Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் மல்டி மீடியா படிப்புகள்

பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப் படிப்பில் பல்வேறு துறை சார்ந்த படிப்புகள் இருந்தாலும் மல்டி மீடியாவுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சிலருக்கு கார்ட்டூன், கிராஃபிக்ஸ், அனிமேஷன் சினிமாக்கள் மீது நாட்டம் இருக்கும். அவர்கள் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷனை விருப்பப் பாடமாகப் படிக்கலாம். இதில் பட்டயப் படிப்பு படிப்பவர்கள் பகுதிநேர பணிக்கும், பட்டப் படிப்பு படித்தவர்கள் முழுநேர பணிக்கும் செல்வது சரியானதாக இருக்கும்.

கிராஃபிக்ஸ், அனிமேஷன் ஆகியவை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் நிறைய உள்ளது. விளம்பரப் பட நிறுவனங்கள், சினிமா துறை, உற்பத்தி மற்றும் தயாரிப்பு தொழில் நிறுவனங்கள், விற்பனைப் பிரிவு, பத்திரிக்கை, தொலைக்காட்சி நிறுவனங்கள், இன்டீரியர் டிசைனிங், கம்ப்யூட்டர் கேமிங், ஈவன்ட் மேனேஜ்மென்ட், வெப்-டிசைனிங் என வேலைவாய்ப்புக்கான துறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இத்துறைகளில், அதற்கான பணி முடிந்ததும் ஒப்பந்தம் முடிந்துவிடும் என்பதால் பகுதி நேரமாக பணி செய்ய வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மதுரை லட்சுமிபதி கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூலம் கிராஃபிக்ஸ், அனிமேஷன் படிப்புகளை வழங்குகின்றனர். அரினா, இமேஜ் போன்ற தனியார் கல்வி நிறுவனங்களிலும் மல்டி மீடியா படிப்புகள் உள்ளன. அனிமேஷன், கிராஃபிக்ஸ் கோர்ஸில் போட்டோ ஷாட், ஆர்ட், கார்ட்டூன், கிராஃபிக்ஸ், ரோட்டோஸ் கோப்பிஸ் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு, அக்கல்லூரிகள் தரமானவைதானா, அங்கு சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகளுடன் கல்வி அளிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யுங்கள்.

2-டி, 3-டி மாடுலர், ஸ்பெஷல் எஃபெக்ட் க்ரியேட்டர், அனிமேட்டர், கேரக்டர் டிசைன், கேம்ஸ் டிசைன், 3-டி அனிமேஷன் ஆகிய பாடப் பிரிவுகள் மல்டி மீடியா கோர்ஸில் வழங்கப்படுகின்றன.

தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸ் கம்பெனிகள் கூட்டமைப்பான NASSCOM ஆய்வின் முடிவுப்படி, கம்ப்யூட்டர் மொபைல் கேம் துறை 500 மில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. மல்டி மீடியா கோர்ஸ் படித்தவர்களில் 3 லட்சம் பேருக்கு, வரும் ஆண்டுகளில் பணி வாய்ப்பு காத்திருக்கிறது என தகவல் தெரிவித்துள்ளது.

இதனை முடிக்கும் ஜூனியர் அனிமேட்டர், பகுதிநேரமாக வேலை பார்த்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். முழு நேரமாக பணியாற்றுபவர்கள் மாதம் ரூ.25 ஆயிரம் ரூபாய் தொடங்கி திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம். இத்துறையில் தனித் திறமையை வளர்த்துக்கொள்வதன் மூலம் சுயமாக மல்டி மீடியா சம்பந்தமான துறைகளில் பணியை பெற்று, கூடுதல் வருவாய் பெற முடியும். வால்ட் டிஸ்னி, ஐ-மாஸ், சோனி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் அனிமேட்டர், ஆர்டிஸ்ட்களுக்கு பெரும் சம்பளத்துக்கு பணி வழங்குகின்றனர். எனவே, இத்துறைக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x