

‘கல்லூரி மாணவர்கள் மோதல்.. கத்திக்குத்து’, ‘பஸ்ஸில் நடத்துநரை தாக்கிய மாணவர்கள்’, ‘பஸ்ஸுக்குள் மாணவர்கள் பாட்டுப்பாடி கலாட்டா.. பயணிகள் கடும் அவதி’.. இதெல் லாம் இப்போது சென்னையில் அன்றாட செய்திகளாகிவிட்டன. நகரில் ஏகப்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால் அடிதடி, அராஜகம் போன்ற செய்திகளுக்கு சொந்தம் கொண்டாடுவது நந்தனம் கலைக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரி ஆகியவைதான்.
பிற கல்லூரி மாணவர்களை வேற்று கிரக வாசிகள் போல பார்ப்பதே மாணவர்களின் மோதலுக்கு அடிப்படைக் காரணம். கலாச்சார சீரழிவும் இதற்கு துணை நிற்கிறது. மாணவர்களிடம் ஊறிப்போயுள்ள மோசமான சிந்தனைகள் மாற வேண்டும் என்கின்றனர் சமூக சிந்தனையாளர்கள்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:
பிரச்சினைகளில் ஈடுபடும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தவறு செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் தயங்கக் கூடாது. நான்கு கல்லூரிகளும் சுயாட்சி அதிகாரம் பெற்றவை. மாணவர்களின் முழு மதிப்பெண்களும் ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது. பிரச்சினை செய்யும் மாணவர்கள் மீது அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை. கல்லூரி நிர்வாகங்கள் முழு முயற்சியில் இறங்கி செயல்பட்டால் நிச்சயம் இந்தப் பிரச்சினைகளை சரி செய்ய முடியும்.
இவ்வாறு திருவாசகம் கூறினார்.
மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாண வர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், ‘‘கல்லூரி மாணவர்கள் குரூப் சேர்ந்து கொண்டு சண்டை போடுவது சாகசமாகவே தெரியும். சாலையில் அராஜகம் செய்யும் மாணவர்களை அருவருப்பான பிராணிகளைப் போலத்தான் மக்கள் பார்க்கின்றனர். இதை மாணவர்கள் உணர வேண்டும். சண்டையில் காட்டும் துணிச்சலை படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் காட்ட வேண்டும்’’ என்றார்.
பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை முன்னாள் தலைவரும், மாணவர் சங்க செயலாளருமான ஐசரி கணேஷ் கூறும் போது, ‘‘மாணவர்கள் தங்களை முதலில் மாணவர் களாக நினைத்துக் கொள்ள வேண்டும். அடி தடியில் ஈடுபடுவது நமது வேலை இல்லை. சக மாணவனை சகோதரனாகப் பார்க்க வேண்டும். இதை பழக்கத்துக்கு கொண்டு வந்தால் மட் டுமே மோதலைத் தடுக்க முடியும்’’ என்றார்.
நந்தனம் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர் சுதர்சனிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு வருக்கும் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும் டீன் ஏஜ் இறுதிப் பருவம். இந்தப் பருவத்தில்தான் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குள் நுழைகின்றனர். அவர்களின் எண்ணங்களை சிதறடிக்கும் வேலைகளையோ, அவர்களின் நம்பிக்கைகளை சீர்குலைக்கும் செயல்களையோ சீனியர் மாணவர்கள் செய்யக்கூடாது. பெரியவர்களும் மாணவர் களை குறை கூறுவதோடு நிற்காமல், அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக நடக்க வேண்டும்’’ என்றார்.
‘‘எல்லா மாணவர்களும் பிரச்சினைகளில் ஈடுபடுவதில்லை. ஒரு சில மாணவர்களால் மற்ற மாணவர்களின் படிப்பும் வீணாகிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று முக்கியமான 5 மாணவர்களை சந்தித்துப் பேசி, மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத் திருக்கிறேன்’’ என்கிறார் மாணவர் பேரவைத் தலைவர் ஞான கார்த்திகேயன்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பிரச்சினை செய்யும் மாணவர் களின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களின் பிரதி நிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மோ தலில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாணவர்களுக்கு சிறப்பு கவுன் சலிங் மற்றும் ஆளுமை பயிற்சிகள் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.