Last Updated : 26 Feb, 2014 12:00 AM

 

Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

தேன்சிட்டு இளவரசி

ரொம்ப காலத்துக்கு முன்னால் ராஜா ஒருத்தர் இருந்தார். அவருடைய நாட்டில் எங்கு பார்த்தாலும் பஞ்சம். ஆனால் அந்த ராஜா மக்களின் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. வேட்டையாடிக்கொண்டும் தன் மந்திரிகளோடு உற்சாகமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டும் இருந்தார்.

அந்த ராஜாவுக்கு ஒரே ஒரு பெண். அவளுக்கு அம்மா இல்லை. அதனால ராஜா அவளைச் செல்லமா வளர்த்துவந்தார். அந்த இளவரசிக்கு ஒருநாள் தேன் குடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

ராஜா தன் சேவகர்களிடம் தேனைக் கொண்டுவர ஆணையிட்டார். மழை பெய்யாததால் நாட்டில் எங்கும் செடிகொடிகள் முளைப்பதே இல்லை. அரண்மனையில் மட்டும்தான் தோட்டம் இருக்கிறது. சரி அங்கே உள்ள பூக்களிலிருந்து தேனை எடுத்து வரலாம் என்று சேவகர்கள் அரண்மனைத் தோட்டத்துக்குப் போனார்கள். தோட்டமே பூத்துக் குலுங்கியிருந்தது.

ஆஹா, நிறைய தேன் இருக்கும் என்ற மகிழ்ச்சியில் ஒவ்வொரு பூவாகப் போய்ப் பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. எதிலுமே தேன் இல்லை. எல்லாத் தேனும் எங்கே போனது? யார் எடுத்துப் போயிருப்பார்கள்?

சேவகர்கள் ராஜாவிடம் போய் தினமும் முறையிட்டார்கள். ஒரு நாள் ராஜாவுக்குக் கோபம் வந்து, “தேன் காணாமல் போவதுக்கு யார் காரணமோ அவங்கள ரெண்டு நாளுக்குள்ள கண்டுபிடிக்கலன்னா உங்க எல்லாருக்கும் சிறைத் தண்டனை” என்று ஆணையிட்டார்.

நடுங்கிப்போன சேவகர்கள் இரவு முழுக்கத் தோட்டத்தில் மறைந்திருந்து காவல் காக்க முடிவு செய்தார்கள். நள்ளிரவு தாண்டிவிட்டது. யாரும் காணவில்லை.

பொழுது விடிவதற்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் செடிகளிலுள்ள மொட்டுக்கள் மெதுவாகத் திறக்க ஆரம்பித்தன. கொஞ்சம் வெளிச்சம் வர ஆரம்பித்ததும் மொட்டுக்கள் வேகவேகமாகத் திறந்துகொண்டன.

அடுத்த நொடியே ஏதோ ஒரு சத்தம் பறந்து வருவதுபோல. என்னவென்று பார்த்தால் சின்னஞ்சிறிய பறவை. பொழுது விடிந்த மகிழ்ச்சியில் உற்சாகமாகப் பாடிக்கொண்டு ஒவ்வொரு பூவாகப் போய்த் தேன் குடிக்க ஆரம்பித்தது.

தேன் காணாமல் போன மர்மம் சேவகர்களுக்குப் புரிந்தது. இந்தப் பறவையை எப்படிப் பிடிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. மறுநாள் வலையோடு வந்து, அதை பிடித்துக்கொண்டு ராஜாவிடம் சென்றார்கள்.

“சுண்டெலியைவிடச் சின்னதா இருக்கு. இதையெல்லாம் போய் குற்றவாளி மாதிரி பிடிச்சிக்கிட்டு வந்திருக்கிறீங்களே” என்று சிரித்தபடியே கேட்டார்.

“மரியாதையாகப் பேசுங்கள். இல்லையென்றால் உங்கள் காதில் புகுந்து கண் வழியாக வந்திடுவேன்” என்று அந்தப் பறவை பேசியதும் ராஜா திடுக்கிட்டுப் போனார்.

ராஜா அதட்டலாக, “பொடிப்பயல் உனக்கு மரியாதையா, நான் யார் தெரியுமா? இந்த நாட்டுக்கே ராஜா” என்றார்.

“நீங்கள் நாட்டுக்கு ராஜான்னா நான் காற்றுக்கு ராஜா. உங்களோட எதிரி நாட்டுக்குப் போயி உங்களால தண்ணிகூடக் குடிக்க முடியாது. ஆனா நான் எங்க வேணும்னாலும் போயித் தேன் குடிச்சிட்டு வருவேன்” என்றது பறவை.

கோபத்தில் அந்தப் பறவையை அடிக்க எழுந்த ராஜாவை, அங்கு வந்த இளவரசி தடுத்துவிட்டாள். “அடிக்காதீங்கப்பா, அது உண்மையத்தான பேசுச்சு. பாருங்க எவ்வளவு சின்னதா அழகா இருக்கு. அதப் போயி யாராவது அடிப்பாங்களா?” என்றாள் இளவரசி.

அந்தப் பறவையின் பெயர் என்ன என்று இளவரசி அதைப் பார்த்துக் கேட்டாள். “எனக்குப் பேரெல்லாம் கிடையாது. என்னை என் பெண்டாட்டி போடான்னு சொல்லுவா. நானும் அவளை போடின்னு சொல்லுவேன் அவ்வளவுதான்” என்றது அது.

“சரி உனக்கு நான் பேர் வைக்கிறேன். நீ தேன் குடிக்கிறதுனால உன்னோட பேரு தேன்சிட்டு” என்றாள்.

“ஹையா.. நல்லாத்தான் இருக்கு. என் பெண்டாட்டிகிட்டப் போயி சொல்றன். நான் புருஷன் தேன்சிட்டு. அவ பெண்டாட்டி தேன்சிட்டு” என்று வலைக்குள் ஆடிப் பாடியது.

அதைத் தன் கைகளால் வெளியில் எடுத்து, அதற்கு இளவரசி முத்தம் கொடுத்தாள்.

“சரி நான் உன்ன விடுறன். ஆனா தினமும் எனக்கும் தேன் கொண்டுகிட்டு வரணும் என்ன?” இளவரசி தேன்சிட்டைக் கேட்டாள்.

“நீங்க வேற. நாட்டுலேயே உங்க தோட்டத்துல மட்டும்தான் செடிகொடியே இருக்குது. எங்களுக்கே அந்தத் தேன் பத்தலை. உங்களுக்கு எப்படி நான் தேன் கொண்டுவர முடியும்?” என்றது தேன்சிட்டு.

அப்புறம் என்ன? மகள் தேன் குடிக்க வேண்டும் என்பதற்காக ராஜா நாடு முழுக்கப் பூச்செடிகளையும் மரக் கன்றுகளையும் நட்டார். அந்தச் செடிகொடிகளுக்கெல்லாம் தண்ணீர் வேண்டும் என்பதற்காகக் கிணறுகளையும் குளங்களையும் வெட்டினார். ஒரு சில ஆண்டுகளுக்குள் நாடே பூந்தோட்டம் போல ஆனது.

மரம் செடிகொடிகள் அதிகமானதால் தேவையான மழையும் நாட்டில் பெய்தது. ராஜாவையும் இளவரசியையும் தேன்சிட்டையும் மக்கள் மனதார வாழ்த்தினார்கள். தேன்சிட்டுக்குப் பெயர் வைத்த அந்த இளவரசிக்குத் தேன்சிட்டு இளவரசி என்ற பெயரை மக்கள் சூட்டினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x