

கிருத்திகா ப்ளஸ் டூ அறிவியல் பிரிவில் (இயற்பியல் - வேதியியல் - உயிரியல் - கணிதம்) படிக்கிறாள். ப்ளஸ் டூவுக்குப் பிறகு அவள் மருத்துவம் அல்லது பொறியியல் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அவளுக்கு பயமாக இருக்கிறது. கணிதம், அறிவியல் இரண்டிலும் அவள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவில்லை.
என்ன செய்வது? இதை யோசிக்கும்போது அவளுக்குப் படிப்பின் மீதே கோபம் வருகிறது. தான் எதற்கும் லாயக்கு இல்லாதவள் என்று அவளுக்குத் தோன்றுகிறது.
ஆனால், கிருத்திகா மற்ற பல பாடங்களில் கெட்டிக்காரி. பத்தாம் வகுப்பு படிக்கும்போது வரலாறு, புவியியல் பாடங்களை அவள் மிகவும் விரும்பிப் படித்திருக்கிறாள். 11,12ஆம் வகுப்புகளில் ஆங்கிலத்தில் சராசரியாக 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்திருக்கிறாள்.
ஆனால் ப்ளஸ் டூவில் வரலாறு, புவியியல் பாடங்களை எடுத்துப் படித்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று எல்லோரும் சொன்னதால் அறிவியலைத் தேர்ந்தெடுத்தாள். இப்போது மதிப்பெண்ணும் இல்லை, அறிவியலை மேற்கொண்டு படிக்க விருப்பமும் இல்லை.
கிருத்திகா என்ன செய்ய வேண்டும்? அவள் லாயக்கில்லாதவளா? அவளுக்கான பாதை எதுவும் இல்லையா?
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். லாயக்கில்லாதவர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை. அதைக் கண்டுபிடித்துப் பட்டை தீட்டினால் எல்லாருமே வைரம்தான்.
கிருத்திகாவையே எடுத்துக்கொள்ளுங்கள். அவளுக்கு அறிவியல் வராது. ஆனால், அழகாகப் பேச வரும். பேச்சுப்போட்டிகளில் பரிசுகளைக் குவித்திருக்கிறாள். நிறைய நூல்களைப் படிக்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் நன்றாகப் பேசுவாள். அவள் பள்ளியில் நடத்திவந்த பத்திரிகைக்கு அவள்தான் ஆசிரியர். அவளை எதற்கும் லாயக்கில்லாதவள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
அவள் திறமை என்ன? மொழி. அதில்தான் அவளுக்கு இயல்பான தேர்ச்சி இருக்கிறது.
இந்த மொழியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
மொழித் திறமை என்பது என்ன? மொழியைச் சரளமாகக் கையாளும் திறமை. சொற்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்தும் திறமை.
மொழித் திறமை பேச்சில் வெளிப்படலாம். பொது மேடைகளில் பேசுபவருக்கு மட்டுமல்ல; விற்பனை, மக்கள் தொடர்பு, தொழில் ஆலோசனை முதலானவற்றுக்கும் மொழித் திறமை தேவை.
உரையாடுவதற்கான தேவை அதிகம் உள்ள எல்லாத் தொழில்களுக்கும் பேச்சுத் திறமை அவசியம். உளவியல், சட்டம், சமூகப்பணி, ஊழியர் நிர்வாகம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
மொழித் திறமை எழுத்தில் வெளிப்படலாம். சக்தி வாய்ந்த எழுத்துக்கள் வரலாற்றையே மாற்றியிருக்கின்றன.
எழுத்துத் திறமை உள்ளவர்கள் விளம்பரத் துறை, இதழியல், நூல் வெளியீடு, கவிதை, நாவல், கட்டுரை என்று பல துறைகளில் பிரகாசிக்கலாம்.
‘ஆஹா’ என்ற ஒரு சொல், ஒரு குளிர்பானத்தை எவ்வளவு பிரபலமாக்கியிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் ‘வந்தே மாதரம்’ என்ற சொல் எப்படிப்பட்ட எழுச்சியை ஏற்படுத்தியது!
சொற்களின் வலிமை மகத்தானது. மொழித் திறமை கொண்டவர்களால்தான் சொற்களை வலுவான முறையில் பயன்படுத்த முடியும்.
இப்போது சொல்லுங்கள். கிருத்திகா லாயக்கில்லாதவளா? மருத்துவம், பொறியியல், கணிப்பொறி அறிவியல் போன்றவற்றைப் பற்றியெல்லாம், அவள் கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டுமா?
கிருத்திகா கல்லூரியில் தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் படிக்கலாம். அதிலேயே பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு படிக்கலாம். ஆசிரியர் , விரிவுரையாளர், பேராசிரியர் என்று மேலே செல்லலாம்.
அல்லது ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் படிக்கலாம். விளம்பரத் துறை, மக்கள் தொடர்பு, ஊடகப் பணிகள், திரைப்படம் என்று பல வழிகளில் கம்பீரமமாக நடை போடலாம்.
யார் கண்டது? கிருத்திகா நாளை ஒரு பெரிய எழுத்தாளராகலாம். அல்லது பத்திரிகையின் ஆசிரியராகலாம். பெரிய விளம்பர நிறுவனத்தில் பிரகாசிக்கலாம்.
அறிவியலிலும் கணிதத்திலும் மதிப்பெண் இல்லை என்ற கவலை இனி கிருத்திகாவுக்கு வேண்டாம்.