Last Updated : 06 Jul, 2016 12:06 PM

 

Published : 06 Jul 2016 12:06 PM
Last Updated : 06 Jul 2016 12:06 PM

வாண்டு பாண்டு: சாக்லெட்டுக்குப் பிறந்த நாள்!

வாண்டு: ஏய் பாண்டு, என்னபா சாக்லெட்டோட வர. இன்னைக்கு உனக்குப் பிறந்த நாளா?

பாண்டு: ஏன்? பிறந்த நாளா இருந்தாதான் சாக்லெட் கொடுக்கணுமா? நாளைக்கு (ஜூலை 7-ம் தேதி) சாக்லெட்டுக்குப் பிறந்த நாள். அதான் சாக்லெட்டோட வந்தேன்.

வாண்டு: என்னது, சாக்லெட்டுக்குப் பிறந்த நாளா? எனக்கு ஒண்ணுமே புரியலை. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு.

பாண்டு: ஜூலை 7-ம் தேதி உலக சாக்லெட் தினம். அதான் அதைப் பிறந்த நாள்னு சொன்னேன். இப்போ புரிஞ்சதா?

வாண்டு: ஓ... அப்படியா? சாக்லெட்னா நம்மள மாதிரி சின்னப் பசங்களுக்கு ரொம்பப் பிடிக்குமே. சாக்லெட்டுக்குக்கூட ஒரு தினம் இருக்கா? அப்போ சாக்லெட் பத்திய வரலாறுகூட உனக்குத் தெரியுமா? தெரிஞ்சா, அதைக் கொஞ்சம் சொல்லேன்.

பாண்டு: தெரியுமே. நிச்சயம் சொல்றேன். இந்த சாக்லேட் ‘மால்வேஸி’ன்ற குடும்பத்தைச் சேர்ந்த ‘தியோப்ரோமா கோக்கோ’ன்ற என்ற தாவரத்தின் விதைகளிலிருந்துதான் கிடைக்குது. இந்த விதை வட அமெரிக்காவுலதான் முதன்முதலா கிடைச்சது. ஆரம்ப காலத்துல சாக்லெட் விதைகளைத் தூளாக்கி அதை ஒரு பானமா குடிச்சிருக்காங்க. நல்ல வாசனையாவும், கொஞ்சம் கசப்பாவும் இருந்ததால, விரும்பிக் குடிச்சிருக்காங்க.

வாண்டு: கசப்புப் பானமா? அது எப்படி நாமெல்லாம் விரும்பிச் சாப்புடுற சாக்லெட்டா மாறுச்சு?

பாண்டு: பதினைந்தாம் நூற்றாண்டுவரைக்கும் சாக்லேட் பானத்தைப் பத்தி அமெரிக்கா தவிர மற்ற நாடுகளுக்கு ஒண்ணுமே தெரியாம இருந்துச்சு. அமெரிக்காவைக் கண்டுபிடிச்ச கொலம்பஸ் மூலமாத்தான் ஐரோப்பாவுக்கு சாக்லேட் விதை அறிமுகமாச்சு.

ஸ்பெயின்ல இந்த கோக்கோ விதையை விதைச்சிருக்காங்க. விதையைத் தூளாக்கி ஐரோப்பாவுல இருக்குற மற்ற நாடுகளுக்கு அனுப்பி விற்பனை செஞ்சிருக்காங்க. அப்புடி அனுப்புனப்ப இங்கிலாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்துல சாக்லெட் பானத்துலருந்த கசப்பை நீக்க இனிப்பைச் சேர்ந்திருக்காங்க.

அந்தச் சுவை இன்னும் அருமையா இருந்துச்சு. இதுதான் சாக்லெட் தயாரிக்க முன்னோடி. அப்புறம் கோக்கோ தூள், சர்க்கரை, வெண்ணெய்னு சேர்த்துப் படிப்படியாக இப்போ இருக்குற சாக்லெட்டைத் தயாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஐரோப்பிய நாடுகள் தங்களோட காலனியா இருந்த நாடுகளில் சாக்லெட்டை அறிமுகப்படுத்துனாங்க. ஆங்கிலேயர்கள் மூலமா 1824-ல் சாக்லெட் இந்தியாவுல அறிமுகமாச்சு.

வாண்டு: சாக்லெட்டுக்குள்ள இவ்ளோ வரலாறு இருக்கா. கடைசியா ஒரு தகவலை மட்டும் சொல்லு. ஜூலை 7-ம் தேதியை ஏன் உலக சாக்லெட் தினமா கொண்டாடுறாங்க?

பாண்டு: சுமார் 460 ஆண்டுகளுக்கு முன்னால அமெரிக்காவுல இருந்து ஐரோப்பாவுக்கு சாக்லெட் விதை அறிமுகமானது ஜூலை 7-ம் தேதிதான். அதான் ஜூலை 7-ம் தேதியை உலக சாக்லெட் தினமா கொண்டாடுறாங்க.

வாண்டு: சாக்லெட்டைப் பத்தி முழு புராணத்தையும் சொல்லிட்டீயே. இன்னைக்கு உனக்கு நான் ஒரு ஸ்பெஷல் சாக்லெட் வாங்கி தர்ரேன். அப்புறம், உனக்கு ஜாலியான ஒரு விஷயத்தைச் சொல்றேன்.

பாண்டு: என்ன விஷயம் அது?

வாண்டு: இது ஒரு சாதனை விஷயம். இந்தச் சாதனையைச் செஞ்சது ஒரு நாய்க்குட்டி. இந்த நாய்க்குட்டியோட பேரு ட்விங்கி. அமெரிக்காவில் கலிபோர்னியாவுல இருக்கு. இந்த நாய்க்குட்டி முன்னால 100 பலூன்களைக் கட்டி வைச்சா, அந்த பலூன்களை இந்த டமார்… டமார்னு கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள உடைச்சுடுது. போன வாரம் இந்த நாய்க்குட்டி இப்படி100 பலூன்களை 39.08 விநாடியில வேகவேகமா உடைச்சு சாதனை செஞ்சிருக்கு. இதுக்கு முன்னால இங்கிலாந்துல ஒரு நாய்க்குட்டி 41.67 விநாடியில 100 பலூன்களை உடைச்சது. அந்தச் சாதனையை ட்விங்கி முறியடிச்சிருச்சாம்.

பாண்டு: இதெல்லாம்கூட ஒரு சாதனையா?

வாண்டு: ஆமா, இது புதிய உலக சாதனையா கின்னஸ் சாதனைப் புத்தகத்துல இப்போ இடம் பிடிச்சிருக்கு.

பாண்டு: கின்னஸ்லேயே வந்துடுச்சா. அப்போ ட்விங்கி சாதனை நாய்க்குட்டிதான். சரி, நான் கடைக்குப் போகணும். அப்புறம் பார்க்கலாமா?

வாண்டு: சரி பாண்டு. டாட்டா... பைபை...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x