Last Updated : 22 Jul, 2016 11:11 AM

 

Published : 22 Jul 2016 11:11 AM
Last Updated : 22 Jul 2016 11:11 AM

ரஜினிக்கு என் ஸ்டைலில் ஆடை வடிவமைத்தேன்!- ஆடை வடிவமைப்பாளர் அனு வர்தன் சிறப்பு பேட்டி

‘கபாலி’ என்று சொன்னதும் பல முகங்களில் ‘மகிழ்ச்சி’ கொப்பளிக்கிறது. அதிலும் ரஜினியின் கெட்-அப்பும் ஆடையும் அனைவரையும் அதிரவைத்திருக்கின்றன. கபாலியில் ரஜினிக்கு ஆடை வடிவமைத்தது அனு வர்தன். இவர் அசோகா, பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைத்தவர். அவரோடு ஒரு சுவாரஸ்யமான நேர்காணல்:

ரஜினியோடு வேலை செய்த அனுபவம் எப்படியிருந்தது?

சினிமாவுக்குள் வந்து பல வருடங்களாக ஆனாலும் இப்போதுதான் ரஜினியுடன் வேலை செய்கிறேன். அவரிடம் நான் ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எத்தனையோ படங்களில் நடித்துச் சிகரத்தைத் தொட்டிருந்தாலும் இன்றும் இயக்குநரின் எதிர்பார்ப்பை அறிந்து அவர் நடிப்பதைப் பார்த்து அசந்துபோனேன்.

இதில் ரஜினியின் தோற்றத்துக்கு நீங்கள் பிரத்தியேகமாக என்ன செய்தீர்கள்?

‘6லிருந்து 60வது வரை’ படத்துக்குப் பிறகு கபாலிக்காகத்தான் ரஜினி தாடி வளர்த்திருக்கிறார். படத்தில் ரஜினி மலேசியாவில் ‘டான்’ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவருக்கு ‘சூட்’ பொருத்தமாக இருக்கும் என்றார் ரஞ்சித். பொதுவாக நான் கைகளால் நெய்யப்பட்ட துணிகளைத்தான் தேர்ந்தெடுப்பேன். ரஞ்சித்தும் அதை ஏற்றுக்கொண்டதால் ரஜினிக்கு என் ஸ்டைலிலேயே ஆடை வடிவமைத்தேன். ஒப்பனைக் கலைஞர் பானுவையும் இங்கு பாராட்டியாக வேண்டும்.

பில்லா அஜித் ‘டான்’, கபாலி ரஜினி ‘டான்’ இரண்டு டான்களுக்கும் ஆடையில் என்ன வித்தியாசம்?

பில்லாவில் அஜித் இளமையான தோற்றத்தில் வருவதால் அவருக்குக் கறுப்பு வெள்ளை ஆடைகளையே பயன்படுத்தினேன். ஆனால் கபாலி ரஜினி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். அதனால் ஆடை முதல் ஒப்பனை வரை புது விஷயங்களைச் செய்திருக்கிறோம்.

‘அசோகா’ மாதிரி ‘பீரியட்’ படங்களுக்கும் நீங்கள் ஆடை வடிவமைத்திருக்கிறீர்கள். எது சவாலாக இருக்கிறது?

அப்படி எதுவும் இல்லை. எந்த ஒரு படமாக இருந்தாலும் அது பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டு, ஈடுபாட்டோடு செய்வேன்.

ஒரு படம் தொடங்குவதற்கு முன்னதாக உங்களை எப்படித் தயார்படுத்திக்கொள்வீர்கள்?

படத்தில் வரும் நடிகர் நடிகைகளின் ஆடையை வடிவமைப்பது மட்டும் என்னுடைய வேலை இல்லை. நான் தேர்ந்தெடுக்கும் உடை அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கணும். அதனால் ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதே முழுக் கதையை இயக்குநரிடம் கேட்டு மனதில் அசைபோட்டுப் பிறகுதான் வேலையில் இறங்குவேன்.

கபாலி பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

‘வேதாளம்’படத்துக்காக ஷாப்பிங் செய்ய தாய்லாந்து போனபோது ஒப்பனைக் கலைஞர் பானு எனக்கு ஃபோன் செய்து ‘ரஜினிக்கு ஆடை வடிவமைக்கிறீங்களா?’ எனக் கேட்டார். நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் வாழ்நாள் கனவு இப்போது நிறைவேறிவிட்டது.

மறக்க முடியாத பாராட்டு எது?

‘அசோகா’வில் வேலைபார்க்கும்போது எனக்கு 22 வயது. அப்போது பாலிவுட்டிலிருந்து பாராட்டுகள் குவிந்தன. ‘பில்லா’ படத்துக்காக மாநில விருதை அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் பெற்றபோது நான் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி என்பதால் என் தாத்தாவிடம் விருது வாங்கிய அனுபவத்தைக் கருணாநிதி மேடையில் பகிர்ந்துகொண்டு என்னையும் பாராட்டினார்.

ஆடை வடிவமைப்பாளராக மாறியது எப்படி?

சென்னை லயோலா கல்லூரியில் படித்தபோது சந்தோஷ் சிவனிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதே அவருடைய படங்களுக்கு ஆடை வடிவமைப்பில் உதவினேன். அதைக் கவனித்தவர் இதுவே எனக்குப் பொருத்தமான வேலை என்றார். ஆடை வடிவமைப்பு கோர்ஸ் முடித்ததும் ‘அசோகா’ படம் முதல் நான் ஆடை வடிவமைப்பாளர் ஆனேன்.

எது உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது, நடிப்பா, ஆடை வடிவமைப்பா, உதவி இயக்குநர் வேலையா?

நான் நடிகரல்ல. ஆனால், பொதுவாகவே தன்னுடைய உதவி இயக்குநர்களைக் கேமராவுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிடுவார் சந்தோஷ் சிவன். அப்படித்தான் நானும் நடித்தேன். அதுதவிர சினிமா என் காதல் என்பதால் இதில் எல்லா வேலைகளும் எனக்குப் பிடித்தமானவைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x