பைப் பற்றி பேசியிருந்தோம். அதற்கு வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில இங்கே...

பெண்கள் மீதான வன்முறை தொடர்புடைய வழக்குகளில் இனி பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகள் மட்டுமே நியாயம் வழங்க முடியும் என்ற நிலை உருவாகிவிடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இனியும் பெண்ணுடல் சார்ந்த வன்கொடுமைகளுக்கு ஆண்களிடம் இருந்து சரியான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் வேதனையும் அவமானமும்தான் மிஞ்சும் போலிருக்கிறது. சிறப்பு நீதிமன்றங்கள், துரிதமான தீர்ப்பு போன்றவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

- சு. சத்யவீணா, ரெட்டியாபட்டி.

மனுநீதி காலத்தில் இருந்தே பெண் என்பவளை இரண்டாம்பட்சமாக்கி, ஓரவஞ்சனையான நியதிகளும் தீர்ப்புகளும்தானே நடைமுறைப்படுத்தப்படுகின்றன? முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பாலியல் வன்முறைகள் இப்போது எங்கெங்கும் நடைபெறுகிறது. ஆறு வயதோ அறுபது வயதோ அதெல்லாம் அந்தக் காமுகர்களுக்குத் தேவையில்லை. ஆனால் அதிலும் பெண்ணையே குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

- ஜே.சி. ஜெரினாகாந்த், சென்னை.

மாதவிடாய் நின்றுவிட்டால் அவள் பெண் இல்லையா? அந்தப் பெண்ணே இறந்துபோன பிறகு, அவள் தரப்பு நியாயத்தை யார் சொல்வார்கள்? தன் தாய் வயதுடைய பெண்ணிடம் ஒருவன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதே மன்னிக்க முடியாத தவறு எனும்போது, தன் செய்கையால் அவர் இறந்துபோவார் என்று அவன் அறிந்திருக்கவில்லை என்று அந்தக் குற்றத்தை அனுமதிப்பது போல் சொல்வது எத்தனை பெரிய கொடுமை? இப்படியொரு கருத்தைச் சொல்லியிருப்பதன் மூலம் பெண்ணினத்தையே அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

- எஸ். மங்கையர்க்கரசி, நெய்வேலி.

பெண்களை இன்னும் போகப் பொருளாக, வெறும் சதைப் பிண்டமாக மட்டுமே பார்க்கும் மனப்போக்கு, படித்தவர்கள்(?) என்று சொல்லப்படும் ஆண்களிடம் மாறவேயில்லை. பாலியல் வன்முறை என்பதற்கு என்ன விதமான அளவுகோலை இந்த ஆணாதிக்கச் சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறது? கற்பு, பண்பாடு, ஒழுக்கம் என்றெல்லாம் கலாசாரத்தைக் கட்டிக்காக்கும் காவலர்கள் (கேவலர்கள்) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்ணிடமும், இன்னும் அது ஆரம்பிக்காத பிஞ்சுக் குழந்தையிடமும் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டால் அது குற்றம் ஆகாதா? இந்த அதிர்ச்சிகரமான தீர்ப்பைச் சொல்லியிருப்பவர்கள் உண்மையிலேயே நீதியைப் பற்றி அறிந்தவர்களா?

கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு இல்லையா? பாலியல் வன்முறை என்பதை நிரூபிக்க என்ன விதமான தடயங்களை இந்த நீதியரசர்கள் எதிர்பார்க்கிறார்கள்? காட்டுமிராண்டித்தனமான ஒரு காலகட்டத்துக்கு இந்தச் சமூகம் சென்று கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த விஷயத்தில் குற்றம் செய்தவர்களைவிட, அவர்கள் செய்தது குற்றம் இல்லை என்று வாதிடுபவர்களுக்குத்தான் தண்டனை அதிகம் தரவேண்டும். நமது சட்டங்களை முதலில் ஓட்டைகள் ஏதும் இல்லாமல் நேர்மையான முறையில் மாற்றவேண்டும்.

- தேஜஸ், காளப்பட்டி, கோவை.

ஆண்கள் செய்யும் பல கொடுமைகளைப் பெண்கள் வெளியே சொல்லவே பயப்படுகிறார்கள். இதற்குக் காரணம் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக இருப்பதுதான். ஒரு தாய் தன் மகனுக்குப் பெண்ணின் பெருமையைச் சொல்லி வளர்க்காததே இது போன்ற பாலியல் வன்முறைகளுக்குக் காரணம். அதிலும் 65 வயதான பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டும், அதனைச் செய்தவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு சொல்வதை என்னவென்று சொல்வது?

- உஷா முத்துராமன், திருநகர்.

பாலியல் உறவுக்கு உடலளவில் தகுதியானவள் மட்டுமே பெண் என்பதாகக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட உச்சபட்ச அநீதி. இதன் தாக்கம் பூப்பெய்தாத பிஞ்சு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்தவருக்கும் சாதகமாக அமையக்கூடிய அபாயமும் இருக்கிறது. விலங்குகள்கூடப் பருவமடையாத விலங்குடனோ, வயது முதிர்ந்த விலங்குடனோ உறவு கொள்வதில்லை.

விலங்கைவிடக் கேவலமான செய்கையில் ஈடுபட்ட ஒருவனை நியாயவாதி என வாதாடுபவர், அதனை நியாயம் என முடிவு செய்து தீர்ப்புக் கூறுபவர் இவர்களை காணும் போது நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்து போகிறது. சட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக இருக்க வேண்டும். அதற்கு உடலியல் மாற்றம்கூடத் தடையாய் சொல்லப்படும் என்பது உறுதியாகும் போது நிச்சயம் சட்டங்கள் பெண்களுக்கு எதிரானது என்றே தோன்றுகிறது.

-ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

குற்றங்கள் செய்வதிலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலம் தண்டனைக்கு ஆளாகாமல் தப்பிப்பதிலும் மட்டுமே இங்கு ஜனநாயகம் செயல்படுகிறது . அதிலும் சமீபகாலமாக அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள், ஒழுக்கமான இந்தியப் பண்பாட்டின் மீது கடும் கறையைப் படியவைப்பது கண்டனத்துக்குரியது. பச்சிளங்குழந்தை முதல் வயது முதிர்ந்த பெண் வரை காமுகர்களின் பசிக்கு இரையாகும் கொடுமையைத் தடுக்கக் கடுமையான சட்டங்களும் , தண்டனைகளும் அவசியம். சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய முயற்சி எடுக்காமல் குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்து மேலும் குற்றங்களை செய்யத் தூண்டிவிடும் இது போன்ற தீர்ப்புகள் பொதுமக்களால் கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியவை.

- சுபா தியாகராஜன், சேலம் - 9.

பெண் குழந்தைகளைப் பெற்ற வர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது இந்தத் தீர்ப்பு. மீண்டும் பெண்களை வீட்டில் பூட்டி வைக்கும் காலம் தொடங்கி விடுமோ என்று பயமாக இருக்கிறது. தீர்ப்பு திருத்தப்படவில்லையென்றால் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும். எந்தச் சட்டம் தண்டிக்கும் என நினைத்தோமோ, அதே சட்டம் ஒரு குற்றவாளியை விடுவித்தால் பாதிக்கப் பட்டவர்கள் யாரிடம் முறையிடுவார்கள்?

- மு.க.இப்ராஹிம், வேம்பார், தூத்துக்குடி.

‘வன்முறை மனதளவில் மட்டுமே’ என்ற ஆங்கில வாசகம் ஒன்று உண்டு. வன்முறையின் இந்த வரையறையை ஒரு தனி மனிதன் உணரும்போது, பொதுவெளியில் மீறல்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் வக்கிரம் நிறைந்த இவ்வுலகில் இது சாத்தியமல்ல.

சாட்சியங்களின் அடிப்படையில் நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பு குறித்து எவரும் மறுதீர்ப்பு வழங்குவதற்கில்லை. ஆனாலும் சமீப காலமாக நீதித்துறை மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பெண்ணுலகத்தின் மீது வன்முறை என்னும் அம்பு பாயும்போது, நீதித்துறை தன் வாயை , செவிகளை, விழிகளை இறுக மூடிக்கொள்ளுமோ என்று பயமாக இருக்கிறது.

தினமும் செய்தித்தாள்களைப் படிக்கும்போது, பெண் குழந்தைகள், இளம் பெண்கள் மற்றும் மூதாட்டிகள் ஆகியோரும் ‘சக மனுஷி’ களே என்பதைக் கருத்தில்கொண்டு தீர்க்கமான, கடினமான சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கேற்ற தருணமிது. ‘பலவீனப் பாண்டம்’ என்று கருதப்படும் பெண்ணினம் பாதிப்புக்குள்ளாகும்போது காவல்துறையும் நீதித்துறையுமே அவர்களுக்குக் கடைசிப் புகலிடம். பெண்களுக்கு இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அவர்களுக்கு ஏற்படும் காயத்தை மன்னித்தாலும் , அவமதிப்பையும் புறக்கணிப்பையும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

- சந்திரா மனோகரன், ஈரோடு .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x