Published : 28 Oct 2014 12:59 PM
Last Updated : 29 Oct 2014 01:14 PM
ஒடிசா மாநிலத்தில் புதிய வகை பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘லைகோடோன் ஒடிசி ' (lycodon odishi) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒடிசாவில் இயங்கி வரும் ‘ஸ்நேக் ஹெல்ப்லைன்' என்னும் பாம்புகளைப் பாதுகாக்கும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் பாம்பை அடையாளம் கண்டுள்ளனர்.
ஏற்கெனவே, இந்தியாவில் உள்ள 297 வகைப் பாம்புகளின் பட்டியலில் இந்தப் பாம்பும் இப்போது இடம்பிடித்துள்ளது. இந்தப் பாம்பு குறித்துத் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சிலர் மேற்கொண்ட ஆய்வை ‘ரஷ்யன் ஜர்னல் ஆஃப் ஹெர்படாலஜி' எனும் அறிவியல் இதழ் வெளியிட்டுள்ளது.
தவறான வகைப்பாடு
“முதன்முதலில் இந்தப் பாம்பு 2013-ம் ஆண்டில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் பகுதியில் தென்பட்டது. பச்சை நிறத்தில் உள்ள இந்தப் பாம்பின் கழுத்தில் வெள்ளைப் பட்டை இருக்கும். கழுத்துப் பகுதி தவிர, உடலின் மற்றப் பாகங்களில் சின்னச்சின்ன புள்ளிகள் இருக்கும். இந்தப் பாம்புக்கும் ‘லைகோடோன் ஜாரா' வகை பாம்புக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.
அதனால் இதற்கு முன்பு இந்தியாவின் பல இடங்களில் இந்தப் பாம்பு பார்க்கப்பட்டிருந்தாலும், ‘லைகோடோன் ஜாரா' எனும் பாம்பு இனத்தின் குட்டிகள் என்று பல காலமாக இந்தப் பாம்பு தவறாக வகைப்படுத்தப்பட்டு வந்தது.
வெள்ளைப் பட்டை
‘லைகோடோன் ஒடிசி' எனும் இந்தப் பாம்பு வகையின் கழுத்தில் வெள்ளைப் பட்டை ஒன்று உள்ளது. ஆனால், ‘லைகோடோன் ஜாரா' பாம்பு இனத்தில் குட்டிகளுக்கு மட்டுமே, அவ்வாறு கழுத்துப் பட்டை உள்ளது. அவை வளரவளர அந்தப் பட்டை மறைந்துவிடும். எனவே, பெரிய பாம்புகளுக்கு இந்தப் பட்டை இருக்கவில்லை. இதை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒன்றரை ஆண்டு ஆய்வுக்குப் பிறகு, இது புதிய வகை பாம்பு என்று நிரூபித்துள்ளோம்.
இரவாடியான இந்தப் பாம்பு விஷமில்லா பாம்பு. அரணை உள்ளிட்ட பல்லி வகைகளை இது உணவாக உட்கொள்கிறது ” என்கிறார் ‘ஸ்நேக் ஹெல்ப்லைன்' தன்னார்வ அமைப்பின் செயலரும், முதன்மை ஆய்வாளருமான சுபேந்து மல்லிக்.