Last Updated : 17 Jun, 2017 11:40 AM

 

Published : 17 Jun 2017 11:40 AM
Last Updated : 17 Jun 2017 11:40 AM

காற்றாலைகள் கொல்லும் பறவைகள்

என் தலைக்கு மேல் மிக உயரத்தில் இறக்கைகளை அடிக்காமல் வட்டமிட்டு கொண்டிருந்தது அந்த சங்குவளை நாரை (Painted stork). கழுகுகளைப் போலவே இறக்கைகளை அடிக்காமல் காற்றின் விசையை பயன்படுத்தி வட்டமடிக்கும் அதன் திறனை ரசித்துக்கொண்டு நின்றிருந்தேன். மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்த அப்பறவை மெதுவாக சற்று கீழே இறங்கி வட்டமடித்தபோது, என் மனம் படபடக்க ஆரம்பித்துவிட்டது.

காரணம், அங்கு சுற்றிக்கொண்டிருந்த காற்றாலையின் சுழலி (Wind Turbine). நான் அஞ்சியது போலவே அந்த நாரை காற்றாலைச் சுழலியின் மிக அருகில் வட்டமடிக்கத் தொடங்கியது. சில நொடிகளில் வேகமாக சுற்றிக்கொண்டிருக்கும் சுழலியின் தகடுகளில் மோதி, நாரை கீழே ‘பொத்தென்று‘ விழுந்தது. நான் விரைந்து அருகில் சென்று பார்த்தபோது நாரையின் தலை துண்டாகி, உடம்பு மட்டும் கிடந்தது. அந்த நாரையின் அலகை எவ்வளவு தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கோ போய் விழுந்து கிடந்தது. காற்றாலைகளால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்த எனது ஆய்வில், நான் கண்ட முதல் காட்சி இதுதான்.

எது பசுமை ஆற்றல்?

காற்று - உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாத ஒன்று. காலங்காலமாக காற்றை மனித இனம் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்திவந்திருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளாக மின்சாரம் தயாரிப்பதற்காகவும் மனித இனம் காற்றைப் பயன்படுத்திவருகிறது. காற்றாலைச் சுழலி (Wind Turbine) எனப்படும் ராட்சத இயந்திரம் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதில் இருக்கும் நீளமான தகடுகள்/இறக்கைகள் (Blades) காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்னாக்கி (Generator) இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான காற்றாலை மின்சாரம் (Wind Power), சுற்றுச்சூழலை சீரழிக்காத பசுமை ஆற்றலாகக் கருதப்படுகிறது. ஆனால், இது 100 சதவீதம் உண்மையா?

புதுப்பிக்க முடியாத மின் உற்பத்தி முறைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவிலிருந்து விடுபட, காற்றாலை மின்சாரம் ஒரு மாற்று ஆற்றலாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, அனல்மின் நிலையங்களின் மூலம் வெளியேற்றப்படும் காற்று மாசுபாடு போன்ற பாதிப்புகள் எதுவும் காற்றாலைகளால் ஏற்படுவதில்லை. இதனால் காற்றாலை மின்சார உற்பத்தி உலகெங்கிலும் வேகமாக வளர்ந்துவருகிறது.

காற்றாலை மின்சார உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. 2020-ம் ஆண்டில் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 60 கிகா வாட் ஆக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்திய அரசு செயல்பட்டுவருகிறது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 8%. காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. இதில் தமிழகம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

காற்றாலை பாதிப்புகள்

பரவலாக பசுமை மின்சாரம் என்று வர்ணிக்கப்பட்டாலும், காற்றாலை மின்சாரம் சுற்றுச்சூழலை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கிறது. காற்றாலைகளால் ஒலி மாசுபாடு, உயிரினங்களின் வாழ்விடச் சிதைவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாகப் பறவைகள், வவ்வால்கள் எனப் பறக்கும் உயிரினங்கள் காற்றாலைத் தகடில் (Wind Turbine Blades) மோதி இறந்து போகின்றன. இதுபோல் நேரடி மோதலால் ஏற்படும் மரணங்கள் தவிர, காற்றாலைகளால் பல உயிரினங்களின் வாழிடமும் மோசமாக பாதிக்கப்படுகிறது.

காற்றாலைகளை அமைக்கும்போது நில அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், புதிதாக உருவாக்கப்படும் சாலைகள், அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம், காற்றாலைச் சுழலியால் ஏற்படும் ஒலி போன்றவற்றால் பறவைகளின் வாழிடங்கள் பாதிக்கப்படுகின்றன. இது தவிர, வலசை போகும் பறவைகள் காற்றாலைகளைத் தவிர்ப்பதற்காக மாற்று வழிகளில் வெகு தூரம் பறந்து செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அப்பறவைகளின் எண்ணிக்கையும் (Population) சரிய வாய்ப்புள்ளது. உதாரணமாக, குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் நாங்கள் நடத்திய ஆய்வில், காற்றாலைகள் நிறைந்துள்ள இடங்களில் சில பறவைகளின் எண்ணிக்கை, குறைவாக இருப்பது தெரியவந்தது.

கவனம் ஈர்த்த பிரச்சினை

1990-களில் அமெரிக்காவின் அல்டமான்ட் பாஸ் (Altamont Pass) என்ற இடத்தில் அமைந்துள்ள காற்றாலையில் ஏற்பட்ட கழுகு வகைப் பறவைகளின் (Raptors) திடீர் அதிகப்படி மரணமே இந்த பிரச்சினையை கவனத்துக்குக் கொண்டுவந்தது. அதன் பிறகு கடந்த பத்து ஆண்டுகளாக காற்றாலைகளால் ஏற்படும் பறவைகளின் மரணம் குறித்து பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

ஒரு காற்றாலைச் சுழலியின் மூலம் ஒரு ஆண்டில் ஒன்றிலிருந்து 64 பறவைகள்வரை இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக ஸ்பெயின் நாட்டில் எல் பெர்டோன் (El perdon) என்ற இடத்தில் அமைந்துள்ள காற்றாலையில் ஆண்டுக்கு 64 பறவைகள் ஒரு காற்றாலையால் இறக்கின்றன. அதேநேரம் தங்கள் ஆய்வுக் காலத்தில் பறவைகளின் மரணங்களே நிகழாத காற்றாலைகளும் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான ஆய்வுகளில் கழுகுகள், பருந்துகள், பாறுக் கழுகுகள், வல்லூறுகள் உள்ளிட்ட இரைகொல்லிப் பறவைகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இது கவலைக்குரியது, ஏனென்றால், உணவுச்சங்கிலியில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கும் இந்த இரைகொல்லிப் பறவைகளின் ஆயுட்காலம் அதிகம், அதேநேரம், இவற்றின் எண்ணிக்கையும் பிறப்பு விகிதமும் மிகக் குறைவு. எனவே காற்றாலைகளால் இரைகொல்லிப் பறவைகளின் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், இது இயற்கை சமநிலையை பெரிதாக பாதிக்கும்.

ஆய்வுகளின் பற்றாக்குறை

ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினை குறித்து ஓரிரு ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் சீனாவிலும், நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியாவிலும் இது குறித்த ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. காற்றாலைகளால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இந்தியாவில் மூன்றே ஆய்வு முடிவுகளே இதுவரை வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் போம்பர்வாடியில் நடந்த இரண்டு ஆண்டு ஆய்வில், ஐந்து இனங்களை சேர்ந்த பத்து பறவைகள் காற்றாலைச் சுழலிகளில் மோதி இறந்துள்ளன. குஜராத் கட்ச் மாவட்டத்தில் எங்களது மூன்றாண்டு ஆய்வில் 11-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 47 பறவைகளின் உடல் காற்றாலைகளுக்குக் கீழே கண்டெடுக்கப்பட்டது. இவற்றில் கள்ளிப் புறா (Eurasian Collared Dove), மாடப் புறா (Blue Rock Pigeon) வல்லூறு (Common Kestrel) முதலிய பறவைகள் அதிக எண்ணிக்கையில் இறந்துபோனதைப் பதிவு செய்திருக்கிறோம்.

நேரடி மரணம் மட்டும் இல்லாமல், காற்றாலைகளால் பறவைகளின் வாழிடங்கள் பாதிக்கப்படுவதால், பறவைகள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்வதும் நடக்கிறது. இதில் சிட்டுக்குருவி, சின்னான், ஈப்பிடிப்பான், கரிச்சான் போன்ற பாடும் பறவை (Passerines) இனங்கள், காடை, காட்டுக் கோழி போன்றவை தரை வாழ் பறவைகளும்கூட அதிகமாக பாதிக்கப்படுகின்றன.

தேவை சீரமைப்பு

அதிகமான பல்லுயிர் செறிவை கொண்ட நாடான (Megabiodiverse Country) இந்தியாவில் காற்றாலைகளின் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் அவசியம் தேவை. ஏனென்றால், காற்றாலைகள் அமைக்கும் முன் அதற்கான இடங்களை கவனமாக தேர்வு செய்வதன் மூலம் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும். இதற்கு அதன் திட்டவட்டமான பாதிப்புகளை குறித்த ஆழமான அறிவு தேவை.

இப்போது இந்தியா போன்ற நாடுகளில் மின்சாரத் தேவையை ஈடுசெய்ய, ஏதேனும் ஒரு முறையில் மின்சார உற்பத்தி அதிக அளவில் நடைபெற்றாக வேண்டும். புதுப்பிக்க முடியாத மின்சார உற்பத்தி முறைகள் ஏற்படுத்தும் சீரழிவுகளைக் கணக்கில் எடுக்கும்போது, காற்றாலை மின்சாரத்தை முற்றிலுமாக எதிர்க்கக் கூடாது என்பது புரியும். அதேநேரம் அந்தத் துறை ஏற்படுத்தும் பாதிப்புகள் சார்ந்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, உயிரினங்களுக்குக் குறைவான ஆபத்தை ஏற்படுத்தும் இடங்களில் காற்றாலைகளை அமைப்பது உகந்தது.

அதேபோல், காற்றாலைகளை அமைக்கும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். டெல்லியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டுள்ள காற்றாலை அமைப்பதற்கான வழிகட்டுதல்களை பின்பற்றினால், காற்றாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை பெருமளவு குறைக்கலாம். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே காற்றாலைச் சுழலிகளின் தகடுகளில் அடிபட்டு பறவைகள் இறப்பதை ஓரளவுக்காவது மட்டுப்படுத்த முடியும்.

கட்டுரையாளர், பறவையியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: r.selvaraj@bnhs.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x