Last Updated : 01 Feb, 2014 12:00 AM

 

Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM

டோல்கியென் சுற்றுலாக்கள்

இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் "டோல்கியென் டூரிஸம்’’ என்ற வார்த்தைகள் பிரபலமாகிவருகின்றன. நியூசிலாந்தில் தொடங்கியது இதற்கான அஸ்திவாரம். சுற்றுச் சுழல் ஆர்வலர்களைக் கவலைப்பட வைத்திருக்கிறது இந்த வகைச் சுற்றுலாக்கள்.

பசுமையின் வனப்பு நிறைந்த நாடு நியூசிலாந்து. இவற்றைக் கண்டு ரசிப்பதற்காக அங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் உண்டு. சமீபகாலமாக இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. திடீரென அங்குள்ள சுற்றுலாத் தளங்கள் அதிகமாகி விட்டதுதான் காரணம். எப்படி அதிகமானது? புதிய அற்புதக் கட்டுமானங்களா? சமீபத்தில் திறக்கப்பட்ட சரணாலயங்களா? இவை எதுவும் இல்லை. ஓர் ஆங்கிலத் திரைப்படம் தொடக்கி வைத்த விந்தைதான் இது.

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான தி லார்டு ஆஃப் தி ரிங்ஸின் படப்பிடிப்பு நியூசிலாந்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு எங்கெல்லாம் அந்தப் படப்பிடிப்பு நடந்தனவோ, அங்கெல்லாம் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரத் தொடங்கினர். உதாரணமாக மெளன்ட் ஒலிம்பஸ். நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் ஒரு மூலையில் இருக்கும் இந்த மலையின் ஒரு பகுதி கஹுரங்கி தேசியப் பூங்காவில் உள்ளது. அங்குள்ள பாறைகளில் இயற்கை அற்புதமான வடிவங்களைச் செதுக்கியுள்ளது. இதைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் திரைப்படம் வெளியான பிறகு பல மடங்கு அதிகரித்தது.

அதே போல் அந்தப் படத்தில் வரும் குள்ளர்கள் தங்கும் காடாக க்வின்ஸ் டவுனில் உள்ள ஒரு கடற்கரையை ஒட்டிய காடு சித்தரிக்கப்பட்டது. இங்கு முன்பு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகச் சொற்பம். ஆனால் இத்திரைப்படம் வெளியான பிறகு அந்த வனப்பகுதிக்கு நிறைய பேர் வரத் தொடங்கி விட்டனர்.

மாசுபடாத இயற்கைச் சுழல் மனிதர்களால் மாசுபடத் தொடங்கிவிட்டது என்பது மட்டுமல்ல. வேறொரு காரணமும் சுற்றுச் சுழல் ஆர்வலர்களைக் கவலைப்பட வைத்திருக்கிறது. பொதுஇடங்களில் படப்பிடிப்பு நடத்தும்போது படக்குழுவினர் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். படப்பிடிப்புத் தளத்தை முன்பு போலவே ஆக்கித் தர வேண்டும் என்னும் நிபந்தனை அதில் இடம் பெற்றிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் படப்பிடிப்புக்குப் பிறகு அங்குப் போடப்பட்ட செட், பூங்காவில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை நீக்கிப் பழைய நிலைக் குக் கொண்டுவராமல் அப்படியே விட்டுச் செல்வதை வழக்கமாக்கி வருகின்றனர். இதை இந்த அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பதைவிட மறைமுகமாக ஊக்குவிக்கிறது என்றே சொல்லலாம். காரணம் அவை நீக்கப்படாமல் இருந்தால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. அரசுக்கு வருமானமும் கொழிக்கிறது.

தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் தலச் சுற்றுலாக்கள் என்றே டிராவல் நிறுவனங்கள் நடத்தத் தொடங்கிவிட்டன. படப்பிடிப்பு நடந்த பகுதிகளில் அந்தக் கதாபாத்திரங்கள் அணிந்த உடையைப் போன்றே வாடகைக்குக் கிடைக்கின்றன. அவற்றை அணிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சமீபத்தில் திரையை எட்டிய ‘தி ஹாப்பிட்’ (The Hobbit) திரைப் படத்தின் பல காட்சிகளும்கூட நியூசி லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. இதனால் தனது சுற்றுலா வருமானம் மேலும் அதிகரிக்குமென்று கருத்துத் தெரிவித்திருக்கினறனர் நியூசி லாந்தின் பொருளாதார நிபுணர்கள்.

அது சரி, இதுபோன்ற சுற்று லாக்களை டோல்கியென் டூரிஸம் என்று ஏன் கூற வேண்டும்? தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் கதையை எழுதியவரின் பெயர் டோல்கியென் எனவேதான் அந்தப் பெயர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x