Published : 05 Jan 2016 11:08 AM
Last Updated : 05 Jan 2016 11:08 AM

சேதி தெரியுமா?- 05/01/2016

நேர்முகத் தேர்வு ரத்து அமல்

மத்திய அரசின் சி, டி ஆகிய கீழ்நிலைப் பிரிவுப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து முடிவு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் அறிவித்தபடி இது அமலுக்கு வந்தது. மேலும் முக்கிய ஆவண நகல்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளின் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறையும் 1-ம் தேதி முதல் ரத்தானது. இத்தகைய நகல்களில் விண்ணப்பதாரரே சுய ஒப்பம் அளித்தால் போதும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்குப் பரிந்துரை

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் டிசம்பர் 28 அன்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் குழு, பொதுக் கணக்குக் குழு, மதிப்பீட்டு குழு ஆகியவை ஆய்வு செய்து நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது அவசியம் என்று பரிந்துரை செய்தன. இதுதொடர்பாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பரிந்துரை செய்தார். நாடாளுமன்றக் கட்டிடம் பழுதடைந்துவருவதாலும், இடப் பற்றாக்குறை அதிகரித்துவருவதாலும், 2026-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்தப் பரிந்துரையை சுமித்ரா மகாஜன் செய்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1927-ல் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்துக்கு தற்போது 88 வயதாகிறது.

பராக்... பராக்...

இந்திய - இஸ்ரேல் கூட்டு தயாரிப்பான ‘பராக்-8’ ஏவுகணை டிசம்பர் 30 அன்று வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்தது. அரபிக்கடலில் ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பல் ஏவுதளத்திலிருந்து பராக்-8 ஏவுகணை ஏவப்பட்டது. இந்தியாவில் இந்த ஏவுகணை சோதிக்கப்படுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்பு நவம்பர் 27 அன்று இஸ்ரேல் கடற்படையின் போர்க்கப்பலில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை பகல், இரவு என எல்லா நேரங்களிலும், மழை, வெயில், கடும் குளிர் என எல்லாப் பருவ நிலையிலும் ஏவுவதற்கு எளிதானது.

பிரம்மாண்ட சுரங்க ரயில் நிலையம்

ஆசியாவின் மிகப் பெரிய சுரங்க ரயில் நிலையம் சீனாவின் சென்ஜென் நகரில் டிசம்பர் 30 அன்று திறக்கப்பட்டது. சென்ஜென் சுரங்க ரயில் நிலையத்தின் மொத்தப்

பரப்பளவு 1,47,000 சதுர அடி. இது 21 கால்பந்து மைதானங்களுக்குச் சமமாகும். பூமிக்கடியில் 3 அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரம் பயணிகள் ரயிலுக்காகக் காத்திருக்க முடியும். இந்த ரயில் நிலையம் வழியாக முதல் கட்டமாக 11 அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த நகரிலிருந்து 15 நிமிடங்களில் ஹாங்காங் செல்ல முடியும்.

காஸ் மானியத்துக்குக் கட்டுப்பாடு

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடைய வரி செலுத்துவோருக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்து மத்திய அரசு டிசம்பர் 28 அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி இப்பிரிவினர் இனி சந்தை விலையில் இந்த சிலிண்டரை வாங்க வேண்டும். வருமான வரி செலுத்துவோரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டுவோரின் கணக்கீடு இல்லை. எனவே வரும் ஜனவரி 2016 முதல் சிலிண்டர் பதிவு செய்யும்போது, நுகர்வோர் தானாக முன்வந்து அளிக்கும் தகவலின் அடிப்படையில் இத்திட்டம் அமலுக்கு வரும். மானியச் சலுகைகள் உரியவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

- தொகுப்பு: மிது கார்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x