Published : 03 Jun 2016 12:30 PM
Last Updated : 03 Jun 2016 12:30 PM

பொருள்தனை போற்று! 19 :என்ன பண்ணச் சொல்றீங்க...?

“உங்க நெலைமையை நெனைச்சா மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு.

நீங்க கேட்டுட்டீங்க, நான் கேட்கலை. அவ்வளவுதான்.”

“அதுக்கில்லை, ரெண்டு மாசமா வாடகை குடுக்கலை. இந்த மாசமும் குடுக்கலைன்னா

காலிபண்ணச் சொல்லிடுவாங்க, அதான், ஒரு ரெண்டாயிரம் இருந்தா...”

“புரியுது. என்ன பிரச்சினைன்னா, எனக்கும் நிறைய கடன் ஆயிடிச்சி. பாருங்க,

கையில பத்தாயிரத்தை வச்சிக்கிட்டு மாசம் முழுக்க ஓட்ட வேண்டி இருக்கு”

இவர் சொல்வது உண்மைதான். இவருடைய சம்பளத்தில் 90%, கடனைக் கட்டுவதிலேயே போய்விடுகிறது. ஆனாலும்..? ஏழ்மையே போ! ‘ஏழ்மையை ஒழிப்போம்’. ஏதோ அரசியல் தலைவரின் குரலாகக் கேட்கிறதா...? ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் தாரக மந்திரம் இது. இந்த நிறுவனம்...? வளரும் நாடுகளில், மிக அதிக விமர்சனங்கள், கண்டனங்களுக்கு உள்ளாகும் நிறுவனம் இதுதான். உலக வங்கி! வளரும் நாடுகளின் மூலதனத் திட்டங்களில் உதவும் சர்வதேச நிதி நிறுவனம்.

வந்தாரய்யா!

அமெரிக்கா, வாஷிங்டனில் தலைமை அலுவலகம் 1944 ஜூலையில் தோன்றியது. 1946 ஜூன் மாதம் செயல்பாடுகளைத் தொடக்கியது. ‘ஏழ்மையற்ற உலகத்துக்காக உழைத்தல்’ உலக வங்கியின் முக்கிய லட்சியம். அந்நிய முதலீடு, சர்வதேச வர்த்தகம், மூலதன நிதியைப் பெருக்குதல் - ஆகியவை இதர குறிக்கோள்கள். இந்த வங்கியில் 188 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உலக வங்கியிடம் கடன் பெற்றுள்ளன; கடன்பட்டுள்ளன.

“அதுதான் தெரியுமே.’ உலகவங்கி, சர்தேச நிதியம் (IMF - International Monetary Fund) ஆகிய இவைதானே நமது நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கின்றன...?”

சரி. ஓர் எளிய கேள்வி. சர்வதேச நிதியத்திடம் இந்தியாவுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது...? ஊகியுங்கள். உருப்படிதானா...? உலக வங்கியின் கடன்கள் பெரும்பாலும், கட்டுமானப் பணிகள் மீதே வழங்கப்படுகின்றன. ஊதாரித்தனமான செலவுகளுக்கு உலக வங்கி கடன் தருவதில்லை.

வருவாய் ஈட்டும் ஆற்றல் (income generating capacity) இருக்கிறதா என்று ஆய்வு செய்து, அத்தகைய திட்டங்களுக்கு மட்டுமே உலக வங்கி, கடன் தருகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது...? ‘நாம் எல்லாரும் கடன்காரங்கதான்... ஒரு குழந்தை பொறக்கும்போதே, இவ்வளவு கடனோடதான் பொறக்குது...’ என்றெல்லாம் வசனம் பேசுகிறார்களே...

அது உண்மையின் ஒரு பக்கம் மட்டுமே. இந்தக் கடன் தொகையை எல்லாம் யாரும் கடலில் கொண்டுபோய்க் கொட்டிவிடவில்லை. வளர்ச்சி. ஆலைகளாக, சாலைகளாக, பாலங்களாக, இருப்புப் பாதைகளாக... பல்வேறு கட்டுமானப் பொருட்களாக நிர்மாணப் பணிகளாக நம் கண் முன்னே நிற்கின்றன.

இவை மூலம், வருவாய் ஈட்டுவதற்கான பல வழிகள் பிறக்கின்றன. கட்டமைப்பு வசதிகள் வலுவாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி சாத்தியம் ஆகும். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று பல துறைகளில் இன்று பல நாடுகள் முன்னேறியிருப்பதற்கு உலக வங்கிக் கடன், உதவியிருக்கிறது.

ஆனாலும்.., பல்லாயிரம் கோடி ரூபாய் கடன், பல்லாண்டுகள் நீடித்து நிற்கும் சொத்துகளாக (assets) மாறியிருப்பதை யாரும் கவனத்தில் கொள்வதே இல்லை. இதுதான் நெசம்.

உலக ரட்சகனா?

தொடக்கத்தில் ஒருவர், ‘எனக்கு நிறைய கடன் ஆயிடிச்சி...’ என்று அங்கலாய்த்தாரே... அவரது உண்மை நிலவரம் என்ன...? வீட்டுக் கடன் - 50,000; கார் கடன் - 30,0000; வீட்டு உபயோகப் பொருட்கள் - 10,000. மொத்தம் 90,000 ரூபாய் கடனுக்குப் போகிறது. இப்போது சொல்லுங்கள். இவர் ‘கஷ்டப்படுகிறவர்’ என்றால் ஒப்புக்கொள்வீர்களா...? ஊஹூம். கடன் வாங்கி, நீண்ட கால சொத்துகளில், முதலீடு செய்து இருக்கிறார். இதைத்தான், இந்தியா போன்ற நாடுகள், உலக வங்கிக் கடன்கள் மூலம் செய்து வருகின்றன.

நியாயமா...? அப்படியானால் உலகவங்கி, உலக ரட்சகனா...? சந்தைப் பொருளாதாரத்தைப் பரவலாக்குதல், முதலாளித்துவ சக்திகளை ஊக்குவித்தல், குறு, சிறு தொழில்களை நசுங்கச் செய்தல், ஏகாதிபத்திய அரசுகளுக்குத் துணை போதல்... என்று அடுக்கடுக்காகப் பல குற்றச்சாட்டுகள், உலக வங்கிக்கு எதிராக வைக்கப்படுகின்றன.

சுரண்டல் பொருளாதாரத்தின் மூலாதாரம் - உலக வங்கி. இது உண்மையா...? ஒரே ஒரு உதாரணம். 1947 மே 9 அன்று, உலக வங்கியிடமிருந்து கடன் பெற்ற முதல் நாடு என்ற ‘பெருமை’ பெற்றது பிரான்ஸ்! 50 கோடி டாலர் கேட்டது; 25 கோடி தரப்பட்டது. இது கூடப் பரவாயில்லை. கடன் வழங்க, வங்கி விதித்த நிபந்தனை..?

அப்போது பிரெஞ்சு அரசாங்கத்தில் பொதுவுடைமைவாதிகள் இரண்டு பேர் இருந்தனர். ‘அவர்களை நீக்கினால்தான் கடன் தர முடியும்’ என்று ‘கறார்’ஆகச் சொல்லிவிட்டதாம் உலக வங்கி. நிபந்தனையை ஏற்று, அவர்களை நீக்கியது பிரான்ஸ். கடனும் கிடைத்தது. உலக வங்கியின் மீதான மிகக் கடுமையான புகாரே இதுதான்: ‘நிதி தவிர்த்த பிற தளங்களிலும் மூக்கை நுழைக்கிறது‘.

பொம்மை உலக வங்கி ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்...? அதன் நிதியில் பெரும் பாகம், அமெரிக்கா தந்தது. அதன் நிர்வாகத்தில், அமெரிக்காவின் வாக்குரிமை 15%. (உலக வங்கியின் வாக்குரிமை மதிப்பீட்டில்,ஏழாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.)

ஓர் அமெரிக்கர் மட்டுமே வங்கியின் தலைவராக முடியும். (தற்போதைய தலைவர், ஜிம் யாங் கிம், பிறப்பால் மட்டுமே தென் கொரியர். தன் 5-ம் வயதிலேயே, அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறியவர்.) இத்தகைய காரணங்களால், உலக வங்கி, அமெரிக்காவின் கைப்பாவை என்கிற கூற்று வலுவாக முன்வைக்கப்படுகிறது.

நல்லது உலக வங்கி, தன்னளவில், பொது நலனை முன் நிறுத்தியே செயல்படுகிறது. அதனால்தான், கடந்த சுமார் முப்பதாண்டுகளாக, சிறந்த நோக்கத்தை அடைப்படையாகக் கொண்ட தன்னார்வ அமைப்புகளுக்கும் கடனுதவி செய்து வருகிறது.

இது மட்டுமன்று. ‘வனங்களை அழிக்கும் வணிகத் திட்டங்களுக்கு உதவுவதில்லை’ என்று, கால் நூற்றாண்டுக்கு முன்பே முடிவெடுத்துவிட்டது உலக வங்கி. வளரும் நாடுகளில் வாழும் மக்களை வறுமை, நோய்களிலிருந்து மீட்பதில் மிகுந்த முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.

வங்கியின் ஆக்கபூர்வமான பங்களிப்பு காரணமாக, கடந்த சுமார் 25 ஆண்டுகளில், வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை, உலக மக்கள் தொகையில், 33%-ல் இருந்து 25%-ஆகக் குறைந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஊட்டக் குறைபாடுள்ள குழந்தைகள் நலனில் உலக வங்கி அதீத ஆர்வம் காட்டிவருகிறது. உலகை மிரட்டிக்கொண்டிருக்கும், எய்ட்ஸ், மலேரியா போன்ற கொடிய நோய்களுக்கு எதிராக உலக வங்கி கடுமையாகப் போராடிவருகிறது. உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக நிறுவனம், (WTO) உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆதரித்து, எதிர்த்து ஊடகங்கள், இணைய தளங்களில் ஏராளமான செய்திக் கட்டுரைகள் கிடக்கின்றன. மிக ஆழமான பல கருத்துகளை இவை முன் வைக்கின்றன.

வாய்ப்பு கிடைக்கும்போது, வாசித்துப் பார்க்கலாம். குடிமைப் பணித் தேர்வு (IAS தேர்வு) போன்ற போட்டிகளை எதிர்கொள்ளும் இளைஞர்கள், உலக வங்கியின் செயல்பாடுகள் பற்றி விரிவாகத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

சரி... ஊகித்துவிட்டீர்களா..? சர்வதேச நிதியம் (IMF) அமைப்புக்கு இந்தியா செலுத்த வேண்டிய கடன் தொகை எவ்வளவு...? பூஜ்யம். ஆமாம். சர்வதேச நிதியத்திடம் நமக்குக் கடனே இல்லை! சரி. வணிக உறவுகளைப் பார்ப்போமா... அமெரிக்கா - சீனா - இந்தியா!

- வளரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x