

யூ.பி.எஸ்.சி. தேர்வை வெல்ல முறையான வழிகாட்டுதல் அவசியம் என்கிறார் 2011 பேட்ச்சில் ஐ.ஐ.எஸ்.(Indian Information Service) பெற்ற ப.அருண் குமார். தூர்தர்ஷனில் துணை இயக்குநர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தகவல் தொடர்பு அதிகாரி ஆகிய பதவிகளை வகித்த பின்னர் மத்திய சிறு, குறு மற்றும் மத்திய தொழில் அமைச்சகம் மற்றும் மத்திய ரயில் அமைச்சகம் ஆகியவற்றின் தகவல் தொடர்பு அதிகாரியாக இருக்கிறார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள நல்லண்ணம்பட்டியை சேர்ந்தவர் அருண் குமார். இவரது தந்தை பழனி பிஎஸ்என்எல்-ல் பொறியாளராக வேலைபார்த்தவர். அருண் குமார் பிளஸ் டூ கணினி அறிவியலில் 1,111 மதிப்பெண் பெற்றார். அவரது பெற்றோருக்குத் தங்கள் மகன் ஐ.ஏ.எஸ். முடித்து ஆட்சியராக வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே விருப்பம். இதற்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு அவசியம் என்பதால் திருச்சி என்.ஐ.டி.-யில் கட்டிடப் பொறியியல் முடித்துள்ளார் அருண் குமார். அந்தப் படிப்பை முடித்த கையோடு டெல்லி சென்று படித்தவர், யூ.பி.எஸ்.சி. வெல்ல நான்கு முறை முயற்சித்துள்ளார். இதில் நான்கு முறை முதல் நிலை, மூன்று முறை இரண்டாம் நிலை மற்றும் இருமுறை நேர்முகத் தேர்வு சென்றுள்ளார்.
கடைசி முயற்சியிலும் கிடைக்காமல் வருத்தத்துடன் ஊர் திரும்பியவர் ஏதாவது தொழில் செய்யலாம் அல்லது பள்ளிக்கூடம் நடத்தலாம் என்று திட்டமிட்டார். அப்போது, அவரது மூன்றாவது முயற்சியின் யூ.பி.எஸ்.சி.-க்கான இரண்டாவது பட்டியல் தாமதமாக வெளியானது. சமீப ஆண்டுகளாக சிலரது மருத்துவத் தகுதி, சான்றிதழ் பரிசோதிப்பு போன்றவை காரணமாக இவ்வாறு இரண்டாம் பட்டியல் சில சமயம் வெளியாகும். இதில், அருண் குமாருக்கு, ஆறாவது நிலையில் குறிப்பிட்டிருந்த ஐ.ஐ.எஸ். கிடைத்துவிட்டது.
யூ.பி.எஸ்.சி-யில் செய்த தவறுகள்
‘எனக்குக் குறித்த நேரத்தில் வழிகாட்டுதல் கிடைத்திருந்தால் நான் ஐ.ஏ.எஸ். பெற்றிருப்பேன். இதற்கான சிறந்த பயிற்சி டெல்லியில் கிடைப்பதாக முன்கூட்டியே அறிந்திருந்தால் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகங்களில் கலை அல்லது சமூகவியல் பாடங்களில் சேர்ந்து, மாலையில் யூ.பி.எஸ்.சி.-க்கான பயிற்சி வகுப்புகளும் சென்றிருப்பேன். என்.ஐ.டி-யில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது இறையன்பு.ஐ.ஏ.எஸ். அவர்களை நேரில் சந்தித்ததால் எனக்கு அவரிடமிருந்து சில அடிப்படை வழிகாட்டுதல்கள் கிடைத்தன. இதேபோல், பொதுப் பிரிவுக்கும் ஓ.பி.சி.-க்கும் இடையே வெறும் ஐந்து மதிப்பெண் மட்டும் வித்தியாசம் இருக்கும் என நினைத்தேன். இதனால், பெரிய வாய்ப்புகளும் பறிபோகும் என்ற வழிகாட்டுதல் எனக்கு இல்லாமல் போனது. நான் ஓ.பி.சி. பிரிவில் இருந்தும் அதற்கான சான்றிதழ் பெறுவதற்கு அலைக்கழிக்கப்படுவேன் என்பதால் நான் அதைப் பெறவில்லை. இதனால், பொதுப் பிரிவிலேயே யூ.பி.எஸ்.சி.-க்கு விண்ணப்பித்திருந்தேன். இதில் மூன்று தேர்வுகளிலும் எனக்கு ஓரிரு மதிப்பெண் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாமல் போனது. முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தவறியது. எனக்குக் கிடைத்திருக்கும் ஐ.ஐ.எஸ். பற்றி கூட அப்போது அதிகம் தெரியாது. பயிற்சி நிலையத்தில் சொன்னதை வைத்து இதை ஆறாவதாகக் குறிப்பிட்டிருந்தேன்.
இதற்கும் சரியான வழிகாட்டுதலை நான் பெறவில்லை. இத்துடன் சிறுவயது முதல் நான் செய்திதாள்களை அதிகம் படிக்காததும் பெரிய தடையானது. அப்படிப் படித்திருந்தாலாவது யூ.பி.எஸ்.சி. பற்றிச் சிறிதளவாவது அறிந்திருக்க முடியும்” என்று வருந்துகிறார் அருண்குமார்.
திறனை வளர்த்த விதம்
ஆங்கில வழியில் யூ.பி.எஸ்.சி. எழுதியவரது விருப்பப் பாடங்கள் புவியியலும் பொது நிர்வாகமும். பாடநூல்களிலிருந்து சுருக்கமாக ‘நோட்ஸ்’ தயாரிக்கும் பழக்கம் அருணுக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது. ஒரு வார்த்தையைப் படித்தால் அதன் விவரங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில், 200 பக்கங்களை 50 எனக் குறைத்து எழுதி வைத்துப் படித்திருக்கிறார். விருப்பமான புவியியல் பாடத்தின் முக்கிய அம்சங்களை இணையதளங்களில் தேடி நாடு, நகரங்கள் அவற்றின் பருவநிலை போன்றவற்றின் வீடியோக்களையே பார்த்தது அருண் குமாரின் மனதில் பதிந்துள்ளது.
தேர்வு எழுதுவோருக்கான ‘டிப்ஸ்’
‘‘யூ.பி.எஸ்.சி. எழுதுபவர்கள் எதிர்மறையாக (நெகட்டிவ்) எதையும் யோசித்து அஞ்சக் கூடாது. தேர்வு எழுதுபவர்கள் அதைப் பற்றி நன்கு அறிந்த பின் நன்கு திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். சிலர் பல்வேறு பயிற்சி நிலையங்களின் நோட்ஸ் மற்றும் கைடுகளை வைத்துப் படிப்பார்கள். இதனால், பல சமயம் குழப்பம்தான் மிஞ்சும். ஒருமுறை எனக்கு, ‘நம் நாட்டின் ஜனத்தொகைக்கும், எருமைகளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம் என்ன?’ எனும் வித்தியாசமான கேள்விக்குப் பதில் தர முடியவில்லை. நேர்முகத் தேர்வில் திட்டமிட்டுப் பொய் சொல்லக் கூடாது. சுற்றி வளைத்து வேறு கேள்விகள் கேட்கப்படும்போது சிக்கிவிடுவோம். தெரியாதவற்றுக்கு ‘தெரியாது’ எனக் கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை’’ என்கிறார்.
பணிப் பயிற்சியின்போதே சாதனை
“ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படித்தவர்கள் மூத்த பொறுப்புகளில் வரும்போதுதான் பிரதமர், மத்திய அமைச்சர்களிடம் நெருங்கிப் பணியாற்ற முடியும். ஆனால், இந்த வாய்ப்பு ஐ.ஐ.எஸ். முடித்தவர்களுக்குத் ஆரம்பப் பணியிலேயே கிடைத்துவிடுகிறது. அகில இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் எனது பயிற்சிக் காலத்தின்போது அதன் செய்திகளை ஆங்கிலத்தில் மட்டுமே கைபேசிகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என்றிருந்தது. ஆனால், அதை நான் தமிழ், இந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் அனுப்ப முடியும் என்று கண்டுபிடித்தேன்.
இதன் பிறகுதான் மற்ற மொழிகளிலும் செய்திகள், குறுஞ்செய்திகள் அனுப்புவதை மத்திய அரசு தொடங்கியது. மேலும், குடியரசுத் தலைவரின் செயலாளராக இருப்பவர் ஒரு ஐ.ஐ.எஸ். மத்திய அமைச்சர்களுக்கும் ஆலோசனை அளிக்கும் வாய்ப்புகள் இதனால் கிடைக்கும்’’ எனப் பெருமிதம் கொள்கிறார் அருண் குமார்.
நான் வாசித்தவை
6 முதல் 12-ம் வகுப்பு என்.சி.இ.ஆர்.டி பாடநூல்கள்,
# கோ ஷி லியாங், மலேசிய எழுத்தாளர் எழுதிய புவியியல்.
# ஸ்பெக்ட்ரம் கைடு,
# பொது அறிவின் வரலாறுக்கு வஜ்ரம் ரவி நிறுவன நோட்ஸ்,
சிவில் சர்விஸ் கிரானிக்கல் எனும் பத்திரிகை,
# தி இந்து’ ஆங்கில நாளிதழ்