Last Updated : 05 Oct, 2014 01:54 PM

 

Published : 05 Oct 2014 01:54 PM
Last Updated : 05 Oct 2014 01:54 PM

செய்திகள் வாசிப்பவர் பத்மினி பிரகாஷ்

கண்ணைக்கூசும் வெண்ணிற விளக்குகள் சுற்றிலும் ஒளிர, கணீரென்று ஒலிக்கிறது அந்தக் குரல். ‘லோட்டஸ் செய்திகள் வாசிப்பது...’ என்ற அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் பத்மினி பிரகாஷ். நெற்றி வகிட்டில் மிளிரும் குங்குமம், அளவான புன்னகை, உடுத்தியிருக்கும் ஆடைக்கு ஏற்ற ஆபரணங்கள் இவைதான் பத்மினியின் அடையாளம். ஒரு செய்தி வாசிப்பாளரின் அடையாளம் இதுதானே, இதில் என்ன புதுமை என்று யோசிக்கலாம். புதுமை இருக்கிறது. செய்தியில் அல்ல, செய்தி வாசிப்பவரிடம்.

முதல் இடத்தில் மூன்றாம் பாலினம்

பத்மினி பிரகாஷ், இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு ஏளனத்துக்கு ஆளாகும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி வரலாற்றில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் முதல் திருநங்கையும் இவரே.

இவர்கள் சாதாரணமாகப் பேசினாலே சுற்றியிருப்பவர்களின் கேலிக்குள்ளாக வேண்டிய அவல நிலைதான் இப்போதும் நீடிக்கிறது. இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொலைக்காட்சி சேனலில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். லோட்டஸ் சேனலில் தினமும் மாலை 7 மணி முதல் 7.30 மணி வரை பத்மினி பிரகாஷ் வாசிக்கும் லைவ் செய்திக்கு இன்று ரசிகர்கள் அதிகம்.

“இதுதான் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்” என்று புன்னகையோடு சொல்கிற பத்மினியின் முக அலங்காரம் நடிகை சரோஜாதேவியை நினைவுபடுத்துகிறது. முகபாவம் செய்தி வாசிப்பாளார் ஷோபனா ரவியையும், வார்த்கைளின் அழுத்தம் ஆகாஷவாணி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமியையும் நினைவுபடுத்துகின்றன.

“இவங்க மூணு பேருமே சிறு வயது முதலே என்னோட இன்ஸ்பிரேஷன்” என்கிறார். பத்மினி பிரகாஷ் சேனலில் முகம் காட்டி ஒரு மாதம்தான் ஆகிறது. அதற்குள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயங்கும் லிப் டி.வி.யில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த விவாத நிகழ்ச்சியில் இவரைப் பற்றி விவாதித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட வெப்சைட்டுகளில் பத்மினியைப் பாராட்டி எழுதி, தங்கள் வாழ்த்துக்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். யூ ட்யூப், ஃபேஸ் புக், ட்விட்டர் என பல தளங்களிலும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

‘‘நான்தான் உலகத்திலேயே திருநங்கைகளில் முதல் செய்தி வாசிப்பாளராக இருப்பேன்னு எனக்கே தெரியாது. திருநங்கைகள் என்றாலே ஒன்று பாலியல் தொழிலில் இருப்பார்கள் அல்லது கடைகடையாகச் சென்று கைத்தட்டி பிச்சையெடுப்பார்கள் என்பதுதான் பலரது நினைப்பு. ஒரு திருநங்கையின் வீட்டுக்கு ஒரு ஆண் எதற்காக வருவார் என்பதையும் இந்தச் சமூகமேதான் முடிவுசெய்து வைத்திருக்கிறது.

ஆனால் அப்படி எந்த நோக்கமும் இல்லாமல் இரண்டு இளைஞர்கள் சில மாதங்களுக்கு முன் என் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அவர்கள் என்னைத் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிய அழைத்தபோது என்னால் நம்பவே முடியவில்லை” என்று சொல்லும் பத்மினி, தன்னைக் கேலி செய்யவே அந்த இளைஞர்கள் தன்னிடம் அப்படிச் சொன்னதாக நினைத்தார்.

புது அவதாரம்

பிறகு அவர்கள் விடாப்பிடியாக வற்புறுத்தி தொலைக்காட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, கேமரா முன் நிறுத்தி 35 நாட்கள் இடைவிடாது பேச்சுப் பயிற்சி கொடுத்தார்கள். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று இவர் வாசித்த செய்தியை நேரடியாக ஒளிபரப்பியபோதுதான் பத்மினிக்கே நம்பிக்கை வந்திருக்கிறது.

எந்த இடத்திலும் தன் பால்ய கால பெயரையோ, குடும்பத்தைப் பற்றியோ சொல்ல மறுத்த பத்மினி கடந்து வந்த பாதை ஆச்சரியம் தருகிறது. பத்மினி பிறந்தது கோவையில். சிறுவயதிலேயே இவருடைய தாய் இறந்துவிட்டார். தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்தவர், பக்கத்து வீட்டு மாமியின் பரதநாட்டியத்தில் லயித்துப் போனார். அவரின் பரதமும் பாடலும் பத்மினியின் கால்களிலும் நாவிலும் நர்த்தனம் புரிந்தன. இவர் பெண் வேடமிட்டு ஆடுவதைப் பார்த்து தவித்துப்போனார் தந்தை. சதா பிரம்படி.

“நான் பெண்பிள்ளை என சொல்லி கண்ணுக்கு மை தீட்டி, நெற்றிக்கு பொட்டிட்டு, தலைநிறைய பூச்சூடிக் கொள்வேன். சமைப்பது, கோலம்போடுவது என என் ஆர்வம் அதிகரித்தபோது வீட்டில் ருத்ர தாண்டவமே நடந்தது” என்கிற பத்மினிக்கு அதற்குப் பிறகு நேர்ந்தது எல்லாம் துயரமே.

‘நீ எனக்கு பிள்ளையே இல்லை, செத்துப்போ!’ என்று அவருடைய தந்தை சொன்ன ஒரு நாளில் கை நிறைய அரளி விதைகளைப் பறித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள சுடுகாட்டுக்குப் போனார். அங்குள்ள சமாதி மேல் ஒரு பாறையில் வைத்து மைபோல் அரைத்து விழுங்கிய அந்தச் சிறுவனுக்கு அப்போது 14 வயது.

கண் விழித்துப் பார்த்தபோது ஒரு ஆசிரமத்தில் இருந்தான் அவன். ‘உன் உயிரைக் காப்பாற்ற எத்தனை கஷ்டப்பட்டோம் தெரியுமா? ஏனம்மா இப்படிச் செய்தாய்?’ என்று ஆசிரமப்பொறுப்பாளர்கள் கேட்டபோது கதறியழுதான். கதையெல்லாம் சொன்னான். அந்த ஆசிரமம்தான் அவனது ஆசையை நிறைவேற்றி அவனை ஒரு பெண்ணாக அங்கீகரித்தது. அங்குள்ள சிறுமிகளுக்கு நாட்டியக் கலையை சொல்லித்தரும் ஆசிரியையாக நியமித்தது.

இனிக்கும் இல்லறம்

மீண்டும் சமூகத்தின் கேலி கிண்டல்கள், வாழ்கையில் விரக்தி. திருநங்கைகளுக்கே உரிய அசுர வேகத்தோடு மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை எனப் பயணம். தனிமையில் இருந்தபோது புத்தகங்கள் ஈர்த்தன. சிறுகதை, நாவல் எனப் படைக்கத் தூண்டியது. ஒரு கட்டத்தில் சிறுகதைகள் எழுதி வார இதழ்களுக்கு அனுப்பியிருக்கிறார் பத்மினி. அவற்றில் சில பிரசுரமும் ஆகியிருக்கின்றன.

திருநங்கைகளுக்கிடையேயான மிஸ் தமிழ்நாடு, மிஸ் இந்தியா போட்டிகளில் பங்கு பெற்று முதல் பரிசு பெற்று மிளிர்ந்தபோதுதான் தன் தேடல் நிறைவுபெற்ற மனநிறைவை அடைந்திருக்கிறார்.

“திருநங்கைகள் என்றாலே பிச்சையெடுப்பதும், இளைஞர்களைப் பாலியல் இச்சைக்கு அழைப்பதும்தானா? அதை மாற்ற வேண்டும். உலகிலேயே பெரும் நோய் எய்ட்ஸ். அதன் தீமையை ஒரு திருநங்கையைவிட யார் அறிவார்? அதனால் ‘தாய்’ அமைப்பில் சேர்ந்து அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்” என்று சொல்லும் பத்மினிக்கு விளம்பரப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ‘மதுபானக்கடை’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஜீ தமிழ் சேனலில் ருத்ரா தொடரில் ஒரு வருடம் பங்கேற்பு, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் திருநங்கைளின் அவல நிலை பற்றிய பேச்சு எனப் பலரது கவனத்தையும் பத்மினி ஈர்த்தார்.

‘‘சிறு வயதில் என்மீது காதல் கொண்டவர் பிரகாஷ். நான் பல ஊர்கள் கடந்து, பல மொழிகள் தெரிந்து திரும்பி வந்து பார்த்தபோது அப்படியே நின்றார். அவரையே என் வாழ்க்கைத் துணையாக ஏற்றேன். பெண்ணாக உணரும் எனக்கும் தாயாகும் ஆசையும் ஏற்பட்டது. நல்ல மனம் கொண்ட ஒருவர் குழந்தையைத் தத்தெடுக்க உதவினார். நான் என் குழந்தைக்கு நிலா சோறு ஊட்டுகிறேன்!’’ என்று சொல்லும் பத்மினியின் முகத்தின் தாய்மையின் பூரிப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x