Published : 05 Mar 2017 01:32 PM
Last Updated : 05 Mar 2017 01:32 PM

டீம் இந்தியாவின் அடுத்த ஸ்பான்ஸர் யார்?

கிரிக்கெட் விளையாட்டு என்பதையும் தாண்டி, அதன் வணிகம் பல மடங்கு உயர்ந்துவிட்டது. கிரிக்கெட்டின் ஒவ்வொரு வடிவத்திலும் பணம் புரளுகிறது. தற்போதைய பரபரப்பு இந்திய அணியின் ஜெர்சி உரிமம் யாருக்குக் கிடைக்கும் என்பதுதான்.

தற்போது இந்திய அணியின் ஜெர்சி உரிமம் ஸ்டார் இந்தியா வசம் இருக்கிறது. இந்த ஒப்பந்தம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜெர்சி ஒப்பந்தத்தை ஸ்டார் வைத்துள்ளது. இந்திய ஆண்கள், ஆண்கள் ஏ அணி, பெண்கள் மற்றும் 19 வயதுக்கு கீழ் இருக்கும் அணி ஆகிய அனைத்து அணிகளுக்கும் ஸ்டார் இந்தியா ஜெர்சி ஸ்பான்ஸராக இருக்கிறது.

ஒரு போட்டிக்கு ரூ.1.92 கோடி ரூபாய் அளவுக்கு ஸ்டார் இந்தியா கொடுத்து வந்தது. ஐசிசி நடத்தும் போட்டி ஒன்றுக்கு 60 லட்ச ரூபாய் செலுத்தியது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுறும் நிலையில், மீண்டும் விண்ணப்பிக்கும் திட்டம் இல்லை என ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் உதய் சங்கர் தெரிவித்திருக்கிறார். பிசிசிஐ-யில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக ஜெர்சி உரிமத்தை மீண்டும் புதுப்பிக்கும் திட்டம் இல்லை என தெரிவித்திருக்கிறார். அதே சமயம், இண்டர்நெட், மொபைல் உரிமம் உள்ளிட்ட சில உரிமங்கள் ஸ்டார் இந்தியா வசம் இருக்கிறது. இது தவிர மேலும் சில ஒப்பந்தங்கள் அடுத்த சில ஆண்டுகளுக்கு இருக்கிறது.

ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அடுத்து யார்?

ஸ்டார் இந்தியா வெளியேறுவதாக தெரிவித்தாலும் பிசிசிஐ வட்டாரத்தில் பெரிய பதற்றம் ஒன்றும் இல்லை. பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி கூறும் போது, ‘இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக இருப்பது என்பது நல்ல வர்த்தக முடிவு. வரும் 2022-ம் ஆண்டு வரை இந்திய அணி விளையாடும் போட்டிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டன. ஜூன் 2017 முதல் மார்ச் 2022 வரை 259 சர்வதேச போட்டிகளில் இந்தியா விளையாட இருக்கிறது. 62 டெஸ்ட் மற்றும் 152 ஒரு நாள் போட்டிகள் இதில் அடக்கம். இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை (2019) மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20(2020) ஆகியவையும் அடக்கம். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்த போட்டிகள் நடக்க இருப்பதால் ஜெர்சி ஸ்பான்ஸர் பிடிப்பதில் எந்த பிரச்சினையும் இருக்கபோவதில்லை’ என்று கூறியிருக்கிறார்.

மார்ச் 7-ம் தேதி மதியத்துக்குள் விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. எப்எம்சிஜி, ஆட்டோ, டெலிகாம், மீடியா என அனைத்து துறைகளில் இருந்தும் விண்ணப்பங்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது. அடிப்படை விலையாக ஒரு போட்டிக்கு ரு.2.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஐசிசி நடத்தும் போட்டிகளுக்கு 70 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த பட்ச விலைக்கு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கினால் கூட 538 கோடி ரூபாய் பிசிசிஐக்கு கிடைக்கும்.

டிபிஎஸ் வங்கி, ரிலையன்ஸ் ஜியோ, விவோ, பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது. அடுத்த ஸ்பான்ஸர் யார் என்பது மார்ச் 7-ம் தேதி தெரியவரும். பெரிய நிறுவனங்கள் கோதாவில் இறங்குவதால் பிசிசிஐ காட்டில் மழைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x