

கட்டுமானத் தொழிலாளர்களின் பாரத்தைக் குறைக்கும் வகையில் மிதிவண்டியைப் பயன்படுத்திக் குறைந்த செலவில் லிஃப்ட் சிஸ்டம் (Lift System) ஒன்றை விஜய சங்கரும் பூபதியும் இணைந்து வடிவமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்.
தலைக்கு மேலே பாரம் ஏன்?
மிதிவண்டியின் பெடலை மிதிக்கும்போது இயங்கும் இந்த லிஃப்ட்டைச் செங்கல் சுமக்கும் கூலித் தொழிலாளர்களுக்காக உருவாக்கியிருக்கிறார்கள். “நாங்களும் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என யோசித்தபோது எங்கள் வீட்டின் அருகில் கட்டிட வேலை நடந்துகொண்டிருந்தது. அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது தளம் கட்டப்பட்டுவந்ததால் அதற்குத் தேவைப்படும் மணல், செங்கல், சிமெண்ட் போன்றவற்றைத் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துடன் எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து நாங்கள் இவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தோம்” என்கிறார்கள் விஜய சங்கரும் பூபதியும்.
இரண்டே வாரத்தில் பொருட்களை மேலேற்றும் இந்தக் கருவியை வடிவமைத்திருக்கிறார்கள். மின் தட்டுப்பாடும் மின்சாரக் கட்டணம் உயர்வும் சிக்கலாக இருக்கும் இந்தக் காலத்தில் மின்சாரமோ, டீசல், பெட்ரோல், மண்ணெண்ணை, எரிவாய்வு போன்ற எதுவுமே இல்லாமல் மாற்று சக்தியாக முற்றிலும் மனித சக்தியைக்கொண்டு மிக எளிதாக இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும். அதே வேளையில் மனித சக்திக்கு மாற்றாகச் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தியும் இந்த இயந்திரத்தை இயக்கலாம்.
காப்புரிமை பெறுவோம்!
இந்தக் கருவியைப் பொறுத்தவரை நின்ற இடத்தில் மிதி வண்டியை மிதிப்பதன் மூலம் கியர் பாக்ஸில் முப்பது சுற்றுக்கு 1 சுற்று விகிதத்தில் மாற்றி 300 கிலோ வரையிலான எடையை 100 மீட்டர் உயரத்துக்குக் கொண்டு செல்ல முடியும். மேலும் சூரிய ஒளிசக்தியை பயன்படுத்தியும் பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை டி.சி. மோட்டார் (DC Motor) பயன்படுத்தியும் இயக்க முடியும்.
“இக்கருவியை உருவாக்க நாங்கள் இருவர் மட்டுமல்லாமல் எங்கள் பெற்றோர்களின் ஊக்கமும் பொருளுதவியும் எங்கள் கல்லூரியின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறை ஒருங்கிணைப்பாளர் ராஜபார்த்திபனின் வழிகாட்டுதலும் பெரிதும் கைகொடுத்தது. எங்கள் கண்டுபிடிப்புக்கு விரைவில் காப்புரிமை பெற விண்ணப்பிக்க உள்ளோம்” என்று மகிழ்கிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான ‘Social Business incubator’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்தக் கருவிக்காக முதல் நிலையில் ரூ.5000 பரிசுத்தொகையினை விஜயசங்கர், பூபதி இருவரும் வென்றார்கள். இந்தப் போட்டியின் அடுத்த நிலையின் பரிசுத் தொகையான ரூ.50,000-ஐயும்
வெல்லும் உத்வேகத்தோடு இருக்கிறார்கள்.