Last Updated : 25 Sep, 2016 11:57 AM

 

Published : 25 Sep 2016 11:57 AM
Last Updated : 25 Sep 2016 11:57 AM

பருவத்தே பணம் செய்: சிக்கனமும் சேமிப்புதான்!

தன் அப்பாவிடம் இப்படிப் பெருமையாகச் சொன்னான் ஒரு சிறுவன்:“அப்பா நான் இன்னைக்கு ஸ்கூல்லுக்குப் போகும்போது பஸ் பின்னாடியே ஓடி காசை மிச்சம் பண்ணிட்டேன்”. அதற்கு அப்பா, “ஆட்டோ, டாக்ஸி பின்னாடி ஓடியிருந்தா இன்னும் அதிகமா மிச்சம் பண்ணியிருக்கலாமே” என்று சொன்னார். உண்மையில் இது பணத்தை மிச்சப்படுத்தும் வேலையல்ல. கஞ்சத்தனம். அவசியத் தேவைகளுக்கும் செலவழிக்காமல் கஞ்சத்தனமாக இருப்பது வேறு. செலவைக் குறைப்பது பற்றி நான் சொல்லவருவது வேறு!

உங்கள் வீட்டில் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கலாம். இருவரும் ஆளுக்கொரு வண்டி வைத்திருக்கலாம். தத்தம் வசதிக்குப் பயணிக்க வண்டி உதவியாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இரண்டு வண்டிகளிலும் பெட்ரோல் போடுவதற்குப் பதிலாக ஒரே வண்டியில் இருவரும் பயணிக்கலாம். வேறு வேறு நேரமாக இருக்கும்போது தனித்தனி வண்டிகளைப் பயன்படுத்தலாம். கூடுமான வரையில் ஒரே வண்டியைப் பயன்படுத்துவது செலவைக் குறைக்கும் முக்கியமான வழி!

இப்படிக் கணக்குப் போட்டால் செலவைக் குறைக்கும் சேமிப்பு பற்றி உங்களுக்கே தெரியவரும். அதற்காக அறுபது ரூபாய் கொடுத்து வாங்கும் பொன்னி அரிசிக்குப் பதிலாக மலினமான விலையில் அரிசி வாங்கினால் சேமிப்புதானே என்று கணக்குப் போட்டு விடாதீர்கள். சிக்கனத்துக்கும் கஞ்சத் தனத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நம் அடிப்படைத் தேவைகளில் கைவைக்கவே கூடாது. மொத்தக் குடும்பமும் வயிறாரச் சாப்பிட வேண்டும். அழகாகக் காட்டும் தரமான உடைகளை அணிய வேண்டும். வசதியான வீட்டில் குடியிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எந்தக் குறையும் இல்லாத நாட்களைக் கொடுக்க வேண்டும். இதற்குள் கொஞ்சம் மிச்சம் பிடித்துச் சிக்கனமாக இருக்க வேண்டும். இதுதான் முக்கியமான விஷயம். இது எப்படி என்று கேட்கிறீர்களா? பார்த்துவிடலாம்.

முதலில் உணவு. நீங்கள் எப்படியெல்லாம் வாங்குகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்கள். அடடே… தம்பி, அப்பளம் பொறிக்கலாம்னு பார்க்கிறப்பதான் தெரியுது. எண்ணெய் இல்லை, பக்கத்துக் கடைல ஒரு பாக்கெட் எண்ணெய் வாங்கிட்டு வந்துடுடா என்று சொல்லும் அம்மாவா நீங்கள்? மொத்தமாக மாத லிஸ்ட் போட்டுப் பொருட்களை வாங்குங்கள். உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கடையில்கூட வாங்குங்கள். ஆனால், சில்லறை சில்லறையாக ஒவ்வொரு பொருளாக வாங்காதீர்கள். மொத்தமாக வாங்கும்போது நிச்சயமாகச் சில்லறை விலையைவிடக் குறைவாகக் கிடைக்கும். இதில் என்ன பெரியதாக மிஞ்சப் போகிறது என்று நினைக்காமல் ஒரு மாதம் முயற்சி செய்து பாருங்கள். இது சிக்கனத்துக்கான ஒரு வழி!

அடுத்து உடைகள். வேண்டிய உடைகளை எடுக்கத்தான் வேண்டும். பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது நல்ல ஆடைகள் வேண்டும். நாம் அலுவலகத்துக்குச் செல்லும்போது சாயம் போனதையும் வெளிறியதையும் அணிந்துகொண்டு செல்ல முடியாது. நல்ல ஆடைகள் அத்தியாவசியம்தான். ஆனால், ஒருமுறை கடைக்கு போய்த் திரும்பினால் பர்ஸ் மெலிந்து டெங்கு வந்த மனிதரைப் போலாகிவிடும்.

இந்த நிலைமை இப்போது இல்லை. இன்றைய சூழலில் சிறு நகரங்களில்கூட சேல் என்ற வார்த்தையை உச்சரிக்காத கடைகள் இல்லை என்பதுதான் யதார்த்தம். சேல் என்றாலே ஒன்றுக்கும் உதவாத துணிகளைத் தள்ளிவிடும் தள்ளுபடி என்ற காலம் மாறிவிட்டது. நல்ல தரமான துணிகளைக்கூடத் தள்ளுபடி விலையில் விற்கும் கடைகள் வந்துவிட்டன. அவர்கள் கடையில் நாள்பட்டுத் தேங்கிக் கிடக்கும் துணிகளைத் தள்ளிவிடாமல் தங்கள் மொத்த விற்பனையை அதிகரித்துக்கொள்ளத் தள்ளுபடி விற்பனையை ஓர் உத்தியாகப் பயன்படுத்தும் கடைகள் பெருகிவிட்டன. மிகப் பெரிய பிராண்ட்களைக்கூட இப்படி விற்கின்றனர். அந்தக் கடைகளைத் தேடித் துணிகளை வாங்கினால் அதற்குப் பெயர்தான் சிக்கனம்.

அடுத்து என்ன? வசதியான வீட்டில் குடியிருப்பது. வசதி என்பது அவரவர் மனநிலை சம்பந்தப்பட்டது. சிலருக்கு பங்களா வீட்டில் குடியிருந்தால்கூட திருப்தி வராது. சிலர் ஒற்றை அறையில் இருந்தாலும் சந்தோஷமாக இருப்பார்கள். நாம் வசதியான வீடு என்று சொல்வது கைகாலை நீட்டிப் படுக்க வசதியான வீடு. பிள்ளைகள் ஓடி விளையாட இடம் கொடுக்கும் அளவுக்கு வசதியான

வீடு. பெரியவர்கள் காற்றாட ஈஸிசேர் போட்டு அமரும் வசதியான வீடு. இதுதான் அடிப்படையான தேவை.

இதை மாத வாடகையாகக் கொடுத்தால் ஆகும் செலவையும் இரண்டு மூன்று வருடங் களுக்கு ஒப்பந்தம் போடும் வகையில் லீஸுக்கு எடுத்தால் ஆகும் செலவையும் கணக்கிட்டுப் பாருங்கள். அப்போது உங்களுக்குச் சிக்கனம் என்றால் என்ன என்று புரியும்.

இந்த அடிப்படைத் தேவைகளைத் தாண்டியும் சிக்கனத்தைப் பற்றிச் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. நம் பொழுது போக்குகளைக் கணக்கிட்டால் உங்களுக்கே புரியும். வாரம் ஒரு சினிமா, மாதம் பிறந்தால் சுற்றுலா என்று இருக்கும் உங்கள் பாதையைக் கொஞ்சம் மாற்றுங்கள். ஒரு வாரம் சினிமா என்றால் ஒரு வாரம் கோயில், ஒரு மாதம் சுற்றுலா என்றால் ஒரு மாதம் உறவினர் வீடு என்று திட்டத்தைக் கொஞ்சம் மாற்றினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முடியும்.

அதேபோல ஓட்டல் சாப்பாடு. ‘என் பிள்ளைகளுக்கு ஞாயித்துக் கிழமைன்னா சிக்கன் பிரியாணியும் மட்டன் சுக்காவும் வேணும்’ என்று சொல்லும் தாய்மார்களே, அந்த இரண்டும் ஓட்டலில்தான் கிடைக்குமா? நீங்களே வீட்டில் சமைத்தால் எத்தனை மிச்சம்… யோசியுங்கள்! ஒரு நாள்தான் கிச்சனிலிருந்து விடுதலை கிடைக்குது, அதுக்கும் வேட்டு வைக்கிறீங்களே என்று சொல்லாதீர்கள். பிரியாணி கேட்கும் பிள்ளைகளையும் சப்புக் கொட்டி சாப்பிடும் வீட்டுக்காரரையும் கிச்சனுக்குள் இழுத்துவிடுங்கள். அந்தக் ‘காந்தலே ருசி’க்கும்!

அடுத்ததாக நாம் சேமிப்புக்குள் போயிவிடலாம். இதைச் சொன்னதுமே எந்த வயதில் சேமிக்கத் தொடங்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழுமே? அதைச் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி. நீங்கள் பிறந்தது சுகப் பிரசவமா, சிசேரியனா? பதில் சொல்லுங்கள். அங்கிருந்து சேமிப்பு பற்றிப் பேசத் தொடங்கலாம்!

(தொடர்ந்து சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்.
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x