Published : 30 Jan 2017 11:08 AM
Last Updated : 30 Jan 2017 11:08 AM

பிலிமுக்கு திரும்பும் கோடக்

தொழில்நுட்பங்கள் ஒன்று மற்றொன்றாக தினந்தோறும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றன. மிக முக்கியமான தொழில்நுட்பம் என்று ஒரு காலத்தில் சிலாகிக்கப்பட்ட ஒன்று, காலமாற்றத்தில் வழக்கொழிந்து விடுகிறது. அந்த இடத்தில் வேறொரு கண்டுபிடிப்பு முக்கியமாக அமர்ந்து விடுகிறது. தகவல் களை அனுப்புவதில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய தந்தி முறை இன்று வழக் கொழிந்து விட்டது. கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்த பிறகு டைப்ரைட்டிங் இயந்திரங் கள் காணாமல் போயின. அந்த வகையில் டிஜிட்டல் கேமிராக்கள் வந்த பிறகு ஃபிலிம் சுருள் காணாமல் போனது.

ஆனால் மக்களிடம் உணர்வுபூர்வமாக இணைந்த சில அடிப்படையான விஷயங்கள் மட்டும் என்றும் மாறுவதேயில்லை. அந்த வகையில் ஃபிலிம் சுருள் தொழில்நுட்பத் துக்கான தேவை இப்போதும் இருப்பதாகவும், இதனால்ஃபிலிம் சுருள் உற்பத்தியை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் கோடக் அறிவித்துள்ளது.

குறிப்பாக தங்களது எக்டாகுரோம் ஃபிலிமை திரும்ப தயாரிக்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் அதை விற்பனைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஃபிலிம் உற்பத்தியை 2012-ம் ஆண்டிலேயே கோடக் நிறுத்திவிட்டது.

இந்த ஃபிலிம் பயன்படுத்தும்போது கிடைக்கும் படக்காட்சிகள் சிறப்பாகவும், ஃபிலிம் நீண்ட நாள் வீணாகாமல் இருக்கும் என்பதாலும் இதைப் பயன்படுத்தி படம் எடுத்த புகைப்பட கலைஞர்கள் இதைத் திரும்ப தயாரிக்க வேண்டும் என கோரியதாக கோடக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏனென்றால் சர்வதேச அளவில் சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப சூழலை பாதிக்காத வகையிலும் ஃபிலிமை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம் வந்த பிறகும், பழைய தொழில்நுட்பத்துக்கான தேவை உருவாகியுள்ளதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர் தேவைதான் என்பது முக்கியமானது. இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு புகைப்படத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் கையிலுள்ள செல்போனிலிருந்துகூட எடுத்து விட முடியும். ஆனால் இன்னமும் ஃபிலிம் பயன்படுத்தி எடுக்கும் ஆர்வலர்களும் இருக்கவே செய்கின்றனர். ஏனென்றால் ஃபிலிம் கொடுத்த தரம்தான் காரணம் என்கிறார் கோடக் நிறுவனத்தின் தலைமை சந்தையிடல் அதிகாரி ஸ்டீவன் ஓவர்மேன்.

இந்த ஃபிலிம் தயாரிப்பை கோடக் நிறுவனம் 1940-ம் ஆண்டு உருவாக்கியது. புகைப்படங்களை எடுப்பதில் புரட்சி ஏற் படுத்திய ஃபிலிம் என்றும் குறிப்பிடுகின்றனர். உலக அளவில் பல முக்கிய நிகழ்வுகள் இந்த ஃபிலிம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றை திரும்ப மீட்டெடுப்பதில் பெருமை கொள்வதாகவும் ஸ்டீவன் கூறுகிறார்.

வாடிக்கையாளர் தேவைக்கு மதிப்பு கொடுக்க உள்ளோம், இந்த ஃபிலிம்களுக்கான சந்தை உள்ளது என்கிற நம்பிக்கையில் தொடங்குகிறோம். பழையபடி இதற்கான சந்தையை உருவாக்குவோம் என்று கோடக் நிறுவனத்தின் பேப்பர், போட்டோ கெமிக்கல்,ஃபிலிம் பிரிவு தலைவர் டேனிஸ் ஆல்பிரிக் கூறியிருக்கிறார்.

கோடக் நிறுவனம் 1963-ம் ஆண்டு இன்ஸ்டா மேட்டிக் ஃபிலிம் கேமராவை அறிமுகப் படுத்தியது. “பட்டனை அழுத்துங்கள், காலத் துக்கு ஓய்வு தருகிறோம்” என்று அப்போது விளம்பரப்படுத்தியது. ஃபிலிம் கேமரா சந்தையில் மிக முக்கியமான நிறுவனமாக இருந்த கோடக், டிஜிட்டல் யுகத்துக்கு அப்டேட் ஆகாததால் மெல்ல தனது சந்தையை இழக்கும் நிலைக்குச் சென்றது. 2012-ம் ஆண்டுதான் ஃபிலிம் உற்பத்தியை கைவிட்டு டிஜிட்டல் முறைக்கு மாறியது. இடையில் வங்கி நிதி பிரச்சினைகளால் தடுமாற்றம் வேறு. இந்த நிலையில் 2015-ம் ஆண்டுதான் தனது முதல் டிஜிட்டல் கேமராவை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது மீண்டும் பழைய தொழில்நுட்பமான எக்டாகுரோம் ஃபிலிமை தூசு தட்ட தொடங்கியுள்ளது.

எக்டாகுரோம் ஃபிலிமில் படம் எடுக்கும் போது படம் துல்லியமாக கிடைக்கும். வண் ணப்படங்கள் மிக தெளிவாகவும் தரமாகவும் இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர். ஃபிலிம் மூலம் புகைப்படங்களை எடுக்கலாம் ஆனால் இதற்கான லேப்கள் மறைந்துவிட்ட நிலையில் ஃபிலிம் சந்தையில் கோடக் நிறுவனத்தால் திரும்ப நிலைக்க முடியுமா, அல்லது ஃபிலிம் லேப்களுக்கான ஏற்பாடுகளையும் கோடக் மேற்கொள்ளுமா என்பதை விளக்கினால்தான் ஆர்வலர்களுக்கு அது நல்ல செய்தியாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x