Last Updated : 17 Feb, 2017 10:06 AM

 

Published : 17 Feb 2017 10:06 AM
Last Updated : 17 Feb 2017 10:06 AM

ரஜினி படத்துக்கு ‘நோ’ சொன்னேன்! - கே.வி.ஆனந்த் பேட்டி

‘‘டேவிட் - கோலியாத் கதையில் எப்படி அரக்கன் கோலியாத்தை ஆடு மேய்க்கும் சிறுவன் டேவிட் உண்டிவில்னு சொல்ற கவண் மூலம் வீழ்த்துகிறானோ, அந்தமாதிரி ஒரு பெரிய கார்ப்பரேட் சக்தியைச் சாதாரண ஆள் அடிக்கிறான். இதுதான் ‘கவண்’ படத்தோட கரு!’’ என்று எடுத்ததுமே படத்தின் கதைக் கருவைச் சொல்லி அசரடித்தபடி பேச ஆரம்பித்தார் இயக்குநர் கே.வி.ஆனந்த்…

‘கவண்’ படத்தைத் தொடங்குவதற்கு முன் தெலுங்கில் படம் இயக்குவதாகச் செய்தி வெளியானதே?

எப்போதுமே ஹீரோயிசம், ‘காமன் மேன்’ என்று சொல்வோமே அந்த மாதிரி ஒருத்தர்கிட்ட இருந்து வரணும். எதிரி தாக்கினால் ஹீரோ உடனே திருப்பி அடிக்கக் கூடாது. இந்தக் ‘கவண்’ கதை அப்படித்தான். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் கையாளும் நாயகன் வேண்டும். இந்தக் கதை தெலுங்கு சினிமாவுக்குப் பொருந்தாது. ஆனால் அனேகன் முடித்திருந்த நேரத்தில் ‘எங்கக் கிட்ட கதை இருக்கு. டைரக்‌ட் பண்ணினா போதும், வாங்க’ என்று அழைத்தனர். எனக்கு அது ஒத்து வராது. ஒவ்வொரு விஷயத்துலயும் நம்ம பங்களிப்பு இருந்தே ஆகணும். அப்பத்தான் அது என் படம்.

விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், பாண்டியராஜன், டி.ராஜேந்தர், விக்ராந்த் என்று நட்சத்திரத் தேர்வு வசீகரிக்கிறதே?

ஹீரோ இயல்பா இருக்கணும். அதே நேரத்துக்கு நல்ல ஹீரோவாகவும் இருக்கணும். அதுக்கு விஜய்சேதுபதி சரியா இருப்பார்னு தொணுச்சு. ஹீரோயின் புதுசா இருக்கணும், கொஞ்சம் தெரிஞ்ச முகமாக இருக்கணும். ஹீரோ, ஹீரோயினுக்குள்ள ஊடலும் வருது. மடோனா நினைவுக்கு வந்தாங்க. ‘காதலும் கடந்து போகும்’ படத்துல இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்காங்க. நல்ல புரிதல் இருக்கும். அடுத்து எதையும் துணிவோடு எதிர்கொள்கிற ஒரு ஆள், அவர் விஜய் சேதுபதியைவிடக் கொஞ்சம் சீனியரா இருக்கணும். டி.ஆர். நினைவுக்கு வந்தார். அடுத்து விக்ராந்த், பாண்டியராஜன்னு எல்லோருக்கும் பொருத்தமான கதாபாத்திரங்கள். அதுல அவங்க ஒவ்வொருத்தரோட பங்களிப்பையும் பார்க்கும்போது இவங்கதான் சரின்னு ஆடியன்ஸ் சொல்ற விதத்துல இருக்கும்.

உங்கள் விரும்பத்துக்குரிய ஹாரீஸ் ஜெயராஜிலிருந்து மாறிவிட்டீர்களே?

‘கவண்’ பெரிய படமாக இருந்தாலும் இதை மூணு மாதத்துல முடிக்கணும்னு திட்டமிட்டோம். நானும், ஹாரீஸும் சேர்ந்து வேலையில இறங்கினா நிறைய கால அவகாசம் தேவைப்படும். இந்த மூணு மாத திட்டமெல்லாம் அதுக்கு சரியா இருக்காது. அடுத்ததா, ஒரு பிரேக்கும் தேவைப்பட்டுச்சு. ‘கவண்’ படத்தோட முதல் சிங்கிள் டிராக் பாட்டை ஹாரீஸ்தான் வெளியிட்டார். எங்களுக்குள் நல்ல நட்பு எப்போதும் உண்டு. அதேமாதிரி, ஹிப் ஆப் ஆதியும் நான் எதிர்பார்த்த இசையில் எந்தக் குறையும் வைக்கல. சமீபத்துல ரிலீஸான ‘ஆக்ஸிஜன்’ பாட்டு நல்ல டிரெண்ட்டை உருவாக்கியிருக்கு.

அஜித்தும் நீங்களும் இணையப் போவதாக தகவல் வெளியானதே?

இது தொடர்பா நாங்க சந்திக்கவே இல்லை. அஜித்கூட படம் பண்ணும்போது அதுக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். முதலில் அவருக்கு ஏற்ற மாதிரி கதை தயார் செய்யணும்.

‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ திரையரங்கத்துக்கு வருவது குறைந்துபோனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

இப்போது திரும்பத் திரும்பப் படம் பார்க்கணும்னு விரும்புறவங்க செல்போன்லயும், திருட்டு விடிசியிலயும் பார்த்துடுறாங்க. ஜியோ மாதிரி இலவச வசதிகளோடு இணையத்தை அணுகும்போது எல்லாமே ஈஸியாகக் கிடைத்துவிடுகிறது. 10 நிமிஷத்துல ஒரு படத்தை டவுன்லோட் செய்துவிடுகிற டெக்னாலஜி வந்தாச்சு. செல்போன் வழியே சிரமமே இல்லாமல் படம் பார்க்கிறார்கள். இதையெல்லாம் மீறி அவங்களை தியேட்டருக்குக் கொண்டுவரும் படங்களை எடுப்பது நம் சாமர்த்தியம்தான்.

ரஜினி நடித்துவரும் ‘2.0‘ படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற முதலில் ஷங்கர் உங்களை அழைத்தாராமே?

ஆமாம். ‘அனேகன்’ முடிந்ததுமே விஷயத்தைச் சொன்னார். ‘ஆறு மாதத்தில் முடித்துவிடுவீர்களா?’ என்று கேட்டேன். ‘ஆரம்பிக்கிறதுக்கே ஆறு மாதம் ஆகும்’னு சொன்னார். 3டி, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்னு நிறைய வேலை இருக்குற படம். கண்டிப்பா வருஷம் ஓடிடும்னு தோணுச்சு. ஷங்கர்கிட்ட, ‘கதை ரெடி பண்ணிட்டேன். உடனே பண்ணிடுன்னு மனசு சொல்லுது’ன்னு சொன்னேன். அவரும், ‘ஓ.கே அடுத்து பார்த்துக்கலாம்’னு சொன்னார். மலையாள இயக்குநர் ரோஸன்கூட சமீபத்துல கேமராமேனாக அழைத்தார். இந்திப் படவுலகுல நான் இயக்குநரானதே தெரியாம இப்பவும் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. ‘கவண்’ முடிச்சுட்டு அடுத்த படத்துக்கான வேலையைத் தொடங்க ஆறு, ஏழு மாதங்கள் ஆகும். அதுக்கு இடையில ஒளிப்பதிவுக்கு ஸ்கோப் இருக்குற கதையில வேலை பார்க்கணும்னு இருக்கேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x