Published : 06 Feb 2017 11:20 AM
Last Updated : 06 Feb 2017 11:20 AM

இந்தியாவில் தயாராகும் `ஜீப் கம்பாஸ்’

கடந்த ஆண்டு டெல்லியில் நடை பெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் பியட் கிரைஸ்லர் ஆட்டோ மொபைல்ஸ் (எப்சிஏ) நிறுவனம் மூன்று பிரபல ஜீப் மாடல் எஸ்யுவி-களை காட்சிப்படுத்தியிருந்தது. ஜீப் ரெனகேட், கிராண்ட் செரோகி, கிராண்ட் செரோகி எஸ்ஆர்டி.

பியட் நிறுவனம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று இத்தாலியைச் சேர்ந்த பியட் ஆட்டோமொபைல்ஸ் குழுமம் மற்றொன்று எப்சிஏ யுஸ். இது கிரைஸ் லர் குழுமத்தைச் சேர்ந்தது. 2009-ம் ஆண்டு கிரைஸ்லர் நிறுவனம் திவா லானதைத் தொடர்ந்து பியட் நிறுவனத் துடன் கிரைஸ்லர் இணைந்தது. 2014-ல் பியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எப்சிஏ இத்தாலி நிறுவனத் தயாரிப்பில் அபார்த், ஆல்பா ரோமியோ, பியட், பியட் புரொபஷனல், லான்சியா உள்ளிட்ட தயாரிப்புகள் அடங்கும். எப்சிஏ அமெரிக்கா தயாரிப்பில் கிரைஸ்லர், டாட்ஜ், ஜீப் உள்ளிட்ட பிராண்டுகள் அடங்கும். இது தவிர ராம், மோபால் என்ற பெயரிலான விற்பனைக்கு பிந்தைய சேவை நிறுவனங்களும் இதில் அடங்கும்.

சர்வதேச அளவில் ஜீப் பிராண்ட் மிகவும் பிரபலமானது. எஸ்யுவி ரகத்தில் இத்தயாரிப்புகளுக்கு எப்போதுமே மிகுந்த வரவேற்பு உள்ளது. பியட் கிரைஸ்லர் நிறுவனத்தின் அங்கமான ஜீப் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று மாடல்களின் விலை ரூ.72 லட்சம் முதல் ரூ.1.12 கோடி வரையாகும். இவை முற்றிலுமாக வெளிநாட்டில் உள்ள ஆலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியச் சந்தையில் ஜீப் கம்பாஸ் தயாரிப்பை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவற்றை வெளிநாட்டு ஆலையிலிருந்து இறக்குமதி செய்து அசெம்பிளி செய்து விற்காமல் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரஞ்சன்கோன் ஆலையில் 28 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது பியட் கிரைஸ்லர் நிறுவனம். இந்த ஆலையில் ஜீப் கம்பாஸை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த எஸ்யுவி ஜீப்பின் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சத்துக்கு கிடைக்கும்.

ஜீப் கம்பாஸ் கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடலை உலகம் முழுவதும் விற்பனை செய்ய எப்சிஏ திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலை மற்றும் சாகச பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக 4x4 சக்கர செயல்பாடுகளைக் கொண்டது இது. பொதுவாக எஸ்யுவி மாடல்கள் அனைத்துமே எரிபொருள் சிக்கனத் தன்மை கொண்டிருக்காது. ஆனால் இது எரிபொருள் சிக்கனமானது. பயணிகளின் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதிநவீன தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது முந்தைய மாடலான செரோகி யைக் காட்டிலும் வடிவமைப்பில் பல் வேறு மாறுதல்களைக் கொண்டதாகும். வெளிப்பகுதி வழக்கமான 7 பகுதி கிரில், முகப்பு விளக்கு பின்புலத்தில் கருப்பு நிறம் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. இதன் உள்புறத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் இதன் உரிமையாளரை பெருமை கொள்ளச் செய்யும். 7 அங்குல திரை, பாதையை உணர்த்தும் நேவி கேஷன் வசதி, கூகுள் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

இதில் 7 ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. இந்திய சாலைகளுக்காக 2 சக்கர செயல்பாடு கொண்ட (4X2) மாடலையும் இந்நிறுவனம் அறிமுகப் படுத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும் வலது புற ஸ்டீரிங் வசதியைக் கொண்டதாகவும் இது தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் தயாரிக்கும் அதே நேரத்தில் இதில் எந்த அளவுக்கு உள்நாட்டு உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அதற்கேற்ப இதன் விலை குறையும். இந்தக் காரை ரூ.19 லட்சம் முதல் ரூ.20 லட்சம் என்ற விலையில் விற்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 85 சதவீத உள்ளூர் தயாரிப்புகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது.

சர்வதேச தேவையை பூர்த்தி செய்ய மெக்சிகோ மற்றும் சீன ஆலையிலிருந்து ஏற்றுமதி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் மாஸ்டா சிஎக்ஸ் 3, நிசான் ஜூக், செவர்லே டிராக் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக திகழ்கிறது. இந்த கார் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டால் அது ஹோண்டா சிஆர்வி-5 மற்றும் ஹூண்டாய் டஸ்கான் மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஜீப் வரவை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றனர் இந்திய பிரியர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x