Published : 23 Aug 2016 11:05 AM
Last Updated : 23 Aug 2016 11:05 AM

அனுபவத்திலிருந்து படிக்கும் மாணவர்கள்

என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் நேரில் பார்த்துக் கற்றுக்கொள்ளும் அனுபவப் படிப்புக்கு இணையாக எதுவும் இருக்க முடியாது. இதை நன்கு உணர்ந்திருக்கிறார் தலைமை ஆசிரியை மா. விஜயலெட்சுமி.

முகமூடிப் படிப்பு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி, அனுபவப் படிப்பு இருந்தால் புத்தகப் படிப்பு தானாகவே மண்டையில் ஏறிவிடும் என்று நினைப்பவர். சிரமமான பாடங்களை அனுபவப் படிப்பின் மூலமாகவே மாணவர்களைக் கற்க வைக்கிறார். உதாரணத்துக்கு, சாலை விதிகளைப் பற்றிய பாடம் என்றால் சாலைக் குறியீடுகளை முகமூடிகளாகச் செய்து ஒவ்வொரு மாணவருக்கும் மாட்டிவிடுகிறார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு மாணவர் கேள்வி கேட்கிறார்.

சுவாரசியத்தைக் கூட்ட ஒரு பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டு அந்தப் பொம்மையே கேள்வி கேட்பதுபோல் செய்வார். ‘ஒலி எழுப்பாதே’என்பதற்கான சாலைக் குறியீட்டிடம், ‘ஏன் ஒலி எழுப்பக் கூடாது?’ என்று கேட்டால். ‘எனக்குப் பக்கத்தில் மருத்துவமனை இருக்கிறது; அதனால் ஒலி எழுப்பக் கூடாது’ என்று ‘ஒலி எழுப்பாதே’ முகமூடி பதில் சொல்லும். இப்படியே அனைத்து முகமூடிகளிடமும் கேள்விகளைக் கேட்டு முடிக்கும்போது சாலைக் குறியீடுகள், அதற்கான காரணங்கள், சாலை விதிகள் உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் அந்த மாணவர்களுக்கு அத்துப்படி ஆகிவிடுகிறது.

ஜவுளிக்கடை கல்வி

அளவீடுகளைப் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களை ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று ஒரு மீட்டர் துணியை எதில் அளக்கிறார்கள், ஒரு மீட்டருக்கு எத்தனை சென்டிமீட்டர், ஒரு சென்டிமீட்டரில் எத்தனை மில்லி மீட்டர்கள் உள்ளிட்ட விஷயங்களை அனுபவத்தில் புரியவைக்கிறார். இதேபோல, மளிகைக் கடைக்கு அழைத்துச் சென்று அங்கே எந்தெந்தப் பொருள்களை யெல்லாம் லிட்டரில் அளக்கிறார்கள், எதையெல்லாம் தராசில் நிறுக்கிறார்கள் என்பதையும் ஒரு கிலோவுக்கு எத்தனை கிராம், ஒரு லிட்டருக்கு எத்தனை மில்லி என்ற விஷயங்களையும் புரியவைக்கிறார்.

மாணவர்களைப் பேச விடுவேன்

“பாடம் நடத்துவது முக்கியமில்லை. எந்த நேரத்தில் எந்த முறையில் நடத்துறோங்கிறதுதான் முக்கியம். வகுப்பறையில் மாணவர் தனக்குப் பிடித்த ஏதாவது ஒரு விஷயத்தைப் பேசவந்தால் நான் பாடம் எடுப்பதை நிறுத்திட்டு அவர் சொல்வதைக் கேட்பேன். அந்த மாணவரை அடுத்து வேறொருவர் ஆர்வமாகக் கேள்விகள் எழுப்பினாலும் அவர்களுக்கும் வாய்ப்பு தருவேன். அன்று முழுவதும் பாடமே நடத்த முடியாட்டிக்கூட கவலைப்பட மாட்டேன். ‘நாளைக்குப் படிச்சுக்கலாம் கண்ணு’ன்னு சொல்லிட்டுப் போயிருவேன். நான் மட்டுமல்ல, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களையும் இதைத்தான் பின்பற்றச் சொல்கிறேன்” என்கிறார் விஜயலெட்சுமி.

‘திடக்கழிவு மேலாண்மை’ என்றால் பெரியவர்களுக்கே இன்னும் சரிவரத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பள்ளியின் மாணவர்களுக்குத் திடக்கழிவு மேலாண்மை, மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்ற பல விஷயங்கள் அத்துப்படி. பேரூராட்சியின் குப்பைக் கிடங்கிற்கே மாணவர்களைக் கூட்டிச் சென்று திடக்கழிவு மேலாண்மையைப் புரியவைத்திருக்கிறார் விஜயலெட்சுமி. இதை நன்கு உள்வாங்கிக்கொண்ட மாணவர்கள், பள்ளிவளாகத்திலேயே ஒரு உரக்கிடங்கை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

வீட்டுப்பாடம் இல்லை

விஜய லெட்சுமி தனது மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எதுவும் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்திலிருந்தோ, அல்லது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையோ இயல்பான மொழிநடையில் எழுதிக்கொண்டுவந்தால் போதும். இந்தப் பள்ளியில் 80 ஆயிரம் ரூபாய் செலவில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறை ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். இங்கிருக்கும் கணினியில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் படிக்கலாம்.

பிள்ளைகள் ஆட்டு மந்தைகள் போல் இல்லாமல் அவர்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்தச் சரியான கல்வி சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். அதை அனுபவக் கல்வியால் மட்டுமே தர முடியும். அதைச் சத்தமின்றி சாதித்துக் கொண்டிருக்கிறார் விஜயலெட்சுமி.

விஜயலட்சுமி - தொடர்புக்கு: 98422 95038

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x