Last Updated : 02 Jun, 2017 10:01 AM

 

Published : 02 Jun 2017 10:01 AM
Last Updated : 02 Jun 2017 10:01 AM

அஞ்சலி: ரோஜர் மூர் - அவர் கில்லர்.. நான் லவ்வர்!

‘ஆக்டோபஸி’ திரைப்படப் படப்பிடிப்பின்போதுதான் அவரை நான் முதல்முறையாகச் சந்தித்தேன். நான் நடித்த பெரிய அளவிலான முதல் திரைப்படமும் அதுதான். அப்படத்தின் தயாரிப்பாளரின் மகளும் எனது இனிய தோழியுமான பார்பரா பிரக்கோலிதான் முதல் நாள் படப்பிடிப்புக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கிருந்த யாரையும் எனக்குத் தெரியாது! நான் ஸ்டூடியோவின் பின்பகுதியில் இருந்தேன்.

அவர்கள் ஒரு காட்சியை எடுத்துக்கொண்டிருந்தபோது, ரோஜர் மூர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, என் அறைக்கு வந்தார். எனக்குப் படபடப்பாகிவிட்டது. “நான் ரோஜர் மூர்… நீங்கள் எங்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டது எங்களுக்குக் கவுரவத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது” என்று கூறினார். அந்த அறிமுகமே என்னுள் சகஜவுணர்வை ஏற்படுத்திவிட்டது. இந்த மனிதருடனான அற்புதமான நட்பு அப்படித்தான் தொடங்கியது.

அவரை முதலில் பார்த்தபோது அவர் நடந்துகொண்டது எனது நினைவில் என்றென்றைக்குமாகப் பதிந்திருக்கும். ஏனெனில் அப்போது திரையுலகுக்கு நான் முற்றிலும் புதியவன். ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் பலமுறை பார்த்து, வியந்து வளர்ந்த சென்னைக்காரனின் அறைக்குள் பாண்டாக நடிப்பவர் திடீரென்று நுழைந்தால்.., அதுவும் அவரோடு சேர்ந்து படத்தில் நடிக்கப்போகிறீர்கள் என்றால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! படப்பிடிப்புகளின்போதும், ஸ்டண்ட் கலைஞர்கள் சில விஷயங்களைச் செய்ய ஆயத்தமாகும்போது, “வேண்டாம்… வேண்டாம்… விஜயும் நானுமே செய்துவிடுவோம். எங்களால் அதைக் கையாள முடியும்” என்று ரோஜர் கூறிவிடுவார்.

அதிர்ஷ்டம் அடித்தது

என்னை முதல்முறையாகப் பார்த்தபோது, “நீங்கள் ஆடிய முக்கியமான மேட்சுகள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்” என்று கூறினார். அவற்றை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார். விம்பிள்டன் போட்டிக்கும் வந்திருந்தார். பிரபலங்கள் விளையாடும் நிகழ்ச்சியை நாங்கள் நடத்தியபோது நான் அவருடன் அவ்வப்போது டென்னிஸ் ஆடியிருக்கிறேன். அவருக்கு மிகவும் விருப்பமான விளையாட்டு அது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பிரமாதமான விளையாட்டாக டென்னிஸ் இருந்தது. ரோஜர் மூரின் சமகால பாண்ட் நடிகரான சீன் கானரி உட்பட எல்லாரும் அந்த விளையாட்டைத் தொடர்ந்து ரசித்துவந்தனர். நடிகர்கள் சார்ல்டன் ஹெஸ்டன் முதல் ஜான் ஃபோர்சீத் வரை அனைவருமே எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் மாபெரும் சாதனையாளர்தானே.

அவருடன் நான் கழித்த மொத்த நேரமும் அற்புதமான நகைச்சுவையோடு கழியும். சின்னச் சின்னத் துணுக்குகள், மற்ற படங்களின் கதைகள், நடிகர்கள் மற்றும் பயணங்களைப் பற்றிய கதைகள் என அவர் அற்புதமான கதைசொல்லியாக இருந்தார். கேலியும் நகைச்சுவையும் தொனிக்கப் பேசுபவர். ஜேம்ஸ் பாண்டாக அவர் நடிப்பதை என்னால் நம்பவே இயலவில்லை என்று அவரிடம் அடிக்கடி சொல்வேன். ஒரு நகைச்சுவையைச் சொல்லிவிட்டுத் தானே சிரிக்கும் நபர் அல்ல அவர். அவர் ஒரு துணுக்கைச் சொல்வார். மற்றவர்கள் எல்லாரும் சிரிப்பார்கள். அவர் ஜோக்குகள் என்று சொல்லாத விஷயங்களிலும் வேடிக்கை இருக்கும்.

நாங்கள் லண்டனில் ஃபைன்வுட் ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் இருந்தபோது கிறிஸ்டோபர் ரீவ் ‘சூப்பர் மேன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். ஜேம்ஸ் பாண்ட், சூப்பர் மேன் ஆகிய இருவருடனும் அமர்ந்து, மதிய உணவு உண்ட அதிர்ஷ்டம் எனக்கு அடித்தது. அப்போது ட்விட்டர் கிடையாது. இன்ஸ்டாகிராம் இல்லை. அவையெல்லாம் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நன்றாகவே கற்பனை செய்துபார்க்க முடிகிறது.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஜேம்ஸ் பாண்டுடன் ஒவ்வொரு விதமான பிணைப்பு இருந்திருக்கிறது. ‘ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர்களை விட, அதிகமான பேர் நிலவுக்குச் சென்றுவிட்டனர்’என்று பியர்ஸ் பிரோஸ்னன் சொல்வதைப் போல, அந்தக் கதாபாத்திரம் திரையில் தோன்றி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. காலத்தின் சோதனைகளைத் தாண்டிய மிகச் சிறப்பான கதாபாத்திரம் அது. சீன் கானரி ஆறு படங்களைச் செய்த பின்னர் அவரைத் தொடர்வது மிகச் சிரமமான சாத்தியமாக இருந்தது. ரோஜர் மூர் வந்தார். ஏழு படங்கள் செய்து பெரும் வெற்றியும் பெற்றது நம்ப முடியாத சாதனையாக பாண்ட் பட வரலாற்றில் பதிவாகிவிட்டது.

ரோஜர் என்னும் காதலர்

நான் சந்தித்தபோதும் சேர்ந்து பணியாற்றியபோதும் சீன் கானரி அடைந்த பெரும் வெற்றிக்குப் பிறகு ரோஜர் மூர் தனது கதாபாத்திரத்தைத் தனித்துவமுள்ளதாக எப்படி மாற்றிக் காட்டினார் என்பதை என்னால் உணர முடிந்தது. சீன் கானரிக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்று ரோஜரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. ரோஜர் சொன்னார்: “சீன் கானரி கில்லர்… நான் லவ்வர்”.

தொடக்க ஆண்டுகளாக இருக்க வேண்டும். எழுத்தாளர் இயன் பிளெமிங், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு ரோஜர் மூரைத்தான் முதலில் விரும்பியிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளரின் தேர்வோ சீன் கானரி. அதற்கான காரணம் என்னவென்று என்னால் துல்லியமாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், இயன் பிளெமிங், ரோஜர் மூரிடம் இருந்த ஆங்கிலேயனை பாண்ட் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக நினைத்திருக்க வேண்டும். சீன் கானரிக்குப் பிறகு அதுதான் நேர்ந்தது. ரோஜர் மூர் தன்னை ஒருபோதும் தீவிரமாக எடுத்துக்கொண்டதேயில்லை என்பதுதான் அவரிடம் இருந்த மகத்தான விஷயம். எப்போதும் இறுக்கமாகவே உள்ளவர்கள் தன்னம்பிக்கை குறைவானவர்களாக இருப்பார்கள். ரோஜர் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. அவர் எப்போதும் அவராகவே இருந்தார்.

சீன் கானரி, ரோஜர் மூர் இருவருமே தங்கள் கதாபாத்திரங்களை அற்புதமாகவும் முழுமையாகவும் செய்தார்கள். சுவாரசியமாகவும் வித்தியாசப்படுத்தியும் காண்பித்தனர். இரண்டுக்கும் வெற்றியும் கிடைத்தது. பியர்ஸ் பிரோஸ்னனையும் டேனியல் க்ரீக்கையும் ஒப்பிடுபவர்களும் உண்டு.

இணைந்து பணிபுரிந்தோம்

‘ஆக்டோபஸி’ திரைப்படத்துக்குப் பிறகு கொஞ்சம் காலம் தொடர்பில் இருந்தோம். ரோஜர் மூர், யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராகப் பெரிய பொறுப்பை ஏற்றார். நான் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதுவராக கோஃபி அனனால் நியமிக்கப்பட்டேன். ஏழு ஆண்டுகள் நாங்கள் ஐ.நா. சபை நிகழ்ச்சிகளில் சேர்ந்து பணியாற்றினோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பெவர்லி ஹில்ஸில் உள்ள உணவு விடுதியில் ரோஜர் மூரைக் கடைசியாகப் பார்த்தேன். அவர் அங்கே இருப்பது எனக்குத் தெரியாது. தனது மனைவியுடன் வந்திருந்தார். அவரை வாழ்த்தச் சென்றபோது எழுந்து நின்று என்னைத் தழுவிக்கொண்டார். மிக மிக நீண்ட தழுவல் அது. சிறிது நேரத்துக்கு என்னை அவர் போக விடவேயில்லை.

- ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x