Last Updated : 06 Jun, 2017 10:28 AM

 

Published : 06 Jun 2017 10:28 AM
Last Updated : 06 Jun 2017 10:28 AM

துறை அறிமுகம்: வானம் என்ன சொல்கிறது?

வானில் தவழும் மேகங்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? மழைக்காலம், வறட்சிநிலை ஆகியவை எப்படிக் கணிக்கப்படுகின்றன என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பருவநிலைக் கணிப்புகள், பருவநிலை மாறுதல்கள் பற்றி ஆர்வமிருந்தால் மெட்ராலஜி (Meteorology) என்று சொல்லப்படும் வானிலையியலை ஒரு படிப்பாகவே தேர்வுசெய்யலாம்.

வளிமண்டல அறிவியல்களின் கிளையாக வானிலையியல் திகழ்கிறது. பருவநிலை மற்றும் தட்பவெப்பத்தைக் கண்காணிப்பதும் பருவநிலையில் மாறுதல்களை விளைவிக்கக் கூடிய அம்சங்களை ஆராய்வதும் வானிலையியல் ஆகும்.

ஒரு வானிலையிலாளர் கணிதம், இயற்பியல் நன்கு அறிந்தவராகத் திகழவேண்டும். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வல்லமை, முடிவெடுக்கும் திறன், தரவுகளை அலசும் திறன் (டேட்டா அனாலிசிஸ்), தொடர்புத் திறன் ஆகியவைக் கொண்டவராக இருக்க வேண்டும். இன்றைய வானிலையியலாளர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், கணிப்பொறி மென்பொருள்களையும் பயன்படுத்துவதால் கணிப்பொறித் திறனும் அவசியமாக உள்ளது.

என்ன செய்கிறார் வானிலையியலாளர்?

ஒரு வானிலையியலாளர் வெப்பத்தை அளக்க தெர்மாமீட்டரைப் பயன்படுத்துகிறார். காற்றின் வேகத்தைக் கணிக்க அனிமாமீட்டரையும் மழையின் அளவு மற்றும் வளிமண்டல அழுத்தத்தை அளக்க பாரோமீட்டரையும் பயன்படுத்துகிறார். காற்றின் ஈரப்பதத்தையும் அதன் தரத்தையும் அவர்கள் அளக்கிறார்கள். இன்று பருவநிலையைக் கணிக்க செயற்கைக்கோள்கள் முதல் டாப்ளர் ராடார்கள் வரை உயர் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

செயற்கைக்கோள்கள் மேகங்களின் உருவாக்கத்தையும் உலகளவிலான வானிலை மாறுதல்களையும் கணிப்பதில் சிறப்பாகப் பணியாற்றுகின்றன. கண்டங்கள், கடல்கள், துருவப்பகுதிகள் ஆகியவற்றைக் கவனித்து அவற்றால் விரிவான விவரங்களை அளிக்கமுடியும். சூறாவளி போன்ற பெரிய நிகழ்வுகளை முன்பே கணிப்பதில் செயற்கைக்கோள்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

டாப்ளர் ராடார்களில் ஒலி அலைகளை ராடார் ஆன்டெனா மூலம் ஒலிபரப்பி அவற்றின் பிரதிபலிப்புகள் பதிவுசெய்யப்படுகின்றன. பனிப் படிமங்கள் அல்லது தூசித் துகள்களை அந்த ஒலி அலைகள் மோதும்போது அவற்றின் அலைவெண் மாறுகிறது. டாப்ளர் ராடார்கள் புயல்களைக் கணிக்க உதவுகின்றன.

வானிலையியலாளர்களால் யாருக்குப் பயன்

தினசரி அலுவலகம் செல்பவர்களிலிருந்து மலையேறுபவர்கள் வரை வானிலையிலாளர்களின் குறிப்புகள் உதவியாக உள்ளன. எப்போது பயிரிடலாம், அறுவடை செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ள விவசாயிகளுக்கு வானிலையியலாளர்களின் கணிப்புகள் தேவையாக உள்ளன. விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை வானிலை சாதகமாக இருப்பது அவசியம். புயல் தொடங்கி சுனாமி வரை வானிலையியலாளர்கள் சொல்லும் செய்திகள் இன்று அத்தியாவசியமாக மாறியுள்ளன.

கல்வித்தகுதி

பிளஸ் டூவில் கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் படித்துத் தேறியிருக்க வேண்டும். பி.எஸ்சி. இளங்கலைப் படிப்பில் கணிதம், அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ ப்ரோகிராம் இன் மீட்டியராலஜி படிக்க இளங்கலைக் கல்வி அடிப்படைத் தகுதியாக உள்ளது.

இந்தியா முழுவதும் வானிலையியலுக்கான கல்வியில் வானிலையியல் அடிப்படைகள், பருவநிலை அளவீடு மற்றும் அலசல், பருவநிலை கணிப்பு, வளிமண்டல இயற்பியல் மற்றும் வெப்ப இயக்கவியல் (தெர்மோடைனமிக்ஸ்), கடல்சார் வானிலையியல் ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. தரவுகள் திரட்டல், பகுப்பாய்வு மற்றும் கணினி மாடலிங் முதலிய திறன்களும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

அரசுத்துறையில் வேலை

தி இந்தியன் மெட்ராலஜிக்கல் டிபார்ட்மெண்ட், க்ரூப் இரண்டு நிலைத் தேர்வுகள் யூ.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதிகள்,

# பி.டெக்., கணினி அறிவியலில் பொறியியல், அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

# பி.டெக். அல்லது எம்.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ்

# எம்.எஸ்சி. இயற்பியல், கணிதம், அப்ளைட் ஃபிசிக்ஸ் அல்லது அப்ளைட் மேத்ஸ் (ஆஸ்ட்ரானமி அல்லது ஆஸ்ட்ரோபிசிக்ஸ் பாடம் சேர்ந்திருக்க வேண்டும்)

# மாஸ்டர்ஸ் இன் மெட்டராலஜி, அட்மாஸ்ஃபியரிக் சயன்சஸ் (Atmospheric sciences) அல்லது ஜியோ ஃபிசிக்ஸ்.

இத்தேர்வில் மேற்கண்ட தகுதிகளுடன் வெற்றிபெறுபவர்கள் வானிலையியலில் ஒரு ஆண்டு சிறப்புப் பயிற்சி பெறுவார்கள். அறிவியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக இந்தியன் மெட்ராலஜி துறைக்கு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x