துறை அறிமுகம்: எண்களுக்கு இதயம் தரும் புள்ளியியலாளர்

துறை அறிமுகம்: எண்களுக்கு இதயம் தரும் புள்ளியியலாளர்
Updated on
2 min read

கேட்ட மாத்திரத்தில் ‘புள்ளியியல்’ என்கிற சொல் அந்நியமாகத் தோன்றலாம். ஆனால், நமது அன்றாடப் பணிகளில் தொடங்கிப் பொழுதுபோக்குகள் வரை புள்ளியியலின் பங்களிப்பு கண்ணுக்குத் தெரியாமல் நீக்கமற நிறைந்துள்ளது. விராட் கோலியின் ஒரு நாள் ஸ்கோர் சராசரியில் தொடங்கி பங்குச்சந்தை நிலவரம்வரை புள்ளியியல் வழியாகவே நாம் உலகைப் புரிந்துகொள்கிறோம்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும், அரசு நலத் திட்டங்கள் அமல்படுத்துதலுக்கும் தரவுகளைத் திரட்டுவதுதான் முதல் பணி. இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்ப மயமாகிவரும் நிலையில் அளவுசார்ந்த தரவு அடிப்படையிலான விவரங்கள் அடிப்படையாக மாறியுள்ளன. தகவல்களைத் திரட்டுவது, ஒருங்கிணைப்பது, பகுப்பாய்வுசெய்வது, விளக்கம் அளிப்பது, பெரும் தொகையிலான தரவுகளைச் சுருக்கி வழங்குவது ஆகியவற்றைக் கொண்ட கணிதத் துறைதான் புள்ளியியல். பொருளாதாரம், மருத்துவம், உளவியல், சந்தைப்படுத்துதல், பொது நலம், உயிரியல், விளையாட்டு போன்ற துறைகளுக்குப் புள்ளியியலாளர்களின் பங்களிப்பு அவசியம்.

தேச நலன்

ஒரு அரசு அல்லது ஒரு தேசத்தின் நிர்வாகத்துக்குப் புள்ளியியல் ஆய்வு விவரங்கள் முதுகெலும்பாக உள்ளன. குற்றப் புள்ளியியல் விவரங்கள், மக்கள்தொகைப் புள்ளியியல் விவரங்கள், சூழலியல் புள்ளியியல் விவரங்கள், மருத்துவப் புள்ளியியல் விவரங்கள், கல்வி நிலைப் புள்ளியியல் விவரங்கள், விபத்துப் புள்ளியியல் விவரங்கள், தேர்தல் புள்ளியியல் விவரங்கள், நகரம், மாவட்டம், மாநிலப் புள்ளியியல் விவரங்கள், சுற்றுலாப் புள்ளியியல் விவரங்கள் எனத் தேச நிர்வாகத்துக்கு உதவும் புள்ளியியல் விவரங்கள் பலதரப்பட்டவை.

தரவுகளுக்கு உயிர்

புள்ளியியல் என்பது பயன்பாட்டுக் கணிதத்தின் (applied mathematics) ஒரு கிளைத்துறையாக இருந்தாலும், அது வெறுமனே எண்களோடு தொடர்புடைய துறை மட்டுமல்ல. தரவுகளுக்கும் அது சார்ந்து வடிவமைக்கப்படும் அட்டவணைகளுக்கும் இதயமாகச் செயல்படுபவர் புள்ளியியலாளர்.

ஊதியம், ஒரு பொருளின் விலை, தேவையை மதிப்பிடுதல் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் புள்ளியியல் தரவுகளும் புள்ளியியல் பகுப்பாய்வுத் தொழில்நுட்பங்களும் உதவுகின்றன. உற்பத்தியோடு தவிர்க்க முடியாத தொடர்பை வைத்திருக்கும் கருவியாகப் புள்ளியியல் உள்ளது.

வங்கியியல்

வங்கித் துறையில் புள்ளியியல் ஆதாரமான பங்கை வகிக்கிறது. வங்கியைப் பொறுத்தவரை ஒருவரின்வைப்புப் பணத்தை இன்னொருவருக்குக் கடனாக அளித்து அந்த வட்டியிலிருந்துதான் தனது லாபத்தைச் சம்பாதிக்கிறது. வங்கியில் பணத்தைச் சேமிப்பாக வைத்திருக்கும் எத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கள் பணத்தைத் திரும்பக் கோருவார்கள் என்பதைக் கணக்கிடுவதற்குப் புள்ளியியல் பெரிதும் உதவுகிறது.

அரசு நிர்வாகம்

அரசின் கொள்கைகள், திட்டங்கள் புள்ளியியல் வாயிலாகவே வடிவமைக்கப்படுகின்றன. அத்தனை நிர்வாக நடவடிக்கைகளையும் எடுப்பதற்குப் புள்ளியியல் தரவுகளே ஆதாரமாக உள்ளன. மக்கள்தொகை, மக்கள்தொகை சார்ந்த விவரங்கள், பொருளாதார விவரங்களைக் கணக்கிடப் புள்ளியியல் வல்லுநர்களையும் நிறுவனங்களையும் அரசாங்கம் நாடுகிறது. வேலைவாய்ப்பின்மை விகிதம், கல்வியறிவு, ஊட்டச்சத்துக் குறைபாடு, வரதட்சிணை மரணங்கள் முதலியவற்றை அளவிடுவதற்கு மாதிரிக் கணக்கெடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. வாழ்க்கைச் செலவுகள், விலைவாசி ஏற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தவும் இந்த மாதி ரிக் கணக்கெடுப்பு முறை உதவுகிறது.

இயற்கை மற்றும் சமூக அறிவியல்

உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம், வானிலையியல், வணிக ஆய்வுகள், சமூகவியல், வர்த்தகம், பொது நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவியல்களில் ஆய்வு முடிவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்குப் புள்ளியியல் முறைகள் பயன்படுகின்றன.

வானியல்

புள்ளியியல் முடிவுகளை நீண்டகாலமாகப் பயன்படுத்தும் பழமையான அறிவியல் துறை இது. தொலைதூரத்திலுள்ள கோள்களையும் விண்கற்களையும் ஆராய்ந்து யூகமான முடிவுகளுக்கு வருவதற்குப் புள்ளியியல் முறைகளே உதவுகின்றன. ஒரு கோள் இருக்கும் தொலைவு, அளவு, நிறை மற்றும் அடர்த்தியை நேரடியாக அளந்து அறிய முடியாத நிலையில் இதுவே சாத்தியமாக உள்ளது.

மருத்துவம், வேளாண்மை, சுற்றுச்சூழல்

நோய்களைக் கண்காணிப்பதையும் ஆரோக்கிய நிலைகளைத் தொடர்ந்து அவதானிப்பதையும் மருத்துவப் புள்ளியியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். நோய், மரணங்களுக்கான காரணங்களை ஆராய்வதற்கும் மருந்துகள், நோய்காண் கருவிகளைக் கண்டுபிடிப்பதற்கும் இந்த ஆய்வுகள் உதவிகரமாக உள்ளன. வேளாண்மைத் துறையில் வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கும் வேளாண்மை ஆய்வு முடிவுகளிலிருந்து பகுப்பாய்வு செய்வதற்கும் புள்ளியியலாளர்கள் உதவுகின்றனர். படைப்புத்திறன், விவரங்களில் கவனம், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், தர்க்க அறிவு மற்றும் முடிவெடுக்கும் திறனில் வல்லவர்களாக இருப்பவர்களுக்குப் புள்ளியியல் துறை பிரகாசமான வாய்ப்புகளை அளிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in