Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM

ஒரே கட்ஆப் மார்க் வந்தால் மூத்தவர்களுக்கு முன்னுரிமை- இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் அரசு முடிவு

தகுதித்தேர்வு மதிப்பெண் உள்ளிட்ட வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 12,596 பேர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 14,496 பேர் தேர்ச்சி பெற்றனர்.

வெயிட்டேஜ் மார்க் முறை

இந்நிலையில், இடஒதுக்கீடுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கி தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. எனவே, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் இரு தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். சலுகை காரணமாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவர் என்ற விவரத்தை இடஒதுக்கீடு பிரிவுவாரியாக கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வெயிட்டேஜ் மார்க் மூலம் கட்ஆப் மதிப்பெண் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்த மார்க் 100. இதில் 60 சதவீத மதிப்பெண் தகுதித் தேர்வுக்கும், எஞ்சிய மதிப்பெண்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரி

யர் பட்டயத் தேர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பலர் ஒரே மதிப்பெண்

60 சதவீதம் தேர்ச்சி என்ற கணக்கீட்டின் கீழ் முன்பு அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அப்போது கட்ஆப் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டது. இதில் 73, 74, 75, 76, 77 கட்ஆப் மதிப்பெண்ணில் ஏராளமானோர் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஒரே கட்ஆப் மதிப்பெண் வந்தால் தகுதித் தேர்வு மதிப்பெண் பார்க்கப்படுமா? பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படுமா? அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை பார்ப்பார்களா என்ற பல்வேறு சந்தேகங்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, பணிநியமனப் பணிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால், பிறந்த தேதி அடிப்படையில், அதாவது வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக முன்பு வெளியிடப்பட்ட அரசாணையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x