Published : 05 May 2017 10:23 AM
Last Updated : 05 May 2017 10:23 AM

என்னால் முடியும் என்றால் அவர்களாலும் முடியும்: தனுஷ் நேர்காணல்

"என் வாழ்க்கையில் மிகவும் பிடித்தது எழுதுவது. நேரம் போவதே தெரியாமல் மனதுக்குப் பிடித்ததை எழுதிக்கொண்டே இருப்பேன். அதனால் ஒரு கதை தோன்றினால், அதை முழுமையாக எழுதிவிட்டுத்தான் அடுத்தது என்ன என யோசிப்பேன். அப்படி ஒரு நாள் தோன்றிய கதை இந்தளவுக்கு வரவேற்பு பெற்றிருப்பதைக் காணும் போது சந்தோஷமாக இருக்கிறது" என்று பேசத் தொடங்கினார் தனுஷ். 'வடசென்னை' படத்துக்காகத் தயாராகிக்கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து...

'ப.பாண்டி'க்குப் பிறகு இன்னும் சினிமாவில் முழுவதுமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் எதைச் சொல்வீர்கள்?

’ப.பாண்டி’க்கு நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது என்பதற்காக எனக்கு எல்லாமே தெரியும் எனச் சொல்ல முடியாது. திரையுலகம் என்பது கடல் போன்றது. அதில் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக்கொண்டே தான் இருக்கிறேன். பெரிய இயக்குநர்கள், சிறு இயக்குநர்கள் என்ற அனைவரிடமும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்கிறேன். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் எப்போதுமே நமக்குத் தெரிந்தது போதவே போதாது.

நடிப்பு, பாடல், தயாரிப்பு, இயக்கம் என நீங்கள் தொடும் விஷயங்கள் அனைத்துக்குமே வரவேற்பு. இதற்குக் காரணம் அதிர்ஷ்டமா? உழைப்பா? திறமையா?

மூன்றுமேதான். அதிர்ஷ்டம், திறமை இரண்டுமே வேண்டும். இதற்கு முதலீடாக உழைப்பும் வேண்டும். உழைப்பு அதிகமாக இருந்தால் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். உழைப்பும், திறமையும் அதிகமாக இருந்தால் அதிர்ஷ்டம் தானாக வரும்.

நடிகராகவும், இயக்குநராகவும் உங்களை வடிவமைத்துச் செதுக்கியதில் யாருக்கெல்லாம் பங்கு உள்ளது?

என்னை இயக்கிய அனைத்து இயக்குநர்களுக்குமே பங்கு உள்ளது. நடிகராகவும், இயக்குநராகவும் அனைவரிடமும் கற்றுக்கொண்டே இருந்துள்ளேன். ஒவ்வொரு இயக்குநரிடம் இருந்து வெவ்வேறு விதமான நடிப்பைக் கற்றுக்கொண்டுள்ளேன். இவரிடமிருந்து தான் அதிகமாகக் கற்றேன் என்று ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

'ப.பாண்டி' படத்தோட கரு, ’கபாலி’ தன் மனைவியைத் தேடும் காட்சிகளின் பாதிப்பா...

2014-ம் ஆண்டு ’வேலையில்லா பட்டதாரி’ படப்பிடிப்பின் போது கதையாகத் தோன்றியது. அதை ’கொடி’ படப்பிடிப்புக்கு இடையே முழுமையாக எழுதினேன். பொள்ளாச்சியில் தினமும் 'கொடி' படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலை நேரங்களில் உட்கார்ந்து முழுமையாக எழுதிய கதை தான் ’ப.பாண்டி’. இந்தக் கதையை நான் உருவாக்கினேன் என்று சொல்வதை விட இக்கதை தான் என்னைக் கண்டுபிடித்தது என்று சொல்வேன். 'கபாலி'யில் நீங்கள் சொல்லும் காட்சிகளுக்கும் 'ப.பாண்டி'க்கும் சம்பந்தமில்லை.

'ப.பாண்டி' படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து...

அனைவரும் பாராட்ட வேண்டும் என்ற எண்ணோட்டத்தில் நான் படம் இயக்கவில்லை. ஒரு கதை இருக்கிறது, அதைச் சொல்ல வேண்டும் என விரும்பினேன். படம் இயக்க வேண்டும் என்பது எனக்குள் இருந்த ஒரு கனவு. அதற்கான பணிகளில் தான் நீண்ட வருடங்களாக இருந்தேன். இப்போதும் நான் இயக்குநராகத் தயாராகிவிட்டேன் என நினைக்கவில்லை. இந்தக் கதையை இப்போது சொல்லியாக வேண்டும் என்று தோன்றியது சொன்னேன். இந்த வரவேற்பைப் பார்க்கும் போது ரொம்ப நெகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் உள்ளது.

'ப.பாண்டி' படத்தில் வயோதிகத் திருமணம் நடத்தப்பட்டிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும் என்று ஒரு பேச்சு இருக்கே..

நான் ஒரு கதை சொல்ல வேண்டும் என விரும்பினேன். விரும்பியதைச் சொல்லிவிட்டேன். நான் சொன்ன கதை பற்றி நிறைய கருத்துகள் இருக்கலாம். அது இருப்பது நல்லதுதானே. ஒரு படம் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டால் அதைப் பற்றி யாரும் பேசுவதே இல்லை. பாதிப்பை ஏற்படுத்தியதால் மட்டுமே பேச்சுகள் வருகின்றன. நிச்சயமாக அனைவரின் கருத்துகளையும் மதிக்கிறேன்.

அனைவரையும் கவரும் விதத்தில் படம் இயக்கிவிட்டீர்கள். ஆனால் நடிக்கும் படத்தில் ஒரு தடுமாற்றம் தெரிகிறதே. மாஸ் - கமர்ஷியல் படங்கள் உங்களுக்கு அவசியம்தானா?

நான் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறேன், மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என அனைவருக்குமே சேர்ந்து படம் செய்வதை முக்கியமாகப் பார்க்கிறேன். அனைத்தையுமே கலந்து ஒரு படமாகக் கொடுப்பது திறமைதான். அந்த வித்தையைக் கற்றுக்கொள்ள இன்னும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அதனால் தான் வெவ்வேறு கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன். ஒரே படத்தில் அனைவரையும் கவர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக அந்தப் பயணம் வெற்றியாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தப்பான படத்தில் நடித்துவிட்டோம் என்று வருத்தப்பட்டதுண்டா? எந்தெந்தப் படங்கள்?

நிறையப் படங்களில் தோன்றியிருக்கிறது. ஆனால், அப்பெயரைச் சொல்லி யார் மனதையும் காயப்படுத்த விரும்பவில்லை.

பரிசோதனை முயற்சிக்காக நடித்த படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறாதபோது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

ஒரு சில படங்களுக்கு உயிரையே கொடுத்து உழைப்போம். அது சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றபோது நாம் என்ன செய்யத் தவறவிட்டோம் என்ற பார்வை மட்டுமே சரியானதாக இருக்கும். மக்களுக்குத் தெரியவில்லை, புரியவில்லை என்பது தவறு, நமது தரப்பில் இருக்கும் தவறைத் திருத்திக்கொண்டால், நல்ல படைப்பை எப்போதுமே மக்கள் கொண்டாடத் தான் செய்வார்கள்.

’புதுப்பேட்டை’ தொலைக்காட்சியில் போடும்போது தற்போது கொண்டாப்பட்டு வருகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? ’புதுப்பேட்டை 2’ சாத்தியமா?

ஒரு சில படங்கள், அதோட காலத்துக்கு முன்பே வந்துவிடும். அதே படம் இப்போது வந்தால் மிகப் பெரிய வெற்றியடையும். 10 வருடங்களுக்கு முன்பாக 'புதுப்பேட்டை' மாதிரியான படத்தை செல்வராகவன் எடுத்தது பெருமைதான். மேலும் ஒரு சில படங்களை அந்த வரிசையில் சேர்க்கலாம். எனது திரையுலக வாழ்வில் 'புதுப்பேட்டை' ஒரு மைல்கல் படம் தான். 'புதுப்பேட்டை 2' எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

வெற்றி மாறன், செல்வராகவன் இருவரோடு இணைந்து பணிபுரியும் போது மட்டும் ஒரு முழுமை தெரியுதே? அந்த மேஜிக் எப்படி நடக்கிறது?

ஒவ்வொரு இயக்குநரோடும் ஒவ்வொரு புரிதல், நம்பிக்கை இருக்கும். வெற்றி மாறன் அழைக்கிறார் என்றால் எதைப் பற்றியும் விசாரிக்காமல் சென்று நடித்துவிட்டு வருவேன். எதைப் பற்றியும் யோசிக்க மாட்டேன், கண்டுகொள்ள மாட்டேன். அதே போலத் தான் செல்வராகவன் சார். என்னை உருவாக்கியவரே அவர் தான். அதேபோல ஒவ்வொரு நடிகருக்கும் 4, 5 இயக்குநர்கள் கிடைத்துவிட்டாலே திரையுலக வாழ்க்கை முழுமையாகிவிடும்.

தமிழ், இந்தி என நடித்து வருகிறீர்கள். ஏன் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நடிக்கவில்லையே?

சரியான கதை வேண்டும். எனக்கு நம்பிக்கை வந்துவிட்டால், எந்த மொழி என்றாலும் நடிக்கத் தயாராக உள்ளேன்.

ஹாலிவுட் படம் குறித்து...

மே 14-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. அதிலிருந்து 3 மாதங்களுக்கு ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புதான். ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுக்கப்போகிறேன்.

ரஜினி படத்தைத் தயாரிக்கும் நீங்கள் அவருடன் நடிப்பது குறித்தோ, அவர் நடிக்கும் படத்தை இயக்குவது குறித்தோ பேசியது உண்டா? 'ப.பாண்டி' பார்த்துவிட்டு என்ன சொன்னார்?

அனைத்துமே அமைய வேண்டும். அப்படி அமைந்தால் மட்டுமே தெரியவரும். இப்போதைக்கு அப்படியொரு எண்ணமில்லை. படம் தயாரிப்பதே மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். மே மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறோம்.

'ப.பாண்டி' பார்த்துவிட்டு ரஜினி சார் என்னிடம் கூறியது எனப் பல செய்திகள் வெளியாகியுள்ளது. அதெல்லாம் யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. உண்மையில் அவருக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது, சந்தோஷமாகப் பேசினார். அவர் என்ன சொன்னார் என்பதை வெளியே சொல்ல விரும்பவில்லை. அதை மனதுக்குள் வைத்தே சந்தோஷப்பட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

'வடசென்னை' படத்தில் விஜய் சேதுபதி, அமலா பால் விலகல், படப்பிடிப்பு தாமதம். ஏன் இவ்வளவு குழப்பங்கள்?

'விசாரணை' ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதால், 3 மாதங்களுக்கு 'வடசென்னை' படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தோம். இப்போது மறுபடியும் ஆரம்பித்துவிட்டோம். ஒரு படம் தனக்கு என்னவெல்லாம் வேண்டுமோ, அதைத் தானாகவே தேடிக்கொள்ளும். யார் விலகினார்கள், யாரை வெற்றி மாறன் மாற்றினார் என்பதற்குள் போக வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். அந்தப் படத்துக்கு என்ன தேவையோ, அது அமைந்து நல்லபடியாகப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

சினிமாவில் உங்கள் பயணம் வியக்கத்தக்கது. எப்படி இவ்வளவு உயரத்துக்குச் சென்றார் எனப் பலரும் பேசிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு உங்களுடைய பதில் என்ன?

(சிறு யோசனைக்குப் பின்) என்னால் முடியும் என்றால் அவர்களாலும் முடியும். அதுதான் உண்மை. நமக்கு அமையுறது, நமக்கு அமைத்துக் கொள்வது இரண்டுமே நமது கையில் உள்ளது.

தனுஷ் இயக்கும் அடுத்த படம் எப்படி இருக்கும்?

இதுவரைக்கும் தெரியவில்லை. அடுத்த கதையும் பாசிட்டிவ்வான படமாக இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் வந்துள்ளது. ஏனென்றால் 'ப.பாண்டி' பார்த்துவிட்டு ரொம்ப பாசிட்டிவ்வாக இருக்கிறது என்று அனைவரும் சொல்கிறார்கள். இப்படியே தொடர்ந்து செய்யலாமா இல்லையென்றால் வெவ்வேறு களத்தில் பயணிக்க வேண்டுமா என்ற சிறு குழப்பத்தில் இருக்கிறேன். இப்போதைக்கு அடுத்த கதை இப்படியிருக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை. படத்தின் வெற்றியை மட்டுமே சந்தோஷமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

அப்பா தனுஷ், கணவர் தனுஷ் குறித்து...

மனைவி, குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஆடுற வயசில் ஆடணும், ஒடுற வயசில் ஓடணும். இது ஓடுகிற வயசு, இன்னும் ஒரு 10 வருடங்களுக்கு என்னால் இப்போது மாதிரி வேகமாக இரவு - பகல் பாராமல் ஓட முடியும் என நினைக்கிறேன். தந்தையாகவும், கணவராகவும் எந்தளவுக்கு என் கடமையைச் சரியாகச் செய்கிறேன் எனத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக என் மகன்களுக்கு நல்ல நண்பராக இருக்கிறேன். அதை உறுதியாகச் சொல்வேன்.

இன்னும் 10 வருடங்கள் கழித்துத் தனுஷ் சினிமாவில் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இப்போதைக்கு நாளைக்கு என்ன என்பதை மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கிறேன். 10 வருடங்களில் என்னவாக இருப்பேன் என்பதை காண விரும்பவில்லை. அப்படி யோசித்தால் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி மட்டுமே ஓட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுவிடுவேன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x