Last Updated : 16 Aug, 2016 11:17 AM

 

Published : 16 Aug 2016 11:17 AM
Last Updated : 16 Aug 2016 11:17 AM

ஆங்கிலம் அறிவோமே - 123: யேமனுக்கு எதிரி யார்?

தொடர்ந்து பல வாசகர்கள், “Will என்பதை எப்போது பயன்படுத்த வேண்டும்? Shall என்பதை எப்போது பயன்படுத்த வேண்டும்?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக I, we ஆகியவற்றுடன் shall இடம்பெறும். மற்றபடி he, she, it, they, you ஆகியவற்றுடன் will பயன்படுத்தப்படுகிறது.

சில காரணங்களால் மேலே கூறிய விதி அவ்வப்போது மீறப்படுகிறது. Will என்பது அழுத்தம் குறைவானது. அதாவது less formal. “Have a nice week end” என்று யாராவது சொன்னால் “I shall try” என்று நீங்கள் பதிலளித்தால் கேட்பவருக்கு என்னவோ போல ஆகிவிடும். I will try என்பது இயல்பானதாக இருக்கும்.

சட்டப் பயன்பாடுகளில் shall என்பது தனி இடம் பெறுகிறது. முக்கியமாக மூன்றாம் நபர் (he, she என்பதுபோல) தொடர்பான வாக்கியங்களில் shall பயன்படுத்தப்படுகிறது. The Lessee shall remain the sole occupant of the house.

வருங்காலத்தில் எதையாவது செய்வதாக நீங்கள் அறிவித்தால் அப்போது will என்பதைப் பயன்படுத்தலாம். I will stop smoking. That box looks heavy: I will carry it for you.

ஏதாவது ஆலோசனை அல்லது அனுமதியை நீங்கள் கேட்கும்போது shall என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். Shall I open the door? Shall we leave now?

“Seeing என்கிற வார்த்தையே கிடையாது என்கிறார் என் நண்பர். ஆனால் இந்த வார்த்தையைப் பார்த்ததாக எனக்கு ஒரு ஞாபகம். தெளிவு உண்டாக்குங்கள்’’ என்று கேட்டிருக்கிறார் ஒருவர்.

Gerund என்பதை அறிந்துகொள் வதற்கான காலம் கனிந்துவிட்டது என்பதை இவரது கேள்வி உணர்த்துகிறது.

See, hear, want போன்ற சில வார்த்தைகளை present tense-ல் பயன்படுத் தினாலும், present continuous tense-ல் பயன்படுத்துவதில்லை. அதாவது I am seeing என்று கூறக் கூடாது. We are thinking என்று கூறக் கூடாது. I see. We think.

Gerunds எனப்படும் வார்த்தைகள் verbs-ஐக் கொண்டு உருவானவை. ஆனால் அவை nouns போல செயல்படுகின்றன.

இந்த வகை வார்த்தைகள் verb-களுடன் ing இணைக்கப்பட்டே காணப்படுகின்றன.

1.Reading helps you learn English.

2.He enjoys not working.

3.Barani avoided doing his math assignment.

4.Our taking this position should not bother you.

இந்த வாக்கியங்களில் reading, working, doing, taking ஆகியவை gerunds.

கோக்கோ என்பதன் ஆங்கில வடிவம் எது? Cocoa? அல்லது Cacao?

நம்மில் பலரும் cocoa மட்டுமே சரியான வார்த்தை என்று எண்ணியிருப்போம்.

ஆனால் சாக்லெட்டின் முக்கியப் பொருளான கோக்கோ மேலே குறிப்பிட்ட இரண்டு விதமாகவும் குறிப்பிடப்படுகிறது. கோக்கோ மரத்தின் தாவரவியல் பெயர் Theobroma cacao. இதன் காரணமாக கோக்கோவை cacao என்றும் குறிப்பிடுகிறார்கள்.

Sit here என்பதை passive voice ஆக மாற்ற முடியுமா? என்று வினா எழுப்பியிருக்கிறார் ஒரு நண்பர்.

Sit here என்பது you sit here என்பதன் மறுவடிவம்தான். ஆனாலும்கூட present tense-ல் உள்ள கட்டளைகளை passive voice-க்கு மாற்றுவது கடினம்.

வேண்டுமானால் Be seated here என்று கூறலாம். இதே போல Don’t drink என்பதை You are requested not to drink என்று மாற்றலாம்.

ஒருவிதத்தில் Yemen நாட்டுக்கு அதுவேதான் எதிரி. எப்படிச் சொல்லுங்கள் பார்க்கலாம். அந்த நாட்டின் பெயரிலுள்ள எழுத்துகளை வேறு வரிசையில் அமைத்தால் enemy என்ற வார்த்தை வருகிறது!

கீழே சில வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேன். அவற்றின் ஆங்கில வார்த்தைகளிலுள்ள எழுத்துகளை வேறு வரிசையில் மாற்றி அமைத்தால் ஒரு நாட்டின் பெயர் வரும். ஒவ்வொரு வார்த்தையின் இறுதியிலும் அடைப்புக்குள் உள்ள எண்கள் அந்த நாட்டின் ஆங்கிலப் பெயரிலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

1. வலிகள் (5)

2. ஆட்சிசெய்தல் (5)

3. விமானம் (5)

4. வெறிவிலங்குக்கடி நோய் (6)

5. கூட (4)

6. கடலுக்குள் (7)

7. கட்டாயம் திட்டமிடு (6)

8. பரிசுத்தமான (4)

9. தொடர்கதை (6)

10. ஒன்றுமில்லை அன்பே (7)

விடைகள் அடுத்த வாரம்

முன்பு நாம் எழுதிய விடுப்பு பற்றிய விளக்கத்தில் unable to என்ற பயன்பாடு இருந்தது. இது குறித்து ஒரு வாசகர் மேலும் ஒரு விளக்கத்தைக் கோரியிருக்கிறார். ஒரு வாக்கியத்தில் ‘unable to’ என்ற வார்த்தைக்குப் பிறகு neither… nor ஆகியவை இடம் பெறலாமா? என்று கேட்டிருக்கிறார்.

இலக்கணப்படி தவறில்லை. ஆனால் கருத்தில் குழப்பம் வரும்.

“I will be unable to attend neither the party nor the seminar due to tight work schedule” இப்படி எழுதினால் நீங்கள் சொல்ல நினைப்பது என்ன? “நான் ரொம்ப பிசி. எனவே party, seminar ஆகிய இரண்டுக்குமே என்னால் வர முடியாது” என்பதுதானே. ஆனால் மேலே உள்ள வாக்கியப்படி நீங்கள் இரண்டுக்குமே செல்ல முடியும் என்று அர்த்தம் வந்துவிடுகிறது. எனவே அப்படியெல்லாம் எழுதி, சிக்கலாக்கிக்கொள்ளாதீர்கள். “I will be unable to attend both the party and the seminar due to tight work schedule” என்று குறிப்பிடுங்கள். (ஆனால் ஒரு சிலர் குதர்க்கமாக “இரண்டுக்கும்தானே வர முடியாது? அப்படியானால் ஏதாவது ஒன்றுக்கு வரலாமே?” என்று கேள்வி எழுப்புவார்கள். “I will be unable to attend the party as well as the seminar due to my tight work schedule” என்று குறிப்பிடுங்கள்).

இன்னொரு வாசகர் ‘17-10-2016 to 21-10-2016 விடுப்பு என்றால் நான்கு நாட்கள் விடுப்பு அல்ல, ஐந்து நாட்கள்’ என்று கனகச்சிதமாக என் கணிதப் பிழையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். நன்றி.

சிப்ஸ்

A silly person என்றால்?

முட்டாள். அற்பமான என்ற அர்த்தத்திலும் silly பயன்படுத்தப்படுகிறது.

Summary தெரியும். Summery என்றால்?

அது கோடைக்காலத்தோடு தொடர்புடையது. If the weather is summery, you sweat a lot.

இந்த வார்த்தைகளுக்குப் பின் ‘!’ போட்டிருப்பது சரிதானே Wow! Damn! Oh!

Enough! நீங்கள் குறிப்பிட்டதெல்லாம் சரிதான். ஆனால் அலுவலகத் தகவல் தொடர்பில் இப்படிப் பயன்படுத்துவதில்லை.

ஆசிரியர்

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x