ஒரே நாளில் குரூப்-2, ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு - மாணவர்கள் குழப்பம்

ஒரே நாளில் குரூப்-2, ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு - மாணவர்கள் குழப்பம்
Updated on
1 min read

ஒரே நாளில் குரூப்-2 தேர்வும், ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வும் நடத்தப்படுவதால் எந்தத் தேர்வை எழுதுவது? என்று மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக பிரிவு அதிகாரி உள்பட பல்வேறு பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்பும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. டிசம்பர் 1-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத்தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு ஏறத்தாழ 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., ஐ.எப்எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை சென்னை உள்பட நாடு முழுவதும் 19 மையங்களில் நடத்தப்படுகிறது.

மாணவர்கள் குழப்பம்

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களில் கணிசமான நபர்கள் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு எழுதவும் தகுதிபெற்றிருக்கிறார்கள். எனவே, டிசம்பர் 1-ம் தேதி அன்று குரூப்-2 தேர்வும், ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வும் நடத்தப்படுவதால் எந்த தேர்வை எழுதுவது என்று முடிவெடுக்க முடியாமல் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

குரூப்-2 தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு காலஅட்டவணையை மத்திய பொது பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தும்போது மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வோ, ரயில்வே தேர்வோ, ஆசிரியர் தேர்வோ நடத்தப்படுவதாக இருந்தால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி மாற்றப்படுவது வழக்கம்.

டி.என்.பி.எஸ்.சி.க்கு வேண்டுகோள்

எனவே, ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு எழுதும் தமிழக மாணவ-மாணவிகள் குரூப்-2 தேர்வையும் எழுதும் வகையில் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறைந்தபட்சம் 15 பேரிடம் இருந்து தேர்வு தேதியை மாற்றியமைப்பது என்ற கோரிக்கை வரப்பெற்றால் அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in