Published : 27 Jan 2014 12:00 AM
Last Updated : 27 Jan 2014 12:00 AM

நீல நிற வைரம்

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமி நீல நிறத்தில் தோன்றுகிறது. அப்படித் தோன்றுவதற்குக் காரணம் பூமி கடல்களால் சூழப்பட்டிருப்பதுதான். பூமியில் பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல்கள், மேற்கண்ட மூன்றும் அண்டார்டிக் அருகே ஒன்றுகூடித் தெற்கு பெருங்கடலாகின்றன, வட துருவத்தில் ஆர்டிக் பெருங்கடல் என மொத்தம் 5 பெருங்கடல்கள் உள்ளன.

அதேநேரம் மத்தியத் தரைக்கடல், பால்டிக், செங்கடல் போன்றவை சிறிய கடல்கள். பெரும்பாலும் நிலத்தால் சூழப்பட்டு, ஒடுங்கிய நிலப்பகுதிகளுக்கு இடையே பெருங்கடல்களுடன் இவை இணைக்கப்பட்டிருக்கின்றன.

நாம் நினைப்பதற்கு மாறாகப் பெருங்கடல்கள், கடல்களில் தண்ணீர் தொடர்ச்சியாக நகர்ந்துகொண்டே இருக்கிறது. காற்று, அலை, சக்திவாய்ந்த கடல் நீரோட்டங்கள் போன்றவை கடலின் ஆழத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் கடல் இரண்டு முறை உயர்ந்து கடல் மணல் பரப்பை நனைக்கும். பிறகு பின்வாங்கும். இப்படி அலை உயர்ந்து தாழ்வதற்கு ஓதம் என்று பெயர். கடல் நீர் மட்டம் உயர்வதும் தாழ்வதும் உயர் அலை, தாழ் அலை எனப்படுகின்றன.

விண்வெளியில் உள்ள கோள்களும் நட்சத்திரங்களும் தங்களுக்கு அருகில் உள்ள பொருள்கள் மீது ஈர்ப்பு விசையைச் செலுத்துகின்றன. பூமி, நிலா, சூரியன் இடையிலான ஈர்ப்பு சக்திகளின் காரணமாகப் பூமி கோள வடிவத்துக்குப் பதிலாக முட்டை போல மாறிவிடுகிறது. இதனால் பூமியின் பக்க வாட்டில் இழுக்கப்படும் கடல்கள் பெரிதாக இருக்கின்றன. பூமி சுற்றிக்கொண்டிருப்பதால் இந்த வீக்கம் பூமிப்பந்து முழுக்க நகர்கிறது. அதன் காரணமாகவே அலைகள் எழுகின்றன. கடல் அலை உயர்வதும் தாழ்வதும் அலை மாறுபாட்டு விகிதம் (Tidal Range) எனப்படுகிறது. பெரும்பாலும் 7 - 10 அடி உயரத்துக்கு அலை உயரமாக எழும். சில நதி முகத்துவாரங்கள், குடாக்களில் உயர் அலை 56 அடி வரைகூட உயரலாம்.

உலகிலுள்ள பெருங்கடல்கள் அனைத்தும் வசதிக்காக வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன. வலிமை மிகுந்த காற்று இந்தத் தண்ணீரைத் தொந்தரவு செய்வதால் உருவாகும் நீரோட்டம், கடல் மேல்மட்ட நீரோட்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாகப் பெருமளவு தண்ணீர் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்குப் பயணம் செய்கிறது. கடலின் ஆழத்தில் தண்ணீரின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம், உப்புத்தன்மையில் ஏற்படும் மாற்றம் ஆகியவை காரணமாகப் பரவலான ஆழ்கடல் நீரோட்டங்கள் உருவாகின்றன.

பூமியில் மிகவும் ஆழமான பகுதிகள், பெரும்பள்ளங்கள் கடல்களிலேயே உள்ளன. இந்தப் பள்ளங்கள் எவ்வளவு ஆழமானவை என்றால், உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட்டையே மூழ்கடிக்கும் உயரம் (8 ஆயிரம் மீட்டர்) கொண்டவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x