Last Updated : 25 Jul, 2016 12:13 PM

 

Published : 25 Jul 2016 12:13 PM
Last Updated : 25 Jul 2016 12:13 PM

உயிருக்கு எமனாகும் போலி உதிரி பாகங்கள்

காலையில் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென மோட்டார் சைக்கிளை யாரோ இழுப்பது போன்றிருக்கும். அதை உணர்ந்து சுதாரிக்கும் முன்பாகவே நம்மைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சார், டயர் பஞ்சர் என கூறிக் கொண்டே நம்மைக் கடந்து செல்வர். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அருகிலுள்ள பஞ்சர் கடையைத் தேடி அல்லது மொபைல் போனில் அவரை அழைத்து பஞ்சர் போட கழற்றினால், அவரோ சார், டியூப் மவுத் போயிடுச்சு, வேற டியூப் போடணும் என்பார். சரி வாங்கி வா என்றால், அருகில் கடை இல்லை, இதுபோன்ற தேவைக்கு தானே டியூபை வாங்கி வைத்திருப்பதாகக் கூறுவார். வேறு வழியின்றி அதை மாட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு பிற்பகலில் செல்வோம்.

அடுத்த 10 அல்லது 15 நாளில் இந்த சம்பவம் முற்றிலும் மறந்தே போயிருக்கும். அலுவலகத்தில் நிறுத்தியிருக்கும்போது காற்று இறங்கியிருக்கும். தெரிந்த மெக்கானிக் வந்து மீண்டும் டயரைக் கழற்றுவார். அவர் கூறும் தகவல் நம்மை விதிர்த்துப் போகச் செய்யும். சார் இது டுபாக்கூர் டியூப். இது ஒரு வாரம் கூட தாங்காது. இதன் விலை வெறும் ரூ. 60 என்பார். வேறு வழியின்றி அங்கீகாரம் பெற்ற டீலரிடமிருந்து பில்லுடன் டியூப் வாங்கி போடுவார்.

இது ஒரு சம்பவம்தான். இதுபோல உதிரி பாகங்களை சாலையோரக் கடைகளில் மாற்றி தவித்தவர்கள் ஏராளம்.

தினசரி நிகழும் சாலை விபத்துகளுக்கு என்ன காரணம் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அதிக வேகத்தில் சென்றது, அல்லது குடி போதையில் வாகனங்களை ஓட்டியதால்தான் விபத்து நிகழ்ந்ததாக பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

ஆனால் உண்மையில் இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் 20 சதவீத விபத்துகளுக்குக் காரணம், போலியான உதிரி பாகங்கள்தான். இது வெறுமனே யாரோ பதிவு செய்த புள்ளி விவரம் அல்ல. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐஏஎம்) நடத்திய ஆய்வில்தான் இது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் 6 தயாரிப்புகளில் 2 தயாரிப்புகள் போலியானவை என்று பாகிஸ்தான் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

போலிகள்

போலிகளின் புழக்கம் இன்று, நேற்று தோன்றியதல்ல, 1872-ம் ஆண்டிலேயே என்ஜினுக்கு உயவு எண்ணெய்யாக தயாரிக்கப்பட்ட மெக்கோய் உயவு எண்ணெய்க்கு போலிகள் வந்து அந்நிறுவன வருமானத்தையே அழித்துவிட்டன.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இதற்கு இணையாக போலித் தயாரிப்புகளும் வளர்ச்சி கண்டு வருகின்றன.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் போலிகளின் வரவால் ஏற்பட்ட பாதிப்பு சரியாக உணரப்பட்டது 1980-களில்தான். சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டும்தான் போலிகள் வருவதில்லை. மற்றபடி பெரும்பாலான தயாரிப்புகளுக்கு போலிகள் சந்தையில் சர்வசாதாரணமாக புழங்குகின்றன.

உண்மையான உதிரி பாகங்களைப் போலவே இவை தயாரிக்கப்படும். அதேபோல அவை எப்படி பேக் செய்யப்பட்டிருக்கிறதோ அதைப் போல இவை பேக் செய்யப்பட்டிருக்கும். இவை தரத்தில் குறைந்தவை. நுகர்வோரைக் குழப்பும் விதமாக இத்தயாரிப்புகள் புழக்கத்தில் இருக்கும்.

வாகனங்களில் அடிக்கடி மாற்றும் ஸ்பார்க் பிளக், பிரேக் வயர், ஆயில் ஃபில்டர், ஏர் ஃபில்டர், முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், வைபர்ஸ், ஸ்டார்ட்டர் மோட்டார், பேரிங், ஆயில் பம்ப், பிரேக் பேட், பிஸ்டர் ரிங்ஸ், உயவு எண்ணெய் (லூப்ரிகன்ட்) டியூப் போன்றவை போலியாக அதிகம் தயாரிக்கப்படுகின்றன. போலிகள் ரூ. 12 ஆயிரம் கோடி முதல் ரூ. 14 ஆயிரம் கோடி வரை விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு சக்கர வாகனங்களுக்கான போலி தயாரிப்புகளின் மதிப்பு பாதிக்கும் மேல் உள்ளது. அதாவது ரூ. 5 ஆயிரம் கோடி முதல் ரூ. 7 ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக விலை குறைந்த தயாரிப்புகள் பெரும்பாலும் இதுபோன்ற போலியான தயாரிப்புகளாகத்தான் இருக்கும்.

கடையின் விற்பனையாளர் விலை குறைந்த தயாரிப்பை அளிக்கிறார் என்றாலே அதில் வில்லங்கம் இருக்கிறது என்று உணர வேண்டும்.

கார் அல்லது மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் இதுபோன்ற தரம் குறைந்த போலியான உதிரி பாகங்களைப் பயன்படுத்துவது உங்களது பயணத்தை பாதிப்பதோடு விபத்துகளுக்கும் வழிவகுத்துவிடும்.

பாதிப்பு

போலியான பொருள்களை பயன்படுத்துவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது நிச்சயம். அடுத்து புதிய பொருள் தயாரிப்பு, கண்டுபிடிப்புகளை இது பாதிக்கும். ஒரு பொருள் கண்டுபிடித்து அதன் பலனாகக் கிடைக்கும் வருமானம் நிறுவனத்துக்குக் கிடைக்காமல் போகும்.

அரசுக்கு வரி வருவாய் குறையும். ஏனெனில் பெரும்பாலும் இதுபோன்ற போலி பொருள்கள் கள்ளக் கடத்தல் மூலமாகவோ அல்லது போலியான ஆவணங்கள் மூலமாக சந்தையில் விற்பனைக்கு வருபவை. சுமார் 35 சதவீத போலி தயாரிப்புகளால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2,200 கோடி அளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

போலியான பொருள்கள் தயாரிப்பு எளிது. மேலும் இதற்கான மூலப் பொருள்கள் சீனாவிலிருந்து எளிதாகக் கிடைப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

போலிகளைத் தடுப்பது மற்றும் இவ்வித பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை.இதுவும் போலிகளின் பெருக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.

லாபம் அதிகம்

அனைத்துக்கும் மேலாக போலிகள் மீதான லாபம் அதிகம். பொருள் தயாரிப்போருக்கும் லாபம். விற்பனை செய்வோருக்கும் ஒரிஜினல் தயாரிப்புகள் விற்பதைக்காட்டிலும் போலிகளுக்கு அளிக்கப்படும் கமிஷன் அதிகம். இத்தகைய தயாரிப்புகளுக்கான விலையை கடைக்காரரே நிர்ணயம் செய்வது மேலும் அவர்களுக்கு சாதகமான அம்சம். சில தயாரிப்புகளுக்கு 55 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை லாபம் கிடைக்கிறது. இதுவும் போலிகள் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.

சட்டப்படி போலிகளை ஒழிப்பதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஒழிக்க முடியாமலும் போகலாம். ஆனால் போலிகளை வாங்காமல் இருப்பது அவரவர் கைகளில்தான் உள்ளது.

விலை குறைந்த, அல்லது அருகாமையில் உள்ள கடைகளில் கிடைக்கிறது என்பதற்காக உதிரி பாகங்களை வாங்கினால் விபத்தை கை நீட்டி வரவேற்கிறோம் என்றுதான் அர்த்தம்.

தொடர்புக்கு: ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x