

இண்டிகா என்ற புத்தகத்தில் கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் கூறியதாக மேற்கோள் காட்டப்படும் சில விஷயங்களில், இந்தியர்களைப் பற்றிய விவரிப்புகளும் உள்ளன.
இந்திய உடை
இந்தியர்கள் உயரமாகவும் மெலிந்தவர்களாகவும் காணப்பட்டனர். கறுப்பு நிறத்தில் இருந்த அவர்கள், வெள்ளைப் பருத்தி ஆடைகளையே உடுத்தியிருக்கிறார்கள். வேட்டியைப் போன்ற கீழாடை, தோளைச் சுற்றிய மேலாடை, சில நேரம் தலையைச் சுற்றியும் ஆடை அணிந்திருக்கிறார்கள்.
செல்வந்தர்கள் பகட்டான வண்ண ஆடைகளை அணிந் திருக்கின்றனர். அவர்கள் தாடிகளுக்கு வெள்ளை, நீலம், ஊதா, பச்சை போன்ற சாயங்களை ஏற்றிக் கொண்டிருந்தார்களாம்.
யானைத் தந்தத்தால் ஆன காதணிகள், நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகளால் அலங்கரித்துக்கொண்டார்கள். மலர்களைச் சூடிக் கொள்வதிலும் ஆர்வம் காட்டியிருக்கின்றனர். கனமான அடிப் பாகங்களைக் கொண்ட வெண்மையான தோல் காலணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். சூரிய வெப்பம் தாக்காமல் இருக்கக் குடைகளையும் பயன் படுத்தியுள்ளனர்.
மன்னரோ, தங்க ஜரிகை வேலைப்பாடு நிறைந்த மஸ்லின் ஆடை அணிந்து பொற் பல்லக்கில் பவனி வந்திருக்கிறார்.
உணவும் உடலும்
இந்தியர்கள் ஆரோக்கியத் துடன் நீண்ட நாள் உயிர் வாழ்ந்திருக்கின்றனர். அதற்குக் காரணம் எளிமையான உணவு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட விழாக்களின்போது மட்டும் அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுவை அருந்தியதுதான். மற்ற நாள்களில் மது அருந்தும் பழக்கம் இருக்கவில்லை.
மக்களுக்கு நோய் வந்தாலோ, தீவிர மனக்கவலை அடைந்தாலோ யோகிகளை நாடியுள்ளனர். மரப்பட்டைகளை ஆடைகளாக அணிந்த யோகிகள், காடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள். இயற்கையாகக் கிடைத்த பழங்களை உண்டுள்ளனர். மூலிகை வேர்கள், பூக்கள், உடற்பயிற்சிகளே மருந்துகள். இதை வைத்துப் பார்க்கும்போது நமது பாரம்பரிய சித்த-ஆயுர்வேதம்-யோகா மருத்துவத்தையே மெகஸ்தனிஸ் கூறியதாகத் தெரிகிறது.
பெண்களின் நிலை
பெண்களுக்கு அன்றைக்குக் கல்வி வழங்கப்படவில்லை. வரதட்சிணை முறை அப்போது வழக்கத்தில் இல்லை. அது மட்டுமில்லாமல் மெகஸ்தனிஸை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பழக்கம், தங்கள் மகள்களை மணம் முடித்துக் கொடுக்க முடியாத ஏழைப் பெற்றோர், பெண்களைச் சந்தைகளில் விற்க முற்பட்டதுதான்.
அது மட்டுமில்லாமல் வேறு சாதியில் திருமணமோ, குறிப்பிட்ட சாதியினர் வேறு தொழிலோ செய்ய அனுமதிக்கப்படவில்லை. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றாகக் கூடி உட்கார்ந்து உணவு உண்பதில்லை என்றும் மெகஸ்தனிஸ் கூறியிருக்கிறார்.