ஒரு நதி: சிக்கலான பல உண்மைகள்

ஒரு நதி: சிக்கலான  பல உண்மைகள்
Updated on
3 min read

நூறாண்டுகளைக் கடந்தும் தீராத பிரச்சினையாகக் காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரம் இருக்கிறது. மழை பொய்க்காத காலங்களில் இது சற்றே தணிந்தும், வறட்சிக் காலங்களில் தகிக்கக்கூடியதுமாக, தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே இப்பிரச்சினை நீண்ட காலமாகத் தொடர்ந்துவருகிறது.

காவிரி நதி நீரைப் பங்கீட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்சினைகள் எழும்போதெல்லாம், கர்நாடக மாநிலம் பற்றி எரிகிறது. அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவதும் அவர்களுடைய உடைமைகள் சிதைக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன. தமிழக மக்களிடையேயும் கசப்பும் போராட்டங்களும் கடையடைப்பும் வாடிக்கையாகிவிட்டன. கடந்த செப்டம்பர் 5-ம் தேதி, தமிழக சம்பா பயிரைக் காப்பதற்காக, விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரைப் பத்து நாட்களுக்குத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக அரசும் நீதிமன்ற ஆணையை ஏற்றுத் தண்ணீரைத் திறந்துவிட்டது. இதையொட்டி கர்நாடகத்தில் கடையடைப்பும் ஆர்ப்பாட்டங்களும் பொதுச் சொத்தை சேதப்படுத்துவதும் நிகழ்ந்தன. இந்நிலையில், காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரம் தொடர்பான வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்:

நீர்ப் பங்கீட்டு வரலாறு

மைசூர் ராஜதானி மன்னராட்சியின் கீழ் இருந்தபோது ஆங்கிலேயர் ஆண்ட மதராஸ் மாகாணத்துடன் வறட்சி காலங்களில் நீர்ப் பங்கீடு தொடர்பாகப் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதைத் தீர்ப்பதற்காக 1892 மற்றும் 1924-ல் இரண்டு ஒப்பந்தங்கள் இடப்பட்டன. மைசூர் ராஜதானியிலிருந்து மதராஸ் மாகாணத்துக்குச் சீராக நீர் வழங்க வேண்டும் என்பதே, இந்த ஒப்பந்தங்களின் சாரம். 1924-ல் போடப்பட்ட நீர்ப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் 50 ஆண்டு உத்தரவாதத்தைக் கொண்டது. ஆனால், நாடு விடுதலை பெற்ற பிறகும், 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக புதிய பிரச்சினைகள் எழுந்தன. 1956-ல் மாநிலங்களுக்கு இடையில் நீர்ப் பங்கீடு தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் தீர்க்க நீர்த் தகராறு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

1970-களில் காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான ஐம்பது ஆண்டு ஒப்பந்தம் 1974-ல் நிறைவடைந்ததை ஒட்டி, காவிரி உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 1973-ல் வரைவு ஒப்பந்தம் ஒன்றை அளித்து, காவிரி பள்ளத்தாக்கு ஆணையத்தை அமைக்கப் பரிந்துரை செய்தது. ஆனால், அந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

1970, 1980-களிலும் இரு மாநில அரசுகளும் காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியிலேயே முடிவடைந்தன. கர்நாடக- தமிழக உறவும் அவ்வப்போது சிக்கலுக்கு உள்ளாவதற்குக் காரணமாக காவிரிப் பிரச்சினை உருவெடுத்தது.

நடுவர் மன்றம்

தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம், காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக முழுத் தீர்வை எட்ட வேண்டி உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து உச்ச நீதிமன்றம், வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசுக்குக் காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க உத்தரவிட்டது. 1990-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி உருவாக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவாக கர்நாடக மாநிலம், தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை விடவேண்டும் என்று 1991-ல் கூறியது.

1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் போதுமான அளவுக்கு மழை பெய்யாத சூழ்நிலையில் மீண்டும் பிரச்சினைகள் தீவிரமடைந்தன. அப்போது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ், மாநில முதல்வர்கள் கூடி இடைக்கால ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வலியுறுத்தினார். அப்போது தமிழகத்துக்கு 1100 கோடி கன அடி நீரை 600 கோடி கன அடியாகக் குறைத்துக்கொள்ள காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ள முடிவெடுக்கப்பட்டது.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு

2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டி.எம்.சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டி.எம்.சி. ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி. ஒதுக்கப்பெற்றது. தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்குள் கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டியது 192 டி.எம்.சி. எனத் தீர்மானிக்கப்பட்டது.

நதி நீர் விவகாரம் இன்று

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரில் 50.0052 டி.எம்.சி. தண்ணீர், காவிரி நடுவர் மன்றத்தின் குறைந்தபட்ச நீர் வெளியீட்டு ஆணைப்படி பற்றாக்குறையாக இருப்பதாக தமிழக அரசு கூறியது. கர்நாடக மாநில அரசோ, போதுமான மழை இல்லையென்று கூறி, இதற்கு மேல் நீரைப் பகிர்ந்துகொள்ள முடியாதென்று மறுத்தது. இதையடுத்து தமிழக அரசு, சம்பா நெல் பாசனத்துக்காக கர்நாடக அரசு நீர் தரக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியது. கர்நாடக அரசு 15 ஆயிரம் கன அடி நீரை பத்து நாட்களுக்குத் தொடர்ந்து விட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5-ம் தேதி உத்தரவிட்டது.

தோற்றம்

கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பிரம்மகிரி மலைத்தொடரில் தலைக்காவிரியில் காவிரி ஆறு பிறக்கிறது. தென்னிந்தியாவில் பாயும் மிகப் பெரிய நதியான காவிரி, கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி என நான்கு மாநிலங்களை வளப்படுத்துகிறது.

நீளம்

கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர் நீளத்துக்குப் பாயும் காவிரி, 81 ஆயிரத்து 155 சதுர கிலோமீட்டர் ஆற்றுப்படுகையைக் கொண்டது. தமிழகத்தில் 43 ஆயிரத்து 856 சதுர கிலோமீட்டர் ஆற்றுப்படுகையைக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 273 சதுர கிலோமீட்டர், கேரளத்தில் 2 ஆயிரத்து 866 சதுர கிலோமீட்டர் புதுச்சேரியில் 160 சதுர கிலோமீட்டர் ஆற்றுப்படுகையைக் காவிரி கொண்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in