

அதிநவீனத் தொழில்நுட்பச் சாதனங்கள் பொருத்தப்பட்ட குட்டி தானியங்கி விமானம் வானில் பறந்து துப்பறியும் சாம்பு வேலைசெய்வதைத் திரைப்படங்களில் பார்த்து அதிசயித்திருக்கிறோம். இதெல்லாம் நிஜத்தில் சாத்தியமானாலும், தயாரிப்புச் செலவை நினைத்து மலைத்துப்போயிருக்கிறோம். தற்போது குறைந்த செலவில் ஆளில்லாக் கண்காணிப்பு விமானத்தை விழுப்புர அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
வானில் பறந்தபடியே…
விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் “அக்னிமித்ரா-2017” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் மார்ச் 9 அன்று அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள், தங்களது படைப்புகளைச் சமர்ப்பித்தனர்.
அதில்,விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் தங்களது படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர். அவர்களில் இ.சி.இ. பிரிவு மூன்றாமாண்டு மாணவர்களான ராஜகோபால், ஜெயப்பிரகாஷ், பிரகாஷ், சுரேஷ், தமிழ்செல்வன், பிரீத்தி இணைந்து இந்த ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.
ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கினால் கண்காணிப்பில் ஈடுபடும் ஆளில்லா விமானம் (drone) இது. வானில் பறந்தபடியே வசிப்பிடங்களின் வரைபடங்களைத் தயாரித்தல், மறைவிடங்களை அறிதல், பொதுக் கூட்டங்களைக் கண்காணித்தல் உள்ளிட்டவைக்கு இதைப் பயன்படுத்தலாம். ஏற்கனவே இத்தகைய விமானங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், அவற்றைப் பல லட்சம் செலவிட்டே வாங்க முடியும். ஆனால் வெறும் ரூ.15 ஆயிரம் மதிப்பில் தற்போது புதிய ஆளில்லாக் கண்காணிப்பு விமானத்தை இந்த மாணவர்கள் தயாரித்திருக்கிறார்கள்.
மொபைல் ஃபோனில் காணலாம்
“இந்தச் சிறிய ஆளில்லா விமானம் முழுவதையும் மின்னணு தொழில்நுட்பத்தில் தயாரித்திருக்கிறோம். விமானத்தின் உதிரி பாகங்களை வாங்கி வந்து இதற்கான பிரத்யேக மின்னணு சர்க்கியூட்களை உருவாக்கினோம். 4 மோட்டார்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் அவற்றை இயக்கலாம். தரையிலிருந்தே இதை இயக்கும் விதத்தில் ரிமோட் கன்ட்ரோலரையும் தயார்செய்தோம். தரையிலிருந்து 80 மீட்டர் முதல் 100 மீட்டர் உயரம்வரை சென்று இந்த ஆளில்லா விமானம் பறக்கும். கீழே இருந்தபடி இதனை எந்த திசையிலும் இயக்கலாம். மனிதர்கள் செல்ல முடியாத, தவிர்க்க முடியாத இடங்களில் இதனைப் பறக்க விட்டுக் கண்காணிக்க முடியும். இதற்காகப் பிரத்யேக கேமரா பொருத்தப்பட்டு, எஃப்.எம். சமிக்ஞை மூலம் எடுக்கப்படும் காட்சிகளை நேரடியாக நமது மொபைல் ஃபோனில் காண முடியும்” என்கிறார்கள் ராஜகோபால், ஜெயப்பிரகாஷ், பிரகாஷ், சுரேஷ், தமிழ்செல்வன், பிரீத்தி.
அதிக எண்ணிக்கையில் தயாரித்தால் ரூ 10 ஆயிரத்துக்கும் இதை உருவாக்க முடியும் எனவும் அவர்கள் உறுதியளிக்கிறார்கள். விழாக் கூட்டங்கள், குடியிருப்புகளைக் கண்காணித்தல், திருமண மண்டபங்களில் வீடியோ படம் எடுத்தல் போன்ற பல விதமான விஷயங்களுக்கும் இதனைப் பயன்படுத்தலாம். கூடுதல் செலவு செய்து மேம்பட்ட சேவையும் பெறலாம் என்கிறார்கள் இந்த ஆடோமேடிக் சிறகுகளுக்குச் சொந்தக்காரர்கள்.