துறை அறிமுகம்: வாழும் அச்சுத் தொழில்நுட்பம்

துறை அறிமுகம்: வாழும் அச்சுத் தொழில்நுட்பம்
Updated on
2 min read

இணைய ஊடகம் வந்த பின்னர் அச்சு ஊடகத்துக்கு எதிர்காலம் இல்லை என்று சொல்லப்பட்ட காலம் உண்டு. ஆனால் உலகம் முழுவதும் இணைய ஊடகம் பரவிய பின்னரும் அச்சு ஊடகம் பலம் வாய்ந்ததாகவே உள்ளது.

பல தொழில்திறன்கள் தேவை

அமெரிக்காவில் நீல்சன் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், ஒரு பிராந்தியத்தில் அச்சுப் பத்திரிக்கைச் செய்தியை 28 சதவீதம் பேர் படிக்கிறார்கள் எனில் அதே செய்தியை இணையம் வழியாக 10 சதவீதம் பேர் மட்டுமே படிக்கிறார்கள். இணையம் மற்றும் முகநூல் மூலம் ஒரு செய்தித் தளத்துக்கு வருபவர்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அங்கே தங்கியிருப்பதில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இணையம் வழியாகத் தரப்படும் விளம்பரங்கள் வாசகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, அச்சிதழ் விளம்பரங்களே வாசகர்களிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. டைப்செட்டிங், பக்க வடிவமைப்பு, பேஸ்ட்டிங், ப்ளேட் மேக்கிங், இமேஜ் செட்டிங், பிரிண்டிங், பைண்டிங் என அச்சுத் தொழில்நுட்பத்தின் அனைத்துப் படிநிலைகளிலும் குறிப்பிட்ட தொழில்திறன்கள் தேவையாக உள்ளன.

ஐ.டி.ஐ. என்றழைக்கப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் ப்ளேட் மேக்கிங், ஆப்செட் மெஷின் ஆபரேஷன், ஸ்கிரீன் பிரிண்டிங், கேமரா ஆபரேஷன், டிடிபி, புக் பைண்டிங் ஆகியவற்றில் சான்றிதழ் பயிற்சி தரப்படுகிறது. இதில் ஏட்டுப் படிப்பு மட்டுமின்றி நேரடி செய்முறைப் பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் வளரும் அச்சுத் தொழில்நுட்பம்

இந்தியாவைப் பொறுத்தவரை வேகமாக வளர்ந்துவரும் தொழில் துறைகளில் ஒன்று அச்சுத் தொழில். இந்தியாவின் அனைத்து மாநகரங்களிலும் நூற்றுக்கணக்கான தரமான அச்சுக்கூடங்கள் இன்னமும் சுறுசுறுப்பாக இயங்கிவருகின்றன.

அரசுத் துறைகளில் பெரும்பாலானவை அச்சு மற்றும் பதிப்புச் செயல்பாட்டுக்காகத் தனிப்பிரிவையே வைத்துள்ளன. இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகம், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், இந்திய தத்துவ ஆய்வுக் கழகம், இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம், சாகித்ய அகாடமி, என்.சி.இ.ஆர்.டி., பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கல்வித் துறை ஆகியவை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பிரசுரங்களையும் நூல்களையும் வெளியிடுகின்றன.

அச்சுத் தொழில்நுட்பத்தைக் கல்வியாகப் பயின்றவர்களுக்கு விளம்பர நிறுவனங்கள், பத்திரிகை நிறுவனங்கள், அரசு அச்சகங்கள், அச்சு இயந்திரத் தொழிற்சாலைகள், பேக்கேஜிங் தொழிற்கூடங்கள், புத்தகங்கள் அச்சிடும் நிறுவனங்களில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகள் சார்ந்து அச்சுத் தேவைகள் அதிகரிக்கும் நிலையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அச்சு தொழில்நுட்பவியலாளர்களுக்கான வாய்ப்புகளும் தேவைகளும் அதிகமாகவே இருக்கும்.

வண்ணமயமான வாய்ப்புகள்

அச்சுத் தொழில்நுட்பம் கைவரப்பெற்றவர்களுக்குப் பல துறைகளில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வெளியீட்டு நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் அச்சுக்கூடங்கள், ஆப்செட், ப்ளெக்சோகிராஃபி மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிற்கூடங்கள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியலாம். நாளிதழ், பத்திரிகை ஆகியவற்றில் அச்சடிக்கப்படும் தகவல்களின் எழுத்துரு, நிறச் சேர்க்கை, பக்க அளவு உள்ளிட்ட பலவற்றைத் தீர்மானிக்கும் துறையான பிரீ-பிரஸ் சொல்யூஷனிலும் வேலை கிடைக்கும்.

இது தவிர, டிசைனிங் மற்றும் டிஜிட்டல் பிரிண்டிங், செக்யூரிட்டி பிரிண்டிங் (ரூபாய் நோட்டுகள் மற்றும் காசோலைகள் அச்சிடுதல்), தொழிலுக்கான மென்பொருள் சொல்யூஷன், எலக்ட்ரானிக் பப்ளிஷிங், கலர் மேனேஜ்மெண்ட் சொல்யூஷன், பேக்கேஜிங் - பிரிண்ட் ஃபினிஷிங் அண்ட் கன்வர்டிங், ஆய்வு மற்றும் மேம்பாட்டு, தரக்கட்டுப்பாடு போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது.

எங்கே படிக்கலாம்?

இளங்கலை பிரிண்டிங் டெக்னாலஜி

# அண்ணா பல்கலைக்கழகம், காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கிண்டி, சென்னை

# அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகம், கோவை

டிப்ளமோ இன் பிரிண்டிங் டெக்னாலஜி

# இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிரிண்டிங் டெக்னாலஜி, சென்னை

# இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிண்டிங் டெக்னாலஜி, சிவகாசி

# சலேஷியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிராஃபிக் ஆர்ட்ஸ், சென்னை

# சதர்ன் ரீஜனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிண்டிங் டெக்னாலஜி, அடையாறு, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in