Last Updated : 23 Sep, 2016 11:35 AM

 

Published : 23 Sep 2016 11:35 AM
Last Updated : 23 Sep 2016 11:35 AM

"தலைப்பாகை என் பிரச்சார வடிவம்!"

இந்திய சமூக அரசியல் வரலாற்றில் 2016-ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டுகளுள் ஒன்று. அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு இது. அம்பேத்கர் எழுதிய முதல் நூலான 'இந்தியாவில் சாதிகள்' நூலுக்கு நூற்றாண்டு இது. 'பட்டியலின வகுப்பினர்' எனும் ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு நூறாண்டு ஆகிறது. அயோத்திதாச பண்டிதர் தொடங்கிய 'திராவிட மகா ஜன சபை'யின் முதல் மாநாட்டுக்கு இந்த ஆண்டு டிசம்பர் வந்தால் 125 ஆண்டு ஆகிறது. பெரியார் தலைமையில் பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்ற நீதிக் கட்சியின் நூற்றாண்டு இது. மகாகவி பாரதியின் 95-வது நினைவு ஆண்டு இது. பகத் சிங்கின் 110-வது பிறந்த ஆண்டு இது. பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட 85-வது ஆண்டு இது.

இப்படியான சூழலில்தான் ராஜகுருவைச் சந்திக்க நேர்ந்தது. மேலே சொன்ன அயோத்திதாசர், பாரதியார், பெரியார், பகத் சிங் என இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அனைவரும் தலைப் பாகை அணிந்து அன்றைய கால சமூகத்தில் நடமாடியிருக்கிறார்கள். செயல்பட்டிருக்கிறார்கள்.

ராஜகுருவும் அப்படித்தான். தலைப்பாகை அவருக்கான அடையாளம். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தமிழ், தமிழர், தமிழர் உரிமை சார்ந்த எந்த ஒரு போராட்டக் களத்திலும் அவரைப் பார்க்க முடியும். அப்படி ஒரு போராட்டக் களத்தில்தான் அவரை முதன்முதலில் பார்த்தேன். ஃபேஷன் என்ற பெயரில் பல இளைஞர்கள் தங்கள் உடைகளில் என்னென்னவோ வித்தியாசங்களைச் செய்துகொண்டிருக்க, முண்டாசு கட்டிய அந்த இளைஞர் மிகவும் ஆச்சரியத்தை அளித்தார். அவரது கதை உங்களுக்கும் ஆச்சரியம் அளிக்கக்கூடும். அவரிடம் பேசியதிலிருந்து...

“பிறந்தது ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பூனாச்சி எனும் கிராமம். ஆதிதிராவிடக் குடும்பம் எங்களுடையது. அதனால் என் தந்தை நிறையவே சாதியப் பாகுபாடுகளை அனுபவித்தார். அத்தனையையும் தாண்டி, அந்தக் கிராமத்திலிருந்து வந்த முதல் பட்டதாரி என் தந்தை சின்னமுத்துதான். ஆனால் அது அவரின் இயற்பெயர் கிடையாது. முத்துசாமி என்பதுதான் அவரின் உண்மையான பெயர். ஆனால் சாதிப் பாகுபாட்டால், 'உன் பெயரில் எதுக்கு சாமி?' என்று கேட்டு, அவர் படித்த பள்ளியில் ‘சின்னமுத்து' என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தச் செய்தி என் தந்தை நான்காவது வகுப்புப் படிக்கும்போதுதான் அவருக்கே தெரியவந்தது.

அரசு வேலையில் பணியாற்றி வந்த அவர் நிறைய வாசிப்புப் பழக்கம் கொண்டவர். பெரியார், அம்பேத்கர், அயோத்திதாசர் எனப் பலரின் எழுத்துகளை அவர்தான் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். என் அப்பா தன்னுடைய பணியில் நேர்மையாக இருந்ததால், அவ்வப்போது மாற்றலுக்கு ஆளாகி வந்தார். இதனால் நான் ஒன்றாவது படிக்கும்போதே எங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறிவிட்டோம். எனவே, என் தந்தை அனுபவித்த சாதியப் பாகுபாடுகளை எல்லாம் அனுபவிக் காமல் நான் தப்பிக்க முடிந்தது.

இப்படி ஊர் விட்டு ஊர் போகும்போதெல்லாம், எனக்குத் துணையாக இருந்தது புத்தகங்கள் மட்டுமே. மார்க்ஸ், விவேகானந்தர், பெரியார், பகத் சிங் எனப் பலரின் எழுத்துகளையும் என்னுடைய பதின் வயதில் தீவிரமாகப் படித்துவந்தேன். இதனால் நான் அதீத மன அழுத்தத் துக்கு ஆளாகி மனநல மருத்துவமனை ஒன்றில் மூன்று மாத காலம் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த வயதில், நான் இந்து மதத்தின் மீது அதிகமாகப் பற்று கொண்டிருந்தேன். பின்பு என் வாசிப்பு விரிவடைய, கிறிஸ்துவ மதத்துக்கு மாறினேன். ‘ராஜகுரு மோசஸ்' எனப் பெயரை மாற்றிக் கொண்டேன். மிகவும் ஆழமாக அந்த மதத்தைக் கற்க ஆரம்பித்தேன். ஆனால் இறுதியில், அந்த மதத்திலும் நிறைய பாகுபாடுகள் இருந்ததால் அதிலிருந்தும் வெளியே வந்தேன்" என்றார்.

பள்ளியிறுதி படிக்கும்போதே இவருக்கு நாத்திகத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. பொறியியல் படிக்கும்போது, அரசியலிலும் ஆர்வம் உண்டானதாகக் கூறினார்.

“அதனால் பொறியியல் முடித்தவுடன் கோவை சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். அந்தக் காலத்தில்தான் பாரதியாரை நிறைய முரண்பாடுகளுடன் கற்கத் தொடங்கினேன். அயோத்திதாசர், பெரியார், பாரதியார், பகத் சிங் என நான் அரசியல் அரிச்சுவடி படித்த அனைவருமே தலைப்பாகை கட்டியிருந்தவர்களாக இருந்தனர். அந்தத் தலைப்பாகையே அவர்களுக்கு ஒரு அடையாளமாகவும் இருந்தது. இதனால் எனக்குத் தலைப்பாகை மீது ஒரு காதல் உருவானது" என்று புன்னகைத்தார்.

ஆனால் அப்படி ஈர்ப்பு உருவாவது அவருக்கு அது முதல் முறை அல்ல. அவருக்கு அரசியலில் ஆர்வம் ஏற்படுவதற்கு முன்பு ‘பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்திருந்ததால், வந்தியத் தேவன் கதாபாத்திரம் அவருக்குப் பிடித்துப்போனது. ஏனென்றால், அவனும் தலைப்பாகை கட்டியிருப்பவனாகவே இருந்தான் என்பதுதான்.

“இந்தக் காரணங்களால்தான் நானும் தலைப்பாகை அணிய உந்தப்பட்டேன். என் தாயாரின் ஊரான மேட்டூரில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் குர்மித் சிங் எனும் வடநாட்டுக்காரர் ஒருவர் வசித்து வந்தார்.

அவரிடம் என் விருப்பத்தைச் சொல்லி, ஒரு மாதப் பயிற்சிக்குப் பிறகு தலைப்பாகை அணியக் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் தலைப்பாகை கட்ட எனக்கு ஒரு மணி நேரம் ஆனது. இப்போதெல்லாம் 15 நிமிடங்களுக்குள் கட்டிவிடுகிறேன். பருத்தித் துணியைத்தான் இப்படியான தலைப்பாகை கட்ட பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அதுதான் குளிர்ச்சி தரும். கருப்பு என்பது ஒடுக்கப்படுவதின் நிறம் மட்டுமல்ல, எதிர்ப்பின் நிறமும் என்பதால், அந்த நிறத்தைத் தேர்வு செய்தேன்" என்றார்.

2010-ம் ஆண்டு த‌ன் 22வது வயதில், சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தபோதிலிருந்து இப்படி தலைப்பாகை அணிந்து வருகிறார். இதனால் பலரின் வித்தியாசமானப் பார்வைக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்லும் அவர், இது த‌னக்கு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்கிறார்.

"இந்தத் தலைப்பாகையால் எனக்குப் பல‌ நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். 'ஏன் இந்தத் தலைப்பாகை?' என்று என்னிடம் கேட்பவர்களுக்கு, என் கொள்கை, என் தலைவர்கள் போன்ற தகவல்களைச் சொல்லி தலைப்பாகை அணிவதற்கான காரணத்தைச் சொல்கிறேன். இது எனக்கு ஒரு பிரச்சார வடிவமாகவும் இருக்கிறது. இந்தத் தலைப்பாகைதான் நான் சென்னைக்கு வந்தபோது பிரபல வழக்கறிஞர் சத்தியசந்திரன் சாரிடம் ‘ஜூனியர்' ஆகச் சேரவும் உதவியது. இப்படித் தலைப்பாகையால் எனக்கு நிறைய நன்மைகள்" என்பவர், தலைப்பாகையால் வந்த ஆபத்தையும் சொல்கிறார்.

"கல்லூரிக் காலங்களில் போராட்டங்களில் ஈடுபடும் போதெல்லாம் காவல்துறையினரின் கவனம் என் மீது எளிதாகக் குவிந்துவிடும். ‘அந்தத் தலைப்பா கட்டின பையன்தான்பா இதுக்குக் காரணம்' என்று நம்மை அடையாளம் காட்டிவிட்டுப் போய்விடுவார்கள். அதற்குப் பிறகு காவல் நிலையம், சிறை என்று அலைய வேண்டியதுதான்!" என்று சொல்லிச் சிரிக்கிறார்.

"இந்தச் சமூகத்திலிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தபோது நான் தேர்வு செய்த ஆயுதங்கள் இரண்டு. ஒன்று, சட்டம். இன்னொன்று, இந்தத் தலைப்பாகை. ஆம், தலைப்பாகை என்னுடைய ஆயுதம்!" என்று கம்பீரமாகச் சொல்லி விடைகொடுக்கிறார் ராஜகுரு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x