Published : 06 Nov 2013 11:08 am

Updated : 06 Jun 2017 14:06 pm

 

Published : 06 Nov 2013 11:08 AM
Last Updated : 06 Jun 2017 02:06 PM

இந்தியப் படம் என்றாலே பாலிவுட் படம்தானா? - கோஸ்டா-காவ்ரஸ் சிறப்புப் பேட்டி

கோஸ்டா-காவ்ரஸுக்கு 80 வயதாகிறது. கிரேக்கத்தில் பிறந்து பிரான்ஸில் தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த இந்த அற்புதமான திரைப்படத் தயாரிப்பாளர், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசாவிட்டாலும், தன்னுடைய கருத்துகளையும் படைப்புத் திறனையும் அருமையாக வெளிப்படுத்தத் தெரிந்தவர். மும்பையில் (அக்டோபர் 17 24) நடைபெற்ற 15-வது மும்பை திரைப்பட விழாவில் சர்வதேச வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற காவ்ரஸ்… திரைப்படம், அரசியல் என விரிவாகப் பேசினார்.

நீங்கள் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘இசட்’, சில மாறுதல் களுடன் ‘ஷாங்காய்’என்ற பெயரில் இந்தியில் வெளியாகியிருக்கிறது. இதைப் பார்த்தீர்களா அல்லது ஏதாவது கேள்விப்பட்டீர்களா?


துரதிர்ஷ்டவசமாக அந்தத் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. இந்தத் திரைப்படத்தின் உரிமை வேண்டும் என்று என்னை முதலில் அணுகினார்கள். நாவலாசிரியரைப் போய்ப் பாருங்கள் என்று அவர்களிடம் கூறினேன்.

பாலிவுட் படங்கள் உங்களை அவ்வளவாக ஈர்க்கவில்லையோ?

எல்லா இந்தியத் திரைப்படங்களும் பாலிவுட் படங்களாகவே இருக்கின்றன. சத்யஜித் ராய்க்குப் பிறகு இந்தியத் திரைப்படம் என்றால் பாலிவுட் தவிர வேறு ஏதும் இல்லை என்றாகிவிட்டது. உலகம் முழுக்க பாலிவுட் திரைப்படங்களைத்தான் இந்தியத் திரைப்படங்களாகத் திரையிடு கின்றனர். பாலிவுட் படங்கள் என்றால், மிகுந்த பொருட்செலவில் ஏராளமான நடனமணிகளுடனான பாடல்களும் இசையும் நிரம்பிய படங்கள் என்பது புரிகிறது. அவற்றில் சில படங்களை ரசிக்கிறேன், சிலவற்றை ரசிக்கவில்லை. உண்மையில், இந்தப் படங்கள் சொல்லவரும் கலாச்சாரம் எங்களுக்குப் புரிவதில்லை. எனவே, எங்களுக்கு இந்தப் படங்கள் பெரிய ஈர்ப்பாக இல்லை.

நாங்கள் அரசியல் சார்ந்த படங்களை எடுப்பதில்லை என்கிறீர்களா?

திரைப்படமே அரசியல்தான். ஏன் என்றால், அது எதையுமே சொல்வ தில்லை!

ஐரோப்பியக் கலைகள், அமெரிக்க பாப் கலாச்சாரம், இந்தி சினிமாக்கள் ஆகியவற்றின் ரசனை வெவ்வேறானது என்று கருதுகிறீர்களா?

ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் ஒவ்வொருவித ரசனை உண்டு. ஒரு நாட்டின் கலாச்சாரத்தோடு மற்றொரு நாட்டுக் கலாச்சாரத்தை ஒப்பிட்டுப்பார்ப்பதே கூடாது. கலாச்சாரம் என்பது நிரந்தர மானது. ஒவ்வொரு நாட்டுக்கும் செல்லும்போது அந்த நாட்டின் கலாச்சாரம் என்ன என்பதை அறிய முற்படுவேன். அவர்களுடைய உணவு, இசை, திரைப்படம், நாடகம் ஆகியவற்றிலிருந்து அவற்றை உணர விரும்புவேன். பாலிவுட் படங்களும் அமெரிக்கப் படங்களும் பொழுதுபோக்க உதவுகின்றன. ஆனால், உண்மையான பிரச்சினை எதையும் இவை அலசுவதில்லை.

ஷேக்ஸ்பியரும் சரி, சோபோகிள்ஸும் சரி, மொலீயரும் சரி, பொழுதுபோக்கு நாடகங்கள் எழுதியவர்கள்தான். ஆனால், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இவர்கள் மூவருமே கலாச்சாரம்குறித்து நமக்குச் சிலவற்றை எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

கலை வடிவம் என்பது சமூகத்தைக் குறித்தும் அதன் பிரச்சினைகள் குறித்தும் எதையாவது சொல்ல வேண்டும். கிரேக்கத்தில் அந்தக் காலத்தில் கூறுவார்கள், “நாடகமும் கலையும் ஆன்மாவுக்கு வழிகாட்ட வேண்டும்” என்று. மக்கள் திரைப்படத்தை நாடுகிறார்கள். ஏனென்றால், அவைதான் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு எளிதாகச் செல்ல முடிந்த கலை வடிவம்.

உங்களுடைய கருத்துப்படி இன்றைய சமூகத்தின் வில்லன்கள் யார்? இந்தக் கட்டமைப்பு முறை மிகவும் சக்திவாய்ந்தது, ஊழல் நிறைந்தது என்று கருதுகிறீர்களா?

இன்றைய சமூகத்தில் வில்லன்கள் நாம்தான். ஏனென்றால், வில்லன்களைத் தேர்ந்தெடுப்பதே நாம்தான். அவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கி றார்கள். அவர்கள் அதைப் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது நம்முடைய மகிழ்ச்சியும் துயரமும்.

இன்றைய அரசியலில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறதா?

தொழில்நுட்பம் என்பது நல்லதாகவோ தீயதாகவோ இருக்கலாம். முதலாளித்துவம், கம்யூனிசம்போல அது ஓர் அமைப்பு. ஆபத்தில்லாமல் உயிர் வாழ நாம்தான் வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது சமநிலை என்பதே இல்லை. முதலாளித்துவம் வெற்றிக் களிப்பில் மிதக்கிறது. அதற்குச் சவால்விடும் மாற்று அமைப்பு இல்லாததால் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உலகம் ஆட்பட்டிருக்கிறது.

எந்த ஓர் அமைப்பும் கட்டுப்பாட்டுக்குள் அல்லது ஒழுங்கமைவுக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் உலகில் மக்கள் நலமாக வாழ முடியும். ஆனால், இப்போது ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் நடுத்தர வருவாயுள்ள மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போது அது சுருங்கிவருகிறது. முதலாளித்துவ வாழ்க்கைமுறைக்கு சவால் விடுக்கும் மாற்று ஏற்பாடு அவசியப்படுகிறது. அந்த மாற்று எது என்று எனக்குத் தெரியவில்லை. நம்முடைய மற்றொரு பிரச்சினை கல்வி. அது இப்போது தவறான வர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் வாழ்க்கையின் உன்னதத்தையும் பார்த்துவிட்டோம், தாழ்வையும் அனுபவித்துவிட்டோம். மிகப் பெரிய போர்களையும் படுகொலைகளையும் - தொழில்நுட்பம் மூலம் அசாதாரணமான தீர்வுகளையும் பார்த்துவிட்டோம்.

சந்தை வாய்ப்புகளையும் கருத்தில்கொண்டு, எந்த மாதிரியான அரசியல் திரைப்படங்களைத் தயாரிக்கலாம் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு யோசனை சொல்ல விரும்புகிறீர்களா?

நீங்கள் எந்தப் பிரச்சினையை மையப்படுத்த நினைக்கிறீர்களோ அதை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கவனித்துவாருங்கள். ஒரு கதையைத் திரைப்படமாக எடுப்பதற்கு முன்னால், தொடர்ந்து அதையே சிந்தித்து, அதனுடனேயே வாழ வேண்டும். அரசியல் என்பது என்ன? அடுத்தவர்கள் உணர்வை நாம் எப்படி மதிக்கிறோம், அடுத்தவர்களின் கண்ணியத்தை நாம் எப்படி மதிக்கிறோம் என்பதுதான். யாருக்கு நாம் வாக்களிக்கிறோம் என்பது மட்டுமே அரசியல் அல்ல. பிரெஞ்சு தத்துவ அறிஞர் ரோலன் பார்த் கூறுவார், “எல்லாத் திரைப்படங்களுமே அரசியல்தான்” என்று. திரைப்படங்களிலிருந்து அரசியலை விலக்கக் கூடாது. ஏனென்றால், எல்லோருமே அரசியலின் அங்கம்தான்.


கோஸ்டா-காவ்ரஸ் பேட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

the-hundred

இனி செஞ்சுரிதான்!

இணைப்பிதழ்கள்

More From this Author

x