Last Updated : 09 May, 2017 06:26 PM

 

Published : 09 May 2017 06:26 PM
Last Updated : 09 May 2017 06:26 PM

மனதில் நிற்கும் மாணவர்கள்-10: யாமிருக்க பயமேன்?

நான் பணியாற்றிய கல்லூரிகள் இரண்டும் ஆண்கள் கல்லூரியாக இருந்து பின்னர் இருபாலர் கல்லூரியாக மாறியவை. இத்தகைய கல்லூரிகளில் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மகளிர் கல்லூரிகளில் மட்டுமல்லாமல் இருபாலர் கல்லூரிகளிலும் பெண்கள் பயில இது ஒரு நல்ல வாய்ப்புத்தான். எனினும் இளங்கலை பயில வரும் பெண்களில் மேற்படிப்பு, வேலை என்றெல்லாம் செல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

தப்பிப்பவர்கள் அரிது

இளங்கலை பயிலும்போதே பல பெண்களுக்குத் திருமணம் ஆகிவிடும். அல்லது படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துவிடுவார்கள். மாப்பிள்ளை பார்க்கும் இடைக்காலத்தில் வீட்டில் இருப்பதற்குக் கல்லூரி சென்று வரட்டும், திருமண அழைப்பிதழில் பெயருக்குப் பின்னால் பட்டம் போட்டுக்கொள்வது ஒரு மதிப்பாக இருக்கும் என்னும் கணக்கில்தான் பெண்களைக் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். அந்த வலைக்குள் சிக்காமல் தப்பிப்பவர்கள் அரிது.

நான் அரசு கல்லூரிப் பணியில் சேர்ந்தபோது மூன்றாமாண்டு பயின்றவர் வசந்தா. அவர் இப்போது அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஆனால் அவருடன் பயின்ற பெண்கள் என்னவானார்கள்? நான் பணியில் சேர்ந்தபோது முதலாமாண்டில் பயின்ற பெண்கள் மூவர். கல்பனா, சிவகாமி, அன்புராணி ஆகியோர். மூவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

எத்தனையோ அன்புராணிகள்

அன்புராணியின் ஊருக்கு ஒருமுறை சென்றபோது அவரைப் பார்க்க விரும்பி அவருடன் பயின்ற மாணவர் ஒருவரிடம் கேட்டேன். தன்னுடன் படித்தவர்கள் எல்லாம் மேலே படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள், படிக்காமல் கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்று வீட்டில் இருக்கிறோமே, ஐயாவை எந்த முகத்தோடு பார்ப்பேன் என்று வெட்கப்படுகிறார். அதனால், உங்களைப் பார்க்க வர மறுக்கிறார் என்று செய்தி எனக்கு வந்தது. வருத்தமாக இருந்தது. இப்படி எத்தனையோ அன்புராணிகள்.

என் மாணவர்களில் பெண்கள் படித்து வேலைக்குச் சென்றிருக்கும் செய்தி அறிந்தால் அது எனக்குப் பெருமகிழ்ச்சி தரும் விஷயம். நானும் வகுப்பில் பெண்களுக்கு சுரணை வர வேண்டும் என்பதற்காக அவர்களைத் தூண்டும் விதமாகப் பேசுவதுண்டு. “உங்களுக்கு என்னம்மா வேலைக்குப் போகணும்னு கெடையாது. எவனோ சம்பாதிச்சுப் போடப் போறான்” என்பேன். ரோஷத்தோடு “நாங்களும் படிச்சு வேலைக்குப் போவங்கய்யா” என்பார்கள்.

தடையைத் தாண்டி

“பொண்ணுங்க படிச்சு எதுக்கு ஆகப் போகுது”, “என்னம்மா எப்பக் கல்யாணம்” என்றெல்லாம் அவர்களைச் சீண்டுவதுண்டு. அந்தச் சீண்டலின் காரணமாகவோ என்னவோ சிலர் மேலே படித்து வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். பதினேழு பதினெட்டு வயதில் ஆண்களுக்கே திருமணம் செய்துவிடும் வழக்கம் கொண்ட பிரிவினரே பெரிதும் அரசுக் கல்லூரிக்குப் பயில வருபவர்கள். அப்பிரிவினர் பெண்களைப் படிக்க வைப்பார்களா? அப்பெண்களுக்கும் படிப்பைப் பற்றிப் பெரிதாகக் கவனம் இருக்காது. காதல் வயப்பட்டு உடனடித் திருமணம், உடன்போக்கில் போய்விடுவது என்பதெல்லாம் சாதாரணம்.

பெண்ணைப் பற்றிச் சிறு சந்தேகம் வந்துவிட்டாலும் உடனே மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்துவிடும் பெற்றோர்களும் உண்டு. அன்றாட வருமானத் தேவை உள்ள குடும்பங்கள். அவர்களால் பையன்களைப் படிக்க வைக்கவே செலவு செய்ய இயலாது. இந்நிலையில் பெண்களைப் படிக்க வைப்பதைப் பற்றிச் சிந்திப்பது ஏது? கல்லூரியில் அவர்கள் காலடி எடுத்து வைப்பதே பெரிய சாதனைதான். அதில் தடைகளைத் தாண்டி மேலே வரும் ஒவ்வொரு பெண்ணும் சாதனை புரிபவர்தான்.

குற்றம் நடக்காத பகுதி

என் மனைவி அரசுப் பள்ளி ஆசிரியையாக வால்பாறையில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். என் மகளும் ஓராண்டுக்கு மேல் வால்பாறையில் தங்கிப் பயின்றார். இருவரையும் புதிய இடத்தில் விட்டிருக்கும் அச்சம் எனக்குள் மிகுந்திருந்தது. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து அவர்களுக்குத் தைரியம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான அடித்தட்டு மக்கள் மிகுதியாக வசிக்கும் பகுதி வால்பாறை. அவர்கள் இறுக்கமான மதிப்பீடுகளில் அத்தனை ஆர்வம் காட்டுபவர்கள் அல்லர். ஆகவே வால்பாறைப் பகுதி குற்றமே நடக்காத பகுதியாகவும் காவல்துறைக்குப் பெரிதும் வேலை இல்லாத பகுதியாகவும் சிறந்திருக்கிறது. எனினும் நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பயம் எங்களுக்குப் போகவில்லை. அவர்களுடன் சிலநாள் தங்கியிருக்கச் சென்றிருந்தேன் நான்.

வால்பாறையிலிருந்து சின்கோனா செல்லப் பேருந்தில் ஏறியிருந்தோம். ஜன்னல் அருகில் “ஐயா” என்றொரு குரல். “இங்கே யார் நம்மை ஐயா என்று கூப்பிடுவது” எனத் திரும்பிப் பார்த்தால் ஒரு பெண் காவலர். அட, சரளா. நான் பணியில் சேர்ந்தபோது இரண்டாமாண்டு பயின்று கொண்டிருந்தவர்.

விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பிரிவில் பரிசுகளை வென்ற வீராங்கனை. விளையாட்டுத் திறன் காரணமாகக் காவல்துறையில் வேலை பெற்றிருந்தார். வால்பாறையில் மாப்பிள்ளை அமைந்ததால் அங்கேயே இடமாறுதல் பெற்று வந்துவிட்டார்.

தெரிந்தவர்கள் யாருமே இல்லை என்றிருந்த ஊரில் காவல்துறையிலேயே தெரிந்த முகம் ஒன்று. என் மனைவிக்கு அறிமுகம் செய்துவைத்தேன். என்னை விடவும் பெரிதும் மகிழ்ந்தவர் என் மனைவிதான். “நீங்க கவலப்படாதீங்கய்யா, அம்மாவ நான் பாத்துக்குறேன்” என்று தைரியம் கொடுத்தார் சரளா.

அவருக்குப் பெரும்பாலும் வால்பாறைப் பேருந்து நிலையம், கடைவீதிப் பகுதிகளில்தான் பணி இருக்கும் என்றார். அதற்குப் பிறகு அடிக்கடி சரளாவைப் பார்த்துப் பேச என் மனைவிக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. மலைப் பகுதியில், அத்தனை தூரத்தில் பணியாற்றுவது பற்றி நான் கவலைப்படும் போதெல்லாம் எனக்குத் தைரியம் சொல்வார் என் மனைவி. “சரளா இருக்கும்போது எனக்கு என்ன பயம்?” என்பது அவர் சொல்லும் வாசகம்.



பெருமாள் முருகன்,எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x