Last Updated : 21 Oct, 2013 04:44 PM

 

Published : 21 Oct 2013 04:44 PM
Last Updated : 21 Oct 2013 04:44 PM

மனமும் குணமும் அறிய சைகோமெட்ரிக் தேர்வுகள்

குறைவான காலி வேலை இடங்களுக்கு மிக அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்தால், அவர்களில் வடிகட்டித் தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. எந்த அடிப்படையில் தேர்வு செய்வது என்பது நிறுவனங்களைப் பொருத்தவரை மிக முக்கியமான ஒரு விஷயம்.

சிலவகைத் தேர்வுகளுக்கு நேரம் மிகக் குறைவாகவே தேவைப்படும். அதே சமயம் அந்தத் தேர்வு முறை மிகத் துல்லியமாக இருக்கும். எடுத்துக்காட்டாக. ஐம்பதிலிருந்து எழுபது கிலோ வரை உடல் எடை கொண்டவர்களை மட்டும்தான் ஒரு வேலைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், தேர்வு முறை மிகவும் சுலபம். எடை காட்டும் கருவியைக் கொண்டு வெகு எளிதில் தேர்வு நடத்திவிடலாம். இதேபோல உயரத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்வு என்றாலும் எளிதாகவும், துல்லியமாகவும் நடத்திவிடலாம்.

சில தேர்வுகளை துல்லியமாக நடத்த முடியும். ஆனால், நேரம் சற்று அதிகம் தேவைப்படும். பார்வைத் திறன் சரியாக இருக்கிறதா, உறுதியான உடல் கொண்டவரா என்பது போன்றவற்றுக்கான தேர்வுகளை இந்த வகையில் அடக்கிவிடலாம்.

விமானப் பணிப் பெண் வேலைக்குத் தேர்வு செய்ய அழகாக இருக்கிறார்களா என்பதையும் கவனிப்பார்கள். ஒரே பார்வையில்கூட இதைத் தீர்மானித்துவிட முடியும். எனவே, அதிக நேரம் தேவைப்படாது. ஆனால் இதிலுள்ள சங்கடம் என்னவென்றால், பல தேர்வாளர்கள் ஆள்தேர்வைச் செய்தால் (தனித்தனியாகவோ, ஒன்றாகச் சேர்ந்தோ) ஒவ்வொருவருக்குமிடையிலான கோணங்கள் வேறுபடும். எனவே, பாரபட்சமான தேர்வுகள் நடத்தப்படலாம். டெலிபோன் ஆபரேட்டர்களின் குரலை மதிப்பீடு செய்வதுகூட இப்படித்தான்.

எல்லாம் சரி, உடல்திறனை அறிய மேற்கண்ட பரிசோதனைகள் உதவும். ஆனால், ஒருவரின் புத்திசாலித்தனத்தை எப்படி அறிவது? தனிநபர் என்றால் கொஞ்ச நேரம் பழகியபின் அறிந்து கொள்ள முடியலாம். ஆனால், ஆயிரக்கணக்கான நபர்களின் புத்திசாலித்தனத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தேர்வு செய்யவேண்டுமென்றால்? கஷ்டம்தானே. ஏன், பொது அறிவுக் கேள்விகள் கேட்கலாமே என்கிறீர்களா? தன்னைச் சுற்றி நடக்கும் விவரங்களை அவர் அறிந்து வைத்திருப்பதைத்தான் இதுபோன்ற கேள்விகள் காட்டிக் கொடுக்குமே தவிர, புத்திசாலித்தனத்தை அல்ல.

தவிர, புத்திசாலித்தனத்துடன் வேறு சில குணங்களும்கூட சில வேலைகளுக்கு அவசியமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, ஒரு நிறுவனம் அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் புத்திசாலியாக இருப்பதுடன், சவால்களை சமாளிக்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

இவற்றுக்குரிய பயிற்சிகளை அளிக்கலாமே என்கிறீர்களா? பயிற்சி என்பது ஊழியராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்புதானே? தவிர, ஈகோ இல்லாதவர்களால்தான் பயிற்சியில் கூறப்படும் நல்ல விஷயங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு செயல்படுத்த முடியும். ஈகோ இல்லாதவர் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

இப்படிப் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு உரிய தகுதி கொண்டவர்களை தேடுகின்றன நிறுவனங்கள். இந்த விதத்தில்தான் சைகோமெட்ரிக் தேர்வுகள் சிறப்பாகக் கைகொடுக்கின்றன.

விண்ணப்பித்திருப்பவர் டென்ஷன் பார்ட்டியா? அப்படி டென்ஷன் வசப்பட்டால், சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்பக்கூடியவரா? உற்சாகமானவரா? தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடியவரா? நிறுவனத்தின் லட்சியங்களை அடைய எந்த அளவுக்கு மனப்பாங்கு கொண்டவர்? இவையெல்லாம் 'சப்ஜெக்டிவான' விஷயங்கள் (இந்த இடத்தில் அப்ஜெக்டிவ், சப்ஜெக்டிவ் ஆகிய இரண்டுக்குமான வித்தியாசத்தை ஓரளவு தெரிந்து கொள்வது நல்லது. அப்ஜெக்டிவ் வகை கேள்வி என்றால், அந்தக் கேள்விக்கு மூன்று, நான்கு பதில்கள் அளிக்கப்பட்டிருக்கும். சரியான விடையைத் தேர்ந்தெடுத்தால், முழு மதிப்பெண். இல்லையென்றால் மதிப்பெண்ணே கிடையாது. சப்ஜெக்டிவ் வகை கேள்வியை இப்படி விளக்கலாம். நீங்கள் ஒரு கட்டுரை எழுதி மூன்று பேரை மதிப்பிடச் சொன்னால், அவர்கள் மூவரும் வெவ்வேறு மதிப்பெண் அளிக்கத்தான் வாய்ப்பு உண்டு இல்லையா? அதாவது அவரவரின் அனுபவம், ஆசா பாசம், கண்டிப்பான போக்கு இவையெல்லாமே அந்த மதிப்பெண்ணைத் தீர்மானிக்கிறது. இது சப்ஜெக்டிவ் அணுகுமுறை).

சப்ஜெக்டிவான விஷயங்களில் தேர்வு நடத்துவதும் மதிப்பிடுவதும் இயலாத விஷயம் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தக் கூடியது என்று நிரூபித்து விட்டன சைகோமெட்ரிக் தேர்வுகள்.

பொதுவான சூழல்கள், ஒரே நேரத்தில் பலருக்கும் நடத்தக்கூடிய தேர்வு, குறைவான நேரம், உடனடியாக ரிசல்ட்டை தெரிந்துகொள்ளக் கூடிய தன்மை - இப்படி பல வசதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளன சைகோமெட்ரிக் தேர்வுகள்.

தர்க்கரீதியாக முடிவெடுக்கும் ஆற்றல், ஆளுமைத் தன்மை, ஊக்கமும், உற்சாகமும் கொண்ட மன நிலை போன்ற பல மனவியல் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளைத் தீர்மானிக்கின்றன சைகோமெட்ரிக் தேர்வுகள்.

இதோ ஓர் உதாரணம். ஒரு கேள்வியும், அதற்கான ஐந்து பதில்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. கேள்வியில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. அந்த இரண்டு வார்த்தைகளுக்கிடையே என்ன வகை தொடர்பு இருக்கிறதோ அதே தொடர்பு உள்ள சரியான பதிலை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சிற்பி - உளி

1. நீதிபதி - சுத்தியல்

2. ஓவியர் - தூரிகை

3. திரைப்பட எடிட்டர் - கத்தரிக்கோல்

4. நடனமணி - சலங்கை

5. மந்திரவாதி - மந்திரக்கோல்

மேலோட்டமாகப் பார்த்தால் சிற்பிக்கும் உளிக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் பதில்களில் உள்ள ஐந்து பேர்களுக்கும் அவர்கள் பெயர்களுக்கு எதிராக உள்ள பொருள்களுடன் ஏதோ தொடர்பு இருப்பது போலத்தான் தோன்றும். ஆனால், இவற்றில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.

வேறு கோணத்தில் யோசிப்போம். சிற்பி என்பவர் 'உளி'யைக் கொண்டு எதையோ உருவாக்குகிறார் அல்லது செதுக்குகிறார். நடனமணி சலங்கையைக் கொண்டு எதையும் உருவாக்குவதில்லை. எனவே அவரை நீக்கிவிடலாம். நீதிபதி சுத்தியலைக் கொண்டு எதையும் உருவாக்கவில்லை. (சொல்லப்போனால் சினிமாவில் மட்டும்தான் நீதிபதிகள் சுத்தியலைக் கையில் வைத்துக்கொண்டு ஆர்டர் ஆர்டர் என்று மிரட்டுவார்கள்). மந்திரவாதி தனது மந்திரக் கோலைக் கொண்டு எதையோ உருவாக்குவது போல நடித்தாலும், அவர் உண்மையாக எதையும் உருவாக்குவதில்லை. எனவே அவரையும் நீக்கிவிடலாம்.

இப்போது மீதமிருப்பதில் ஓவியரும் தன் தூரிகையால் ஒன்றை உருவாக்குகிறார். ஆனால் உருவாக்கத் தொடங்கும்போது அந்த உருவாக்கத்தில் எதுவுமே இல்லை. அதே சமயம் சிற்பத்தைத் தொடங்குவதற்கு முன் சிற்பியிடம் கல் இருக்கிறது. திரைப்பட எடிட்டரிடம் நிறைய ஃபிலிம் சுருள் இருக்கிறது (ஃபிலிம் சுரும் தேவை என்கிற அவசியம் குறைந்து வருகிறது என்றாலும்கூட, படம் எடுக்கப்பட்ட பகுதிகள் இருக்கின்றன). சிற்பி, திரைப்பட எடிட்டர் இருவருமே வேண்டாத பகுதிகளை நீக்குகிறார்கள். தாங்கள் விரும்பும் அழகிய வடிவம் இறுதியில் கிடைக்க வேண்டும் என்பதே அவர்களது எண்ணம். அதற்கு முறையே உளி, கத்திரிக்கோல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆக, 'திரைப்பட எடிட்டர் - கத்தரிக்கோல்' என்பதுதான் மற்றவற்றைவிட அதிக பொருத்தமான விடை. இந்த விடையை சரியாகக் கணிப்பவர் பல கோணங்களை சிந்தித்து முடிவெடுப்பதில் வல்லவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

ஒன்றுக்குப் பதிலாக, இதுபோன்ற பலவித கேள்விகளை அளித்து விடைகளை எழுதச் சொல்வதன் மூலம், இதை உறுதி செய்து கொள்ள முடியும்.

பல கோணங்களில் சிந்தித்து முடிவெடுக்கும் வல்லமையை வேறுவிதங்களில்கூட (வேறுவிதமான சைகோமெட்ரிக் தேர்வுகளின் மூலம்கூட) தேர்வு செய்ய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x