Published : 26 Apr 2014 10:00 AM
Last Updated : 26 Apr 2014 10:00 AM

‘விளம்பரங்களுக்கு கவர்ச்சி தேவை’: விளம்பரப் பட இயக்குநர் சாதிக் பேட்டி

திரைத்துறையை விட அதிகம் சவால் நிறைந்த துறை விளம்பரத்துறை. நாம் சொல்ல வேண்டிய விஷயத்தை சில வினாடிகளிலோ, நிமிடங்களிலோ மக்கள் மனதில் பதியவைத்துவிட வேண்டும் என்பதே இதற்கு காரணம். இப்படிப்பட்ட விளம்பரத்துறையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சாதிக். பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கியுள்ள அவரை, இந்தத் துறையில் உள்ள சவால்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக சந்தித்தோம்.

நீங்கள் இதுவரை எத்தனை விளம்பரப் படங்களை செய்திருக்கிறீர்கள்?

இதுவரைக்கும் 300 விளம்பரப் படங்களை செய்திருக்கிறேன். முக்கியமாக ஆச்சி மசாலா, சரவணா கோல்ட் பேலஸ்,டி.வி.எஸ் விளம்பரம் என்று பல விளம்பரங்களைச் சொல்லலாம்.

ஒரு விளம்பரத்தை இயக்கும்போது, அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எந்த அடிப்படையில் முடிவு செய்வீர்கள்?

சில நேரம் பொருட்களின் தயாரிப்பாளர் களே விளம்பரம் எப்படி அமையவேண்டும் என்று சொல்வார்கள். சில சமயங்களில் நாங்களே முடிவு செய்வோம். எனக்கு ஒரு யோசனை தோன்றினால் அது குறித்து என் டீமுடன் கலந்து பேசி அதற்கு முழு உருவம் கொடுத்து ஷூட் செய்வோம். நான் செய்யும் விளம்பரப் படங்கள் அதிகமாக பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்களைப் பற்றிய தாகத்தான் இருக்கும். இதற்காக பெண்களின் நடை, உடை, பாவனைகள், கடைகளில் அவர்கள் எப்படி ஒரு பொருளைக் கேட்டு வாங்குகிறார்கள் என்றெல்லாம் பல விஷயங்களை கவனிப்பேன். நான் விளம்பரப் படங்களை இயக்க எனக்கு பல வழிகளில் உதவியாக இருக்கிறது.

சினிமாவை விட்டு நீங்கள் ஏன் விளம்பரத்துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?

சினிமாவில் நடிப்பதற்காக வந்தவன் நான். ‘கல்யாண கலாட்டா’, ‘அரிச்சந்திரா’, ‘படையப்பா’ உள்ளிட்ட பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். பல இடங்களில் வாய்ப்பு கேட்டு அலைந்தும் கிடைக்காமல் போன பிறகுதான் நான் இயக்குநராக முடிவெடுத்தேன். முதலில் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் நான் எடுத்த சில விளம் பரங்கள் ஹிட் ஆனதும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

விளம்பரங்களுக்கு திரைப்பட நட்சத்திரங்களை பயன்படுத்துவது பலமா? பலவீனமா?

கண்டிப்பாக பலம்தான். ஒரு படம் ஹிட்டானால் அதில் நடித்தவர்களை வைத்து விளம்பரம் செய்தால் நம் விளம்பரமும் ஹிட் ஆகும். அதோடு பிரபலங்கள் ஒரு பொருளைப் பற்றி பேசினால் மக்களிடையே அதற்கு நம்பிக்கை அதிகரிக்கிறது. அந்த பொருளின் விற்பனையும் கூடுகிறது.

அதே நேரத்தில் விளம்பரப்படங்களில் மாடல்களாக ஹிட் ஆன பிறகு நாயகிகளான நடிகைகளும் இருக்கிறார்கள். விஜயலட்சுமி, அஞ்சலி, தன்ஷிகா, தமன்னா, ப்ரியாமணி இப்படி பல பேர் விளம்பரப் படங்களில் ஹிட் ஆன பிறகுதான் நாயகிகளாக ஹிட் ஆனார்கள். படங்களுக்கு நாயகிகளை தேடும் பலர் விளம்பரப் படங்களைப் பார்த்து தேர்ந்தெடுக்கிறார்கள். நடிகைகளும் இந்த நன்றியை மறப்பதில்லை. குறிப்பாக தமன்னா முன்னணி நடிகையாக இருந்தாலும் விளம்பரப் படத்தில் நடிக்க எப்போது அழைத்தாலும் வருவார். விளம்பரங்கள் தங்களை மக்கள் மனதில் பதிய வைக்கும் என்ற நம்பிக்கை நம் சினிமா நட்சத்திரங்களுக்கு அதிகம் உண்டு.

எந்த மாதிரியான விளம்பரங்களைச் செய்வது கஷ்டம்?

குழந்தைகளை வைத்து விளம்பரங்கள் செய்வது கஷ்டம். அவர்கள் விளையாட்டுத் தனமாக இருப்பார்கள். பக்குவமாக அவர்களிடம் வேலை வாங்க வேண்டும்.

விளம்பரத் துறைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது?

முன்பெல்லாம் போட்டோ எடுத்து, அதை பிரிண்ட் போட்டு போய் காட்டுவோம். இப்போது வாட்ஸப், ஃபேஸ்புக்கில் அனுப்பினால் போதும், உடனே ஒ.கே சொல்லிடுவாங்க. முன்பு ரிசல்டுக்காக காத்திருப்போம், இப்போது உடனே ரிசல்ட் கிடைத்துவிடுகிறது.

இப்போது விளம்பரங்கள் என்றாலே கவர்ச்சி என்று ஆகிவிட்டதே. இதற்கு என்ன காரணம்?

சில விளம்பரங்களுக்கு கவர்ச்சி என்பது தேவைதான். என்னோட விளம்பரங்களில் அது தெரிந்தும் தெரியாமல் இருக்கும். விளம்பரங்களில் தேவையான அளவு கவர்ச்சி காட்டுவது தப்பில்லை. அதிகமாக கவர்ச்சி காட்டுவதுதான் தப்பு.

திரைப்படங்களை இயக்க உங்களுக்கு ஆர்வமில்லையா?

நல்ல தயாரிப்பாளருக்காக காத்திருக் கிறேன். ரெண்டு மூணு கதைகள் வச்சிருக் கேன். தயாரிப்பாளர் கிடைத்ததும் சினிமா விலும் வெற்றிக்கொடி நாட்டுவேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x