Published : 17 Feb 2014 12:00 AM
Last Updated : 17 Feb 2014 12:00 AM

நேரடியாக டி.இ.ஓ. ஆகலாம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப் பள்ளிகள் என ஏறத்தாழ 56 லட்சம் பள்ளிகள் உள்ளன. இதில் ஐந்தரை லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். பள்ளிகளில் கற்பித்தல் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அதேநேரத்தில், பள்ளிகளின் நிர்வாகப் பணிகளைக் கல்வித் துறை அதிகாரிகள் கவனித்துக்கொள்கிறார்கள்.

ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகளும் (ஏ.இ.இ.ஓ.), மாவட்ட அளவில் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளும், அதேபோல், உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளுக்கு கல்வி மாவட்ட அளவில் (67 கல்வி மாவட்டங்கள்) மாவட்டக் கல்வி அதிகாரிகளும் (டி.இ.ஓ.), ஒட்டு மொத்தமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் சி.இ.ஓ. எனப்படும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் கவனிக் கின்றனர். உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி ஆகிய பதவிகள், பதவி உயர்வு மூலம் மட்டுமின்றி நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

நேரடி உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி பதவிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியமும் (டி.ஆர்.பி.) மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வை டி.என்.பி.எஸ்.சி.யும் நடத்துகின்றன. ஏ.இ.இ.ஓ. தேர்வுக்குப் பட்டப் படிப்பும் பி.எட். பட்டமும் அவசியம். டி.இ.ஓ. பதவிக்கு முதுகலை பட்டப் படிப்பும், பி.எட். பட்டமும் வேண்டும்.

டி.இ.ஓ. தேர்வு முறையில் தற்போது மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது. அதன்படி, முதலில் முதல்நிலைத் தேர்வும் அதன் பிறகு மெயின் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகின்றது. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவில் 150 கேள்விகள், நுண்ணறிவுத் திறன் (Aptitude, Mental Ability) பகுதியில் 50 கேள்விகள் என மொத்தம் 200 வினாக்கள் ஆப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கு மதிப்பெண் 300.

இதில் வெற்றி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடத்தப்படும். இதில் 3 தாள்கள். அனைத்துக்கும் விரிவாகப் பதில் எழுத வேண்டும். முதல் இரண்டு தாள்களும் பொது அறிவு சம்பந்தப்பட்டவை. 3ஆவது தாள், குறிப்பிட்ட பாடப்பிரிவு (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்கள் போன்றவை) தொடர்பானது. ஒவ்வொன்றுக்கும் தலா 300 மதிப்பெண் வீதம் மொத்தம் 900 மார்க், நேர்முகத் தேர்வுக்கு 120 மதிப்பெண்.

டி.இ.ஓ. தேர்வெழுத வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி தேர்வில், அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் குறிப்பிட்ட இடங்கள் தனியாக ஒதுக்கப்படுகின்றன. இதற்குக் குறைந்தபட்சம் 12 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் அவசியம். வயது 40க்குள் இருக்க வேண்டும்.

தற்போது, பள்ளிக் கல்விப் பணியில் 11 டி.இ.ஓ. பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் தலா ஒரு காலியிடம் (மொத்தம் 9) இடம்பெற்றுள்ளது. எஞ்சிய 2 காலியிடங்கள் (இயற்பியல், வேதியியல்) அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலைப் பட்டப் படிப்புடன் பி.எட். பட்டம் பெற்றவர்கள் டி.இ.ஓ. தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்குக் கடைசி நாள் மார்ச் 12ஆம் தேதி ஆகும். முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 8ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 முக்கிய நகரங்களில் மட்டும் நடத்தப்பட இருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, முதல்நிலை, மெயின் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x