Published : 11 Jun 2016 01:48 PM
Last Updated : 11 Jun 2016 01:48 PM

ஒவ்வாமையை விரட்டினால் ஆஸ்துமாவைத் தடுக்கலாம்

உலகத்தில் மனிதன் தோன்றிய காலம் முதல் ஆஸ்துமா தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. ஒருவருக்குத் தொடர்ந்து சளி பிடித்தால் ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி, அதைத் தொடர்ந்து தும்மல், இருமல் இருப்பவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயைக் கிருமிகள் தாக்குகின்றன. இதனால் மூச்சுக்குழாயின் உட்சுவர்களில் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த இடத்தில் வீக்கமும், மூச்சுக்குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையும் குறைகிறது. அதனால் சுத்தமான காற்று உள்ளே செல்லவும், அசுத்தக் காற்று வெளிவர முடியாமலும் தடைபடுவதே ஆஸ்துமா.

ஆஸ்துமா குறித்து நிலவும் பொதுவான சந்தேகங்களைக் களைகிறார் மதுரை அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் அலர்ஜி - ஆஸ்துமா துறை சிறப்பு மருத்துவர் ஜெ. பாலசுப்பிரமணியன்:

குழந்தைகளே அதிகம்

“குழந்தைகள் உட்பட எல்லா வயதினருக்கும் ஆஸ்துமா வரலாம். உலகச் சுகாதார நிறுவன அறிக்கையின்படி உலகம் முழுவதும் 10 கோடி முதல் 15 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் ஆஸ்துமாவால் இறந்துபோகின்றனர். இந்தியாவில் 1.5 கோடி முதல் 2 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகள் மட்டும் 10 முதல் 15 சதவீதம்.

தொடர் தும்மலைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது பின்னாளில் ஆஸ்துமா உண்டாக வழிவகுக்கும். ஒவ்வாமை தவிர வேறு சில காரணங்களாலும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக வைரஸால் ஏற்படும் சுவாச நோய்கள், வாகனப் புகை, பட்டாசு புகை போன்றவற்றால்கூட ஆஸ்துமா ஏற்படலாம்.

முதன்மைக் காரணம்

ஆஸ்துமா உண்டாகப் பற்பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைதான். இந்தக் காரணங்களால் குழந்தைகளில் 80 சதவீதம் பேருக்கும், பெரியவர்களில் 50 சதவீதம் பேருக்கும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட நபருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் ஒவ்வாமை ஊக்கிகளைக் கண்டறிய ரத்தப் பரிசோதனைகள் மற்றும் தோல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நமது நாட்டிலும் நீண்ட காலமாக இந்தப் பரிசோதனைகள் நடைமுறையில் உள்ளன. தடுப்பு சிகிச்சை முறைகளும் நடைமுறையில் உள்ளன. முன்பு ஊசிகள் மூலமே செய்யப்பட்டுவந்த இந்தச் சிகிச்சை, தற்போது முன்னேற்றம் அடைந்து நாக்குக்கு அடியில் வைக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வாமையைக் கண்டறிந்து அதைத் தடுப்பதன் மூலம் ஆஸ்துமா வருவதைத் தடுக்க முடியும்.

ஒவ்வாமை ஊக்கிகள்

மெத்தை மற்றும் தலையணையில் காணப்படும் ஹவுஸ் டஸ்ட் மைட் எனும் உண்ணி, பூக்களின் மகரந்தம், கரப்பான் பூச்சி, வளர்ப்புப் பிராணிகளின் உதிர்ந்த உரோமம் மற்றும் உமிழ் நீர், பால், முட்டை, மீன் மற்றும் இறால், வேர்க்கடலை, சில பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ஒவ்வாமை ஊக்கிகள், ஆஸ்துமாவைத் தூண்ட இவை முக்கியக் காரணமாக உள்ளன. இவை உடலுக்குள் நுழையும்போது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.

அந்த நேரத்தில் தொடர் தும்மல், மூக்கில் நீர்வடிதல், மூக்கு மற்றும் கண்களில் அரிப்பு, தொண்டை அரிப்பு மற்றும் தொடர் இருமல் ஏற்படலாம். இவ்வாறாக அடிக்கடி நிகழும்போது சுவாசப் பாதைகளில் மெதுவாக வீக்கம் அல்லது சுருக்கம் போன்ற உருமாற்றம் ஏற்பட்டுச் சுமார் 10 ஆண்டுகளில் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த ஒவ்வாமை ஊக்கிகள் அண்டாமல் பார்த்துக்கொண்டாலே, ஆஸ்துமாவைப் பெருமளவு தடுத்துவிட முடியும்.

ஜெ. பாலசுப்பிரமணியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x