Last Updated : 03 Jun, 2017 10:19 AM

 

Published : 03 Jun 2017 10:19 AM
Last Updated : 03 Jun 2017 10:19 AM

மனநலப் பிரச்சினைகள்: தயக்கம் தவிர்த்தால் தீர்வு எளிது

சில பிரச்சினைகளுக்காக நாம் மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருப்போம். நமக்குத் தெரிந்த நண்பரிடமோ உடன் பிறந்தவர்களிடமோ அந்தப் பிரச்சினையைச் சொல்லும்போது, `அதை இப்படிச் செய்தால் இந்தப் பிரச்சினையே வராதே’ என்று பளிச்சென்று ஆலோசனை கூறுவதைப் பார்த்திருக்கலாம். உண்மையில் நமக்கும் அந்த விஷயம் தெரிந்த ஒன்றாகவே இருக்கும். ஆனால், அவர்கள் சொன்ன யோசனை நமக்கு ஏன் அதுவரை தோன்றவில்லை என்று அப்போது உறைக்கும்.

“இதைத்தான் மனநல ஆலோசனைத் துறையில் ‘Obvious is always invisible’ என்று கூறுவார்கள் என்கிறார் மனநல ஆலோசகர் கீதன். சென்னையை மையமாகக் கொண்ட நிப்பாணா மனநல ஆலோசனை மையம் மற்றும் மனநல ஆலோசனை பயிற்சி மையத்தின் நிறுவனர் இவர். குறைந்தபட்சம் பட்டப் படிப்பு படித்திருந்தால்போதும், மனநல ஆலோசகர் ஆவதற்கான தரமான பாடங்களையும், உரிய பயிற்சிகளையும் பெற்று எல்லோரும் மனநல ஆலோசகர் ஆக முடியும் என்கிறார்.

நெருங்கியவர் அறிவுரை உதவுமா?

மனநல ஆலோசனை துறை சார்ந்த தனித்துவமான விஷயங்கள் குறித்து அவர் பேசியதிலிருந்து:

நான் அடிப்படையில் பொறியாளர். அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தேன். சொந்தமாகவும் சில ஆண்டுகள் தொழில் நடத்தினேன். அதன் பிறகு, மனிதர்களோடு சேர்ந்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் துறையில் பணியாற்றலாமே என்று தோன்றியது. அதற்காக நான் தேர்ந்தெடுத்த துறை மனநல ஆலோசனை. மனநலத் துறைக்கு யார் வேண்டுமானாலும் அதற்குரிய படிப்பைப் படித்துவிட்டு வரலாம். அதற்கு உண்டான ஆலோசனைகளை எங்களுடைய நிப்பாணா நிறுவனம் வழங்குகிறது. நிப்பாணா நிறுவனத்தின் மூலம் கனிவும் திறமையும் கொண்ட மனநல ஆலோசகர்களை உருவாக்க வாரத்துக்கு இரண்டு நாள் பயிற்சி முகாமையும் நடத்துகிறோம்.

சக உறவினருடன் அல்லது நண்பர்களுடன் ஆலோசனை செய்வதற்கும், மனநலத் துறையில் தேர்ச்சி பெற்றவரிடம் ஆலோசனை பெறுவதற்கும் என்ன பெரிய வித்தியாசம் என்ற கேள்வி வரலாம்.

நாம் குழப்பமான சூழ்நிலையில் அல்லது புதிரான பிரச்சினையை எதிர்கொள்ளும்போது உறவினரிடமோ, ஒரு மேலாளரிடமோ நமது சூழ்நிலையை விவரித்து அறிவுரை பெறுவது வழக்கம். நாம் தீர்வுக்காக அணுகியவர் தமது அனுபவத்திலிருந்து நமக்குச் சில வழிமுறைகளைக் கூறுவார். அந்த அறிவுரை நமக்கு ஏற்றதாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். சில நேரம் நாம் பெற்ற ஆலோசனைகூட மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.

அகம் காட்டும் கண்ணாடி

அடுத்து நமது கவலையைத் தூண்டுவது, தாங்கள் கூறிய பிரச்சினையை வைத்து நம்மை அவர்கள் எவ்வாறு எடை போடுவார்கள். ஒரு வேளை நாம் கூறியதை அந்த நபர் பிறரிடம் பகிர்ந்துகொண்டால் என்னவாகும் என்ற எண்ணம் மேலோங்க ``ஏண்டா நமது பிரச்சினையைப் போய், பிறரிடம் கூறினோம்’’ என்று வருந்த நேரிடலாம்.

இதற்குப் பதிலாகத் தேர்ச்சி பெற்ற மனநல ஆலோசகர் ஒருவரிடம் தமது பிரச்சினையைக் கூறும்போது, அவர் அதற்கான தீர்வை நோக்குவதைவிட, நீங்கள் எந்தக் கோணத்தில் உங்கள் சூழ்நிலையை அணுகினால், நீங்களே தீர்வை தேடிக்கொள்ள முடியும் என்ற பயிற்சியை உங்களுக்குத் தருவார். இதன் மூலம் உங்களது சூழ்நிலையை நீங்களே சரிசெய்யக் கற்றுக்கொள்ளும்போது, உங்கள் தன்னம்பிக்கை வலுப்படும்.

ஒரு மனநல ஆலோசகர், தான் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கண்ட வழிமுறைக்கு விளக்கம் அளிக்க முடியும். அனுபவங்களை நாம் எவ்வாறு பெறுகிறோம், அதன் விளைவு மற்றும் சாதக, பாதகங்களை நமது கவனத்துக்குக் கொண்டுவருவதில் மனநல ஆலோசகர் ஓர் அகக் கண்ணாடி போல் செயல்படுவார்.

நமது கஷ்டத்தால், இயலாமையால் மனநலத் துறை சார்ந்த வல்லுநர்களை அணுகுகிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் இந்த விஷயத்தை அணுகாமல், தீர்வுக்கான வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு நம் வாழ்க்கையைச் சீரமைத்துக்கொள்கிறோம் என்ற பார்வை சுயவளர்ச்சியை ஊக்குவிக்கும்.

மனநலத் துறை நிபுணர்கள் யார், எப்படி உதவுவார்கள்?

> மனநல ஆலோசகர் (Psychological counsellor):

இந்தத் துறையைச் சார்ந்தவரின் நோக்கம் உங்களது சக்தியைக் கொண்டே உங்களது பிரச்சி னைக்குத் தீர்வு காண உதவுவது. புதிய வாய்ப்புகளை உருவாக்கும் சிந்தனையைத் தூண்டுதல், உங்கள் உறவுகளை மேம்படுத்துதல், மகிழ்ச்சியுடன் வாழ ஊக்கப்படுத்துதல்.

> சைக்கோ தெரபிஸ்ட் (Psycho therapist):

மனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆராய்பவர். இவரது துறை சார்ந்த நோக்கம் என்னவென்றால், நமது வாழ்க்கையைத் திறம்பட ஆக்கிக்கொள்ள நமது மனதின் செயல்பாடு எவ்வாறு தடையாக உள்ளது என்பதை ஆராய்ந்து, நமது கவனத்துக்குக் கொண்டுவருவது. ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் வலிகளை, தேவைகளை மேல் மனதுக்குக் கொண்டுவருவது, கடந்த காலத்தைக்கொண்டு நிகழ் காலத்தை எவ்வாறு நாம் விரயம் செய்கிறோம் என்பதைக் கற்றுக்கொள்ள மனச் செயல்பாட்டின் ஆய்வாளர் துணைபுரிவார். இதன் மூலம் நிகழ்காலத்தை நிம்மதியாகவும், எதிர்காலத்தைப் பயனுள்ளதாகவும் மாற்ற நாம் கற்றுக்கொள்ளலாம்.

> மனநல மருத்துவர் (Psychiatrist):

இவரின் துறை சார்ந்த நோக்கம், உடல்ரீதியான மாற்றங்களால் மனதில் தாக்கம் ஏற்பட்டு, அதனால் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டால் மருத்துவ முறையைக் கொண்டு உடலிலும் மனதிலும் மாற்றத்துக்கு வழிவகுப்பது.

இந்த மூன்று துறைகளும் ஒன்றை ஒன்று சார்ந்த துறைகள். நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆகிக்கொள்ளத் துணை நிற்கும் துறைகள் என்று கூறலாம்.

- கீதன்

ஆலோசகர் தொடர்புக்கு: ageethan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x