Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM

நாய்கள் இடதுபுறம் வாலாட்டினால்.. கொலைவெறியாம்!

நாய்கள் நம்மைப் பார்த்து வாலாட்டி னால் அதை அன்பின் வெளிப்பாடாகத்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல் அப்படி பொத்தாம் பொதுவாக நினைத்துவிடாதீர்கள். நாய்கள் வாலாட்டுவதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறதாம்!

நாய்கள் வாலை எப்படி ஆட்டு கின்றன என்பதைப் பொறுத்து அதன் உள்நோக்கத்தையும் உணர்வுகளையும் சூசகமாக வெளிப்படுத்துவதாக அண்மையில் ஒரு ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வலதுபுறம் - நேசம்; இடதுபுறம் - கொலைவெறி

ஆய்வின் முடிவுகள் சொல்லும் தகவல்கள் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றன. ஒரு நாயைப் பார்த்து, இன்னொரு நாய் வாலை ஆட்டித்தான் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும். வாலை வலதுபுறமாக ஆட்டினால் எதிரே நிற்கும் நாயிடம் தனது நேசத்தைக் காட்டுகிறது என்று அர்த்தம். இடதுபுறமாக ஆட்டினால், எதிரே நிற்கும் நாயை கொலைவெறியோடு பார்க்கிறது என்று அர்த்தம்.

இதுகுறித்து அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டது அமெரிக்காவிலுள்ள டொராண்டோ பல்கலைக்கழகம். ஆய்வின் முடிவுகள் குறித்து பேசும் பல்கலையின் நரம்பியல்துறை பேராசிரியரான ஜோர் ஜியா வலூர்ட்டிஹரா, “மனித மூளையானது அதன் வலது மற்றும் இடது பகுதிகளின் வெவ்வேறான உணர்வுகள் மற்றும் கட்டளைகளை எடுத்துச் செல்பவை. அதுபோலத்தான் நாய்களிலும் வலது மூளை உடலின் இடது பகுதியையும், இடது பக்க மூளை உடலின் வலது புறத்தையும் கட்டுப்படுத்துகிறது.

நாங்கள் சோதனைக்காக எடுத்துக்கொண்ட நாய்களுக்கு, நாய்களின் வீடியோ படங்களையும் ரோபோ நாய்களையும் காண்பித்தோம். வீடியோவில், எவ்வித உணர்வுகளையும் காட்டாத நாய்களைப் பார்த்தபோது சோதனை நாய்கள் எந்தவித ரியாக்ஷனும் காட்டவில்லை. வீடியோவில் இருந்த நாய்கள் இடது பக்கமாக வாலை ஆட்டியதும் இந்த நாய்களுக்கு இதயத் துடிப்பு அதிகரித்து பதற்றமடையத் தொடங்கிவிட்டன’’ என்கிறார்.

உணர்ச்சியை வெளிப்படுத்த உண்மையில், நாய்கள் வாலின் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இன்னொரு நாயுடன் உறவு கொள்ள நினைப்பதில்லை. ஆனாலும், அவைகள் தமது உணர்ச்சியை வெளிப்படுத்த தன்னிச்சையாக இடது அல்லது வலப்பக்கமாக வாலை ஆட்டுகின்றனவாம். “ஒரு நாய் இன்னொரு நாயை முதன்முதலாக பார்க்கும்போதும் அடிக்கடி பார்க்கும்போதும் அதன் உணர்வுகளில் மாற்றம் தெரிகிறது. அதேசமயம் தமது எதிரி மிருகங்களை பார்க்கும்போதும் நாய்கள் தலையை இடது பக்கமாக சாய்த்து தனது கோபத்தை வெளிப்படுத்தும்’’ என்ற கருத்தையும் பதிவு செய்கிறார் ஜோர் ஜியா வலூர்ட்டிஹரா.

எனவே நாய்கள் வாலாட்டு கின்றன என்பதற்காக அவைகளிடம் நீங்களும் வாலாட்டிவிடாதீர்கள். வால் வலது பக்கம் ஆடுகிறதா இடது பக்கம் ஆடுகிறதா என்பதை கவனித்து நெருங்குங்கள். வலது பக்கம் ஆட்டினால் பயப்பட வேண்டாம். இடது பக்கம் ஆட்டினால் எஸ்கேப் ஆக தயாராகிவிடுங்கள். வலது, இடது நமக்கு பார்ப்பதா நாய்க்குப் பார்ப்பதா என்ற குழப்பம் இருக்குமே! சந்தேகமே வேண்டாம்.. நாய்க்கு வலதுபுறம்தான்!

அதுசரி, வலம், இடம் பார்த்து நாம் உஷாராகும் வரைக்கும் நாய்கள் காத்திருக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x