Last Updated : 23 Jun, 2017 10:45 AM

 

Published : 23 Jun 2017 10:45 AM
Last Updated : 23 Jun 2017 10:45 AM

திரைக்குப் பின்னால்: பெண்களின் கையில் ஹாலிவுட்

உலகின் எந்த மொழி சினிமாவிலும் பெண் இயக்குநர்கள் அபூர்வம்தான். ஹாலிவுட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், ஜூன் 2 அன்று உலகம் முழுவதும் வெளியான ‘வொண்டர் வுமன்’ திரைப்படம், பெண் இயக்குநர்களைக் கொண்டாடக் காத்திருக்கும் ஒரு நவீன யுகத்துக்கு அடிகோலியிருக்கிறது. அதற்கு முழுவதும் காரணமாக இருப்பவர் ‘வொண்டர் வுமன்’படத்தை இயக்கிய பேட்டி ஜென்கின்ஸ். ‘வொண்டர் வுமன்’ மூலம் 149 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை இயக்கிய முதல் பெண் இயக்குநர் என்ற பெருமை பேட்டி ஜென்கின்ஸை வந்தடைந்திருப்பது குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதையல்ல. இதுவரை 600 மில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் வசூலித்து, இன்னும் வசூலை வாரிக் குவித்துக்கொண்டிருக்கும் இந்த சூப்பர் ஹீரோ படத்தை இயக்கும் வாய்ப்பு, பெண் இயக்குநரான பேட்டி ஜென்கின்ஸுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை.

14 ஆண்டுகளுக்குப் பின்

கடந்த 2003-ல் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற ‘மான்ஸ்டர்’ (Monster) படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியவர். இந்தப் படத்துக்காக அதன் நாயகி சார்லீஸ் தெரானுக்குச் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் கிடைத்தது. இடையில் ஒரேயொரு தொலைக்காட்சிப் படத்தை இயக்கிவிட்டு பொறுமையுடன் காத்திருந்த ஜென்கின்ஸின் திறமையை ஹாலிவுட் புரிந்துகொள்ளவே இல்லை. 2003-க்குப் பிறகு 14 ஆண்டுகள் காத்திருந்து கடும் போராட்டத்துக்குப் பிறகே ‘வொண்டர் வுமனை’ தனது இரண்டாவது படமாக இயக்கி இமாலய வெற்றியைக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவைத் தாண்டி உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு படத்தைத் தந்துவிட்டார்.

கைநழுவிய வாய்ப்புகள்

ஜென்கின்ஸுக்கு 2011-லேயே ‘தோர்: த டார்க் வேல்டு’(Thor: The Dark World) என்ற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கும் வாய்ப்பை மார்வெல் நிறுவனம் கொடுத்தது. பிறகு ஏனோ அந்நிறுவனத்துக்கு ஒரு அவநம்பிக்கை ஏற்பட அவரை வெளியேற்றியது. புன்முறுவலுடன் வெளியே வந்த ஜென்கின்ஸைக் கவனித்துக்கொண்டிருந்த மார்வெலின் போட்டி நிறுவனமான டிசி காமிக்ஸ் அவரை ஒப்பந்தம் செய்து ‘வொண்டர் வும’னை இயக்கும் வாய்ப்பை அளித்தது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிசி காமிக்ஸின் மிகப் பிரபலமான காமிக்ஸ் கதாபாத்திரம்தான் ‘வொண்டர் வுமன்’.

அதுவரை அது திரை வடிவம் பெறாத கதாபாத்திரம். ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரமாகப் பெண்ணை முன்னிறுத்தினால் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களாக எனச் சந்தையில் நிலவிய ஆணாதிக்க மனத் தடையும் முக்கியக் காரணம். ‘வொண்டர் வுமன்’ படத்துக்கான முயற்சிகள் 1996-லேயே தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஜவ்வாக இழுத்துக்கொண்டு வந்ததிலிருந்தே இது விளங்கும்.

1996-ல் இந்தப் படத்தைத் தொடங்க டிசி காமிக்ஸ் முடிவுசெய்தபோது, அதற்கு இயக்குநராக அமர்த்தப்பட்டவர் இவான் ரெய்ட்மேன். ஆனால், ஐந்து ஆண்டுகள் ஆரம்ப வேலையோடு “போங்கப்பா நீங்களும் உங்கள் வொண்டர் வுமனும்’என்று கூறிவிட்டுப் போய்விட்டார் இவான். பின்னர் ‘த அவெஞ்சர்ஸ்’ படங்களை இயக்கிப் புகழ்பெற்ற ஜாஸ் வீடனை 2005-ல் திரைக்கதை எழுத அமர்த்தினார்கள். அந்தச் சமயத்தில் பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் வெளியான ‘மான்ஸ்டர்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு, விமர்சனங்களைக் கவனித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ஜென்கின்ஸை அழைத்து ஜாஸ் வீடன் திரைக்கதை எழுதி முடித்ததும், அதை இயக்கும்படி ஒப்பந்தம் செய்தது.

ஆனால், மூன்று ஆண்டுகளை ‘வொண்டர் வுமன்’ திரைக்கதையாக்கத்தில் செலவிட்ட வீடன், ‘இது ஆகிற கதையில்ல’ என்று கிளம்பிவிட்டார். இதனால் ஜென்கின்ஸுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தையும் ரத்துசெய்துவிட்டது வார்னர் பிரதர்ஸ். இந்தமுறையும் மனம் தளரவில்லை பேட்டி. இதன் பிறகு ‘பிரேக்கிங் பேட் அண்ட் வாக்கிங் டெட்’ (Breaking Bad and Walking Dead) என்ற தொலைக்காட்சித் தொடரின் சில அத்தியாயங்களைப் பிரம்மாண்டமாக இயக்கிக் கவனம் ஈர்த்த மிஷேல் மெக்லாரன் என்ற இன்னொரு பெண் இயக்குநரை அமர்த்தியது. அவரும் வெளியேறிய பிறகு ஜென்கின்ஸ் கைகளுக்கே திரும்ப வந்தது ‘வொண்டர் வுமன்’.

ஹாலிவுட்டின் நம்பிக்கை

பெண்கள் சூப்பர் ஹீரோவாக நடித்தால் படம் ஓடாது எனும் மூட நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது ‘வொண்டர் வுமன்’. பெண் சூப்பர் ஹீரோவை முன்னிறுத்தும் படம் என்றாலும் பெண்ணிய நோக்கிலான படமாக ‘வொண்டர் வும’னைச் சுருக்கிவிடாமல் மொத்த மனித சமூகத்துக்குமான நீதியைக் கொண்டிருக்கும் படமாக இதை வடிவமைத்ததில்தான் ஜென்கின்ஸ் எனும் இயக்குநரின் சாமர்த்தியமான ஆளுமை வெளிப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை வொண்டர் வுமன் கதாபாத்திரத்தைப் பெண்கள் முன்னேற்றத்துக்கான சிறப்புத் தூதராகவும் அறிவித்துக் கவுரவம் செய்திருக்கிறது. ஹாலிவுட்டோ பேட்டி ஜென்கின்ஸ் எனும் நம்பிக்கை நட்சத்திரம் அமைத்துவிட்ட பாதையில் அடுத்தடுத்து இரண்டு பெண் இயக்குநர்களைத் தேர்வுசெய்திருக்கிறது.

மார்வெல் நிறுவனம் தனது ‘கேப்டன் மார்வெல்’ படத்தை இயக்க அன்னா போடெனாலையும் சோனி நிறுவனம் தனது ‘சில்வர் அண்ட் பிளாக்’ படத்தை இயக்க, ஜினா – ப்ரின்ஸ் பைத்வுட்டையும் ஒப்பந்தம் செய்யவிருக்கின்றன. டிசி காமிக்ஸ் நிறுவனமோ ‘வொண்டர் வுமனி’ன் இரண்டாம் பாகத்தை இயக்கும்படி ஜென்கின்ஸை அமர்த்திவிட்டது. இந்த முறை இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையையும் பட்டியே எழுதத் தொடங்கிவிட்டார். இனி ஹாலிவுட்டின் 100 மில்லியன் சூப்பர் ஹீரோ படங்கள் பெண்களின் கையில்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x