Published : 16 Oct 2013 04:20 PM
Last Updated : 16 Oct 2013 04:20 PM

ஒன்றல்ல பல

யானைக்கு மட்டும்தான் தந்தங்கள் உண்டு என பெரும்பாலானோர் நினைத்திருக்கலாம். ஆனால் யானை தவிர வேறு சில விலங்குகளும் தந்தத்துடன் உள்ளன. உதாரணத்துக்குச் சில விலங்குகளைப் பார்க்கலாமா?

மரு

ஆப்பிரிகாவைச் சேர்ந்த மரு என்றழைக்கப்படும் காட்டுப் பன்றியினத்தைச் சேர்ந்த விலங்கிற்கு இரண்டு ஜோடி தந்தங்கள் உண்டு. பார்க்க பயங்கரமாகத் தோன்றினாலும், குணத்தில் மிகவும் சாதுவானவை இவை. புற்களையும் கிழங்குகளையும் மட்டுமே உண்டு வாழும்.

காட்டுப்பன்றி

ஆசியா முழுவதும் காணப்படும் காட்டுப்பன்றிக்கும் தந்தங்கள் உண்டு. பெயர்தான் காட்டுப்பன்றியே தவிர இவை பெயருக்கேற்ற மாதிரி காட்டுத்தனமாக வளர்வதில்லை. சுமாரான உடல் பருமன் கொண்ட இவை நிலத்தில் வேகமாக ஓடும். நீரிலும் சுலபமாக நீந்தும். கண் பார்வையில் அத்தனை கூர்மை இல்லை. மூக்கின் மோப்ப சக்தி, அந்தக் குறையைச் சமன்செய்துவிடுகிறது.

வால்ரஸ்

பனி படந்த ஆர்ட்டிக் பகுதியில் காணப்படும் வால்ரஸ் எனப்படும் பாலூட்டி வகையைச் சார்ந்த விலங்கிற்கும் தந்தம் உண்டு. ஆண், பெண் இரண்டுமே தந்தத்துடன் காணப்படும். பனிப்பாறைகள் மீது நடப்பதற்கும், துளையிடுவதற்கும் இவை தந்தங்களைத்தான் நம்பியிருக்கின்றன. ஆண் வால்ரஸ், தன் அதிகார எல்லையை விரிவுபடுத்த தந்தத்தை வைத்துத்தான் மற்ற விலங்குகளை அடக்கிவைக்குமாம். இவற்றின் தந்தம் சுமார் மூன்று அடி வரை வளரும்.

நர்வால்

ஆர்ட்டிக் கடலோரங்களிலும் அதையொட்டிய நதிகளிலும் காணப்படும் யுனிகார்ன் வகையைச் சேர்ந்த விலங்கு, கூர்மையான தந்தம் கொண்டது. ஆண் விலங்கிற்குக் கிட்டத்தட்ட 8 அடி நீளம் வரை இந்தத் தந்தம் வளரும். இத்தனை பெரிய தந்தம் எதற்குப் பயன்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நீரின் அளவைக் கணக்கிடுவதற்கான சென்சார்போலச் செயல்படலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சரியான காரணம் தெரியவில்லை. பெண் விலங்கிற்கும் தந்தம் உண்டு என்றாலும் இத்தனை நீளம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x