Last Updated : 11 Mar, 2017 11:35 AM

 

Published : 11 Mar 2017 11:35 AM
Last Updated : 11 Mar 2017 11:35 AM

உயிர் வளர்த்தேனே 26: சத்தும் சுவையும் நிறைந்த சோற்றுக் கூட்டணி

பள்ளிப் பருவ மாணவர்களுக்கான உணவு குறித்து இன்னும்கூட விரிவாகப் பேச வேண்டியுள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பார்க்கலாம். இப்போதைக்கு அரிசியில் செய்யும் வழக்கமான சோறு வகைகளைக் கடந்து வேறு சில சத்தான சோறு செய்முறை பற்றியும், அரிசியில் சோறு, இட்லி, தோசை தவிர்த்த வேறு எளிய உணவைச் சமைக்கும் முறை பற்றியும் பார்ப்போம்.

கொள்கைக் கூட்டணி உண்டா?

அவசரத்துக்கு வடித்த சோற்றுடன் ஏதாகிலும் ஒன்றுடன் தொகுதிப் பங்கீடு செய்து, அந்தந்தச் சேர்மானத்துக்கேற்ப கவர்ச்சியாக மாங்காய் சாதம், தேங்காய் சாதம் எனக் கூட்டணிக்குப் பெயர் சூட்டியும் விடுகிறோம். உண்மையில் காலத்தின் தேவை கருதி ஏதேனும் ஒரு கொள்கைக் கூட்டணியை உருவாக்குகிறோமா என்றால், அது வெகு அபூர்வம்தான்.

நம் காலத்தில் தோல் அரிப்பு, ஒவ்வாமை போன்ற தோல் தொடர்பான நோய்கள் பரவலாகிவருவதையும், அதற்கான முதன்மைக் காரணியையும் கடந்த வாரம் பார்த்தோம்.

அதுபோலவே ஆண், பெண் இரு பாலருக்கும் வயது வேறுபாடின்றி முடி உதிர்வது முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. அவற்றுக்கு ஏற்ற சோறு வகைகள் குறித்தும் பார்க்கலாம்.

முடி உதிர்தல் பிரச்சினை தீர

சமையலில் பயன்படுத்தும் கொத்துமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகிய தழை வகைகள் உயிர்ச்சத்து மிக்கவை. இவற்றைத் தொட்டும் தொடாமலும்தான் பாவிக்கிறோம். இவை மூன்றையும் சம அளவில் சேர்த்துச் சாறு பிழிந்து, சக்கையை நீக்கி, அச்சாற்றை உலை நீராக ஊற்றி அரிசியைப் போட்டுத் தம் கட்டினால் பச்சை வண்ணத்தில் கமகமக்கும் சோறு, கண்ணுக்கும் மனதுக்கும் கிளர்ச்சியூட்டும். இச்சோறு நாவுக்குச் சுவையாக இருப்பதோடு மேனிக்கும் இதம் தரும்.

அதுபோலக் கறிவேப்பிலையை நிறம் மாறாதவாறு நல்லெண்ணெயில் பொறித்தெடுத்து, மிக்ஸியில் இட்டுத் தேங்காய்ப் பூவுடன் அரைத்து, உளுந்து, கடுகு, சீரகத்தை மேற்படி பொறித்து மீந்த நல்லெண்ணெயில் தாளித்து, அரைத்த கறிவேப்பிலை, தேங்காய் கலவையைப் புரட்டி, வடித்த சோற்றையும் சேர்த்துக் கிளறினால் கரும் பச்சை நிறத்தில் ஆவி பறக்கும் கறிவேப்பிலை சாதம் நாவுக்குச் சுவை தரும். அத்துடன் தலைமுடிக்கும் உரம் சேர்க்கும்.

தலைமுடிக்கு வலு தரும் மற்றொரு சோறு வகை நெல்லிக்காய் சோறு. நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி முடிந்த அளவு குறைவான நீர் விட்டுச் சின்ன ஜாரில் கெட்டியாக அரைத்து, ஒன்றிரண்டாக உடைத்த மிளகை நல்லெண்ணெயிலோ, நெய்யிலோ தாளித்துப் போட்டு, அத்துடன் அரைத்த நெல்லிக்காயைக் கொட்டி, வடித்த சோற்றையும் சேர்த்துக் கிளறினால் நாவை வருடும் இளம் புளிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையில் நெல்லிக்காய்ச் சோறு உங்களை அரவணைத்துக்கொள்ளும்.

குழந்தைகளுக்கு உலர்பழச் சோறு

சில குழந்தைகள் இனிப்பு போன்ற நொறுவைகளை மட்டுமே பெரிதும் விரும்புவார்கள். அவர்களுக்கு உணவைப் பழக்குவதற்கு `மூன்றாம் பிறை’ கமல்ஹாசனைப்போல ‘ஆட்ரா ராமா ஆட்ரா ராமா’ என்று குட்டிக் கரணம் அடித்தாலும் முடியாது.

`ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்’ என்பதுபோல நொறுவைகளை விரும்பும் குழந்தைகளுக்கு `உலர் பழச் சோறு’ தயாரித்தால், தயாரித்த மாத்திரத்திலேயே திருட்டுத்தனமாக எச்சிலை விழுங்கிக்கொண்டு ‘அது என்ன?’ என்றவாறு நெருங்குவார்கள்.

“உனக்கு இதெல்லாம் பிடிக்காது. நான் சாப்பிடும்போது பார்க்காதே. எனக்கு வயித்தை வலிக்கும். தூரமா போ” என்று பொய் பிகு காட்டி ஆவலைத் தூண்டும் விதமாகச் சப்புக்கொட்டி, இரண்டு வாய் சாப்பிட வேண்டும். அதைப் பார்த்து அவர்களே அச்சோற்றை நம்மிடமிருந்து பறித்து உண்பார்கள்.

‘உலர் பழச் சாதம்’ தயாரிப்பது, அப்படி ஒன்றும் பிரமாதம் அல்ல. தேங்காய்ப் பால் கொண்டு கச்சிதமாக தம் கட்டி, உதிரியாகச் சோற்றைப் பளீரென்ற வெள்ளை நிறத்தில் இறக்கி, ஆவி பறக்க ஆறவிட வேண்டும்.

மற்றொரு புறம் கொஞ்சம் பாதாம், முந்திரிப் பருப்பு வகைகளையும், உலர் பழங்களான திராட்சை, பேரீச்சை, குறைவான விகிதத்தில் அத்தி பழம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் பாக்குவெட்டியில் வெட்டியது போன்று பொடியாகக் கத்தரித்துக்கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யூற்றி, இளம் சூடேற்றி அதில் ஒன்றிரண்டு ஏலக்காய்களை உரித்துப் போட்டு மேற்படி கலவையைக் கருக விடாமல் புரட்ட வேண்டும். இதில் ஆறிய தேங்காய்ப்பால் சாதத்தைத் தூவிக் கிளறி இறக்க வேண்டும்.

இனிப்பும் மொறுமொறுப்பும் கூடிய இந்த `உலர் பழச் சோறு’, சோற்றைக் கண்டாலே விலகி ஓடும் குழந்தையை ‘வா… வா வா… என் அன்பே நீ வா’ என்று ஜிக்கி குரலில் கண் சிமிட்டி அழைக்கும்.

உணவுகள் விஷயத்தில் நாம் போதிய அளவுக்கு எல்லை தாண்டவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு அவ்வப்போது எழுவதுண்டு. உடல்நலம் என்ற அடிப்படைப் பண்பு சிதையாமல், புதிய முயற்சிகள் மேற்கொள்வது நமது அன்றாட வாழ்வை எளிமையாக்கும் என்று ஓர் ‘உணவு கொள்கை’யை வகுத்துக்கொள்ள வேண்டும்.

அன்னாசி சோறு

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்ற கிழக்காசிய நாடுகள் நம்மைப் போலவே உணவில் அரிசிக்கு முதன்மையான இடம் அளிப்பவை. அந்த ஊர் விருந்துகளில் மலேசிய உணவான ‘அன்னாசி சோறு’ குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடித்திருக்கும். இது, தெருவை கமகமக்கச் செய்யும் அன்னாசிப் பழம் பரவலாகக் கிடைக்கும் காலம். நாமும்கூட இதை முயற்சித்துப் பார்க்கலாம்.

ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் அரிசி, தேங்காய்ப் பாலை எடுத்துக்கொள்ள வேண்டும். பட்டை, கிராம்பு ஆகிய மசாலா ஐட்டங்களையும் ஒன்றிரண்டு காய்ந்த மிளகாய்களையும் நெய்யில் அல்லது நமக்குப் பிடித்த எண்ணெயில் தாளித்து, அரிசியைப் போட்ட பின்னர் முக்கால் அளவுக்குப் பழுத்த அன்னாசிப்பழத்தை ஓர் அங்குலச் சதுரங்களாக அரிந்து, அந்தத் துண்டுகளை அரிசியுடன் போட்டு மூடிவிட வேண்டும். சோறு வெந்ததும் மென் புளிப்பும், இனிப்பும் கலந்த வாசனை ஜிவ்வென்று ஆளைத் தூக்கும்.

நார்ச்சத்தும் சுவையும் மிகுந்த `அன்னாசிப் பழச் சோறு’ வயிற்று உபாதை, மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், எது எப்படியிருந்தாலும் நன்றாகப் பசித்து உண்பதே பொருத்தமான பலனைக் கொடுக்கும் என்பதை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

வருகிறது பழங்களின் காலம்

வர இருப்பது என்ன காலம்? தற்கால மனநிலைக்கு ஏற்பப் பலரும் வெயில் காலம் என்ற பதிலைச் சொல்லிவிட்டுச் சப்ளிமெண்ட்ரியாக “இந்த வருசம் வெயில் வெளுத்து வாங்கப் போவுது” என்ற வழக்கமான டயலாக்கை, புதிய கண்டுபிடிப்புபோலச் சொல்வார்கள். கவிதை மனம் உடைய சிலர், `இளவேனிற் காலம்’ என்பார்கள். முப்பத்து முக்கோடிக் காலமும் தின்பதைப் பற்றியே சிந்திக்கிற நான், இதைப் பழங்களின் காலம் என்பேன். அதைப் பற்றி அடுத்த வாரம்…

(அடுத்த வாரம்: முக்கனிச் சோறு)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x