Last Updated : 03 Jun, 2016 10:25 AM

 

Published : 03 Jun 2016 10:25 AM
Last Updated : 03 Jun 2016 10:25 AM

மாயப் பெட்டி: அதிர்ச்சியான க்ளைமேக்ஸ்

ஒரு புறம் மரபு வழியில்தான் மகளுக்குக் கல்யாணம் என்று தீர்மானமாக இருக்கும் பெற்றோர். மறுபுறம் ‘என் திருமண வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு வேண்டும்’ என்று போர்க்கொடி பிடிக்கும் மகள்கள். ஆனால் “உங்கள் பெற்றோர் உங்களை ‘எமோஷனல் ப்ளாக்மெயில்” செய்தால் என்ன செய்வீர்கள்?’’ என்ற கோபிநாத்தின் கேள்விக்கு (விஜய் டி.வி. நீயா நானா) “எங்க முடிவை மாத்திப்போம். அப்பா, அம்மா சொல்லும் வழியை ஒத்துப்போம்” என்று அத்தனை பெண் வாரிசுகளும் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டனர். அதிர்ச்சியான க்ளைமாக்ஸ்தான். அங்கு மகள்களுக்குப் பதிலாக மகன்கள் உட்கார்ந்திருந்தால் என்ன கருத்து வந்திருக்கும்?.

ஜெல்லி என்னும் கில்லி!

உணவுக்காகப் பிற உயிரினங்களை வேட்டையாடுவதில் விலங்குகள் கில்லாடிகள் என்பது தெரிந்ததுதான். ஆனால், அனிமல் பிளானட்டில் ஜெல்லி மீன் ஒன்று செய்த காரியம் பெரும் வியப்பை அளித்தது. கடலின் அடிப்பகுதிக்குச் சென்றதும் தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது. அத்தோடு நில்லாமல் தன் ‘கைகளால்’ சின்னச் சின்னக் கற்களை எடுத்துத் தன் மீது மூடிக்கொள்கிறது. ஓய்வுக்காகக் கற்களின் மீது அமரும் இறாலைக் கபளீகரம் செய்கிறது ஜெல்லி மீன்.

மட்டமான சினிமா ரசனை!

கொனாரக் கோவிலின் கம்பீரத்தை ‘ட்ராவல் விபி’சானலில் அழகாகவே காட்டியிருந்தார்கள். காற்றிடமிருந்து அந்த பிரம்மாண்டமான ஆலயத்தைக் காப்பாற்ற சுற்றிலும் பிரம்மாண்டமான மரங்கள் நடப்பட்டன என்று கூறினார்கள். அந்த ஆலயத்தின் நடன அரங்கு மிகவும் ரசனைக்குரியது. ஆனால் (நிகழ்ச்சிக் குழுவைச் சேர்ந்த) ஓர் இளம் பெண் காலணிகளோடு அந்தக் கோவிலின் பல பகுதிகளில் நடந்ததும், சிற்பங்களைக் காட்டும்போது, அந்தக் காலணிக் கால்களையும் ஃபோகஸ் செய்ததும் ரசனைக்குரியதாக இல்லை.

தவிர்க்க முடியாத கேள்வி

வி.வி.எஸ். லக்ஷ்மண் ஓய்வுபெற்ற சமயத்தில் சச்னின், சேவாக், கம்பீர், ஜாகிர் கான் போன்றோருக்கு பார்ட்டி கொடுத்தார். தோனியை மட்டும் ஏன் அழைக்கவில்லை? அடுத்த இரண்டு டெஸ்ட் மேட்ச்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டும் லக்ஷ்மண் எதிர்பாராத வகையில் ஓய்வு பெற்றதற்கு தோனிதான் காரணம் என்ற பேச்சு எழுந்ததால் அந்த பார்ட்டி குறித்த கேள்வியும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு “நான் தோனியை அழைக்காததால் அவர் வரவில்லை. ஆனால், எனக்கு அவரிடம் எந்தக் கசப்புமில்லை. கடந்த 16 வருடங்களில் நான் பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும், முழுமையான ஈடுபாட்டோடு ஆடிய திருப்தி உண்டு’’ என்றார் லக்ஷ்மண்.

அதுமட்டும் ஏன்?

சமீபத்தில் சன்டே கலாட்டாவில் (சன் டிவி) வெளியான மதுரை முத்து - தேவதர்ஷினி நிகழ்ச்சியில் சென்னையில் வெள்ளத்தின்போது படகில் ஏறித் தப்பிக்கும் இவர்களது நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெற்றன. நடுநடுவே சிரிக்க வைக்கிறார்கள். என்றாலும் நிகழ்ச்சியில் இடம் பெற்ற ஒரு வசனம் சீரியஸாகவே யோசிக்க வைத்தது. “பெட்ரோல் டாங்கில் எடுத்துட்டுப் போற பெட்ரோல் ஒரு சொட்டுகூட சிந்துவதில்லை. ஆனா தண்ணி லாரிகளிலே எடுத்துட்டுப் போற தண்ணீர் மட்டும் கொட்டிக்கிட்டே போகுதே! அது ஏன்?’’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x