Published : 11 Nov 2013 12:00 AM
Last Updated : 11 Nov 2013 12:00 AM

பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் பொறியியல் படிப்புகளில் சேருவதற்குத் திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர பி.இ.,பி.டெக்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாகக் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவை செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் ரெகுலர் முறையில் மட்டுமல்லாமல் பகுதி நேரமாகவும் பொறியியல் படிக்கலாம்.

இதற்கான வகுப்பு தினமும் மாலை 6.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும். தேவைப்பட்டால் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்படலாம். பகுதிநேரப் பி.இ., பி.டெக். படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி பொறியியல் டிப்ளமோ தேர்ச்சி ஆகும். படித்து முடித்துக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.

டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி

வேலைபார்க்கும் இடத்துக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட கல்லூரிக்கும் இடையேயான தூரம் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் வகுப்புக்கு வந்துவிட வசதியாக இந்த விதிமுறையை நிர்ணயித்து இருக்கிறார்கள்.

டிப்ளமோ தேர்வு மதிப்பெண் (75 சதவீதம்), பணி அனுபவம் அல்லது படித்து முடித்த காலம் ஆகியவற்றின் அடிப்படையில் பகுதிநேரப் படிப்புக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். பணி அனுபவத்துக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் 2 மதிப்பெண், படித்து முடித்த காலத்துக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும்.

இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2013-2014) அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, www.annauniv.edu/ptbe2013 என்ற இணையதள முகவரியில் திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த விவரங்களைப் பிரிண்ட்-அவுட் எடுக்கக் கடைசி நாள் 20-ம் தேதி ஆகும்.

அதன்பிறகு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600-ஐ (எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ.300 மட்டும்) “இயக்குநர் (மாணவர் சேர்க்கை), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-25” என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக எடுத்து விண்ணப்பத்தை “இயக்குநர், மாணவர் சேர்க்கை மையம், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-25” என்ற முகவரிக்கு 23-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x