Published : 05 Mar 2017 01:15 PM
Last Updated : 05 Mar 2017 01:15 PM

பேட்டரி வாடகை கார் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

வாகனபுகை சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடாக உருவாகி வருவதன் எதிரொலியாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்குத் தடை விதிப் பது மற்றும் பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. இப்போது பெருகிவரும் பேட்டரி கார் உபயோகத்தை மேலும் அதிகரிக்க மத்திய அரசு முனைப்பாக உள்ளது. அதிலும் குறிப்பாக பேட்டரியில் இயங்கும் கார்களை வாடகைக் கார் சேவை யில் ஈடுபடுத்த தீவிரம் காட்டப்படுகிறது.

இதற்காக பேட்டரி கார்களை வாடகைக் கார் சேவையில் ஈடுபடுத்தி னால் அதற்கு பர்மிட் அவசியமில்லை என்ற சலுகையை அளிப்பது குறித்தும் அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. முதல் கட்டமாக செயலி மூலமான வாடகைக் கார் சேவையில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனத்தின் மூலம் 300 பேட்டரி கார்களை செயல்படுத்த மத்திய அரசு முயன்றுள்ளது. சோதனை ரீதியிலான இந்த முயற்சியை நாகபுரியில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாடகைக் கார் சேவையில் பேட்டரி கார்களை அறிமுகப்படுத்த பர்மிட் தேவையில்லை என்பன போன்ற பல சலுகைகளை அளிப்பதன் மூலமே மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. நாகபுரியில் மேற்கொள்ளப்படும் சோதனை ரீதியிலான இந்த முயற்சியைத் தொடர்ந்து இதை பிற நகரங்களுக்கு விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.

ஓலா நிறுவனத்தில் அதிக முதலீடு செய்துள்ள சாஃப்ட்பேங் குழுமத்தின் தலைவர் மஸாயோஷி சன், இத்தகைய சேவையை இந்தியாவில் தொடங்குவதில் ஆர்வமாக உள்ளதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பேட்டரியில் இயங்கும் வாடகைக் கார்களை செயல் படுத்துவதன் மூலம் சுற்றுச் சூழல் மாசை குறைக்க முடியும் என்று நிதி ஆயோக் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதை செயல்படுத்தும் விதமாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 300 பேட்டரி கார்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேட்டரிகாரை இந்தியாவின் எந்த நகரில் வேண்டுமானாலும் இயக்கலாம். ஓலா விரும்பும் நகரில் இதைச் செயல்படுத்தலாம். இதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப் படும் என்று மத்திய தரைவழி போக்கு வரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது இத்திட்டத்தில் மத்திய அரசு காட்டிவரும் தீவிரத் தன்மையை உணர்த்துகிறது.

பேட்டரி கார்களை சார்ஜ் செய்வ தற்காக 300 சார்ஜிங் மையங்களை ஏற்படுத்தவும் நிதின் கட்கரி சம்மதித் துள்ளார். அமைச்சர் நிதின் கட்கரியின் தொகுதி நாகபுரி என்பதால் முதல் கட்டமாக அங்கு இத்தகைய சேவை தொடங்கப்படுவதாகத் தெரிகிறது. இருப்பினும் பேட்டரி காரில் நிதின் கட்கரிக்கு தனிப்பட்ட ரீதியில் அதிக ஆர்வம் உண்டு. சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது டெஸ்லா கார் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்ட கட்கரி, இந்தியாவில் ஆலை தொடங்கு மாறு அந்நிறுவனத் தலைவர் எலன் மஸ்கிற்கு அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்துக்கு காண்ட்லா துறைமுகம் அருகே நிலம் ஒதுக்கித் தரவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

டெஸ்லா நிறுவனம் தனது பேட்டரி காரை இந்த ஆண்டு கோடைக் காலத்தில் அறிமுகம் செய்யப் போவ தாக நிறுவனத் தலைவர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார். இருப்பினும், இந்தியாவில் ஆலை தொடங்குவது தொடர்பாக அவர் உறுதியான தகவலை வெளியிடவில்லை. வாடகைக் கார் இயக்குவதாக இருந்தால் அதற்கு பல்வேறு சட்ட திட்டங்கள் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக பேட்டரி கார்களுக்கான பர்மிட் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நீக்க அரசு தயாராக உள்ளது. மேலும் பொது போக்குவரத்து வாகனமான பஸ் உள்ளிட்டவையும் பேட்டரியில் இயங்கினால் அதை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கட்கரி தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த பஸ்களுக்கு தனி பர்மிட், பிற வாகனங்களுக்கு தனி பர்மிட், சரக்கு வாகனங்களுக்கென தனி பர்மிட், மேக்ஸி கேப், ரேடியோ டாக்ஸி, இந்தியா முழுமைக்குமான பர்மிட் என பல உண்டு. இத்தகைய பர்மிட் பெறு வது அதிக நேரம் அல்லது சில நாள்கள் பிடிக்கும் விஷயமாகும். அதேபோல இவற்றை புதுப்பிப்பதற்கும் கால நேரம் அதிகமாகும். இத்தகைய கால விரயம் ஏதுமில்லாமல், பர்மிட் தேவையில்லை என்கிற நிலையை பேட்டரி வாகனங்களுக்கு மட்டும் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல மாநில அரசுகள் தங்களிடம் உள்ள பழைய பஸ்களுக்குப் பதிலாக புதிய பஸ்கள் வாங்கும்போது அவை அனைத்தும் பேட்டரியில் இயங்கும் வகையிலானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கட்கரி குறிப்பிட்டார்.

பேட்டரி வாகனங்களுக்கு அதிக சலுகை அளிப்பது தொடர்பாக நிதி அமைச்சகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார் கட்கரி. இத்தகைய வாகனங்களுக்கு மானிய சலுகை அளிப்பதன் மூலம் இதன் விற்பனையை அதிகரிக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார் கட்கரி. அரசு மானியம் அளிக்கும்போது பேட்டரி வாகனங்களின் விலை குறையும். இது அதிக அளவில் பயன்படுத்தப்படும்போது உற்பத்தி விலையே குறையும். இதனால் இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகன உற்பத்தி நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக பேட்டரி கார் தயாரிப்பில் இறங்கக் கூடும்.

அனைத்துமே அரசு அளிக்கும் சலுகையைப் பொறுத்தே அமையும். மத்திய அரசு பேட்டரி வாகன போக்குவரத்தை அதிகரிக்க தீவிரம் காட்டுவதால் இத்தகைய வாகனங்களுக்கு பிரகாச மான எதிர்காலம் உள்ளது. புகை மாசு குறைந்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி பிறக்கும் என நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x